சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை செயலிழக்க செய்ய சதி: ரஞ்சன் கோகாய் வேதனை

பதிவு செய்த நாள் : 20 ஏப்ரல் 2019 10:55

புதுடில்லி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகாரளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஞ்சன் கோகாய், நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த ஆண்டு பதவியேற்றுக்கொண்டார். அவர்மீது, உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் புகாரளித்துள்ளார். தலைமை நீதிபதி தன்னை இருமுறை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான விடுமுறைக் கால அவசர அமர்வு இன்று கூடியது. அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இதை நீதிபதிகள் அருண் மிஷ்ரா, சஞ்சீவ் கண்ணா அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. இன்றைய தினம், விசாரணை நடக்கும் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை  மறுத்து பேசினார். அவர் பேசியதாவது:

”உச்சநீதிமன்றத்தின் முன்னாள் இளநிலை பெண் உதவியாளர் என் மீது கூறிய பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது. என் மீது கூறப்படும் இந்த புகார்கள் நம்ப முடியாதவை. 20 ஆண்டு கால சுயநலமில்லா சேவையில் உள்ள என் வங்கிக் கணக்கில் 6.80 லட்சம் தொகை மட்டுமே உள்ளது. பணத்தை வைத்து என்னை கவிழ்க்க முடியாததால், வேறு காரணிகளைக் கண்டுபிடிக்க முயற்சித்து, இதுபோன்ற பொய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 20 ஆண்டுகள் நான் செய்துள்ள சேவைக்கான அங்கீகாரம் இதுதான். நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று வேதனை தெரிவித்தார்.

“அடுத்த வாரம் மிகவும் முக்கியமான சில வழக்குகளை நான் விசாரிக்க உள்ளதால் என் மீது இந்த பாலியல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு நான் ஒருபோதும் அஞ்சமாட்டேன். எனது பணிக்காலம் முடியும் வரை நான் நேர்மையாக செயல்படுவேன்”

”என் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பெண்ணின் பின்னால் பெரிய சக்திகள் உள்ளன. குற்றப்பிண்ணனியில் உள்ள அந்த பெண்ணுக்கு எதிராக 2 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த பெண் ஊழியர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். என்னிடம் இருந்து பணம் பறிக்க நினைத்து முடியாததால் இதுபான்ற புகாரை அவர் அளித்துள்ளார்” என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.

உச்சநீதிமன்ற பொதுச் செயலாளர் சஞ்சீவ் சுதாகர் கல்கவோன்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

”இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இது முற்றிலும் பொய். நீதித்துறையின் சுதந்திரத்தை ஊடகங்கள் பாதுகாக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் படம் வெளியீடு, ராகுல் மீதான அவமதிப்பு வழக்கு, தமிழகத்தில் பணப் பறிமுதல் தொடர்பான வழக்கை அடுத்த வாரம் ரஞ்சன் கோகாய் விசாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.