அரசியல் மேடை: மீண்டும் பாஜ., ஆட்சியா...!

பதிவு செய்த நாள் : 20 ஏப்ரல் 2019

இந்திய அளவிலான பார்லிமென்ட் பொதுத்தேர்தலில் 2 கட்ட வாக்குபதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 7 கட்ட வாக்குபதிவுகள் நடைபெற்று முடிந்து மே மாதம் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதன் பிறகு தான் மத்தியில் யாருடைய தலைமையில் ஆட்சி அமையப்போகிறது என்பது தெரியவரும். மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ., ஆட்சி அமையுமா... ராகுல் தலைமையிலான காங்., ஆட்சி அமையுமா... மாநில கட்சிகளின் பங்களிப்புடன் கூடிய கூட்டணி ஆட்சி அமையுமா என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும்.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாஜ., 282 தொகுதிகளில் தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற்ற போதும் தம்மோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த அனைத்து கட்சிகளுக்கும் அமைச்சரவையில் மோடி இடமளித்திருந்தார். அந்த தேர்தலில் பாஜ., தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி 336 இடங்களை கைப்பற்றியிருந்தது. இந்தியாவின் 10 பெரிய மாநிலங்களில் 7 மாநிலங்களில் பாஜ., மிகப்பெரும்பாண்மையான இடங்களை வென்றிருந்தது. குறிப்பாக, உத்தரபிரதேசம், பீகார், குஜராத், ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆகிய மாநிலங்களில் பாஜ., கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி இருந்தது. ஒட்டுமொத்தமாக இந்தியா முழுமைக்குமான 543 தொகுதிகளில் 273 மக்களவை தொகுதிகள் இந்த மாநிலங்களில் அடங்கும்.

இந்தியா முழுவதுமே இப்போது தேசிய கட்சிகளான பாஜ., காங்., ஆகியவற்றில் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது. குறிப்பாக, நுாற்றாண்டு கண்ட காங்., கட்சி தேசிய அளவிலும் பல்வேறு மாநிலங்களிலும் மக்களின் செல்வாக்கை இழந்து வருகிறது. அதே நேரத்தில் மாநில கட்சிகளின் ஆதிக்கம் ஆங்காங்கே அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தான் பாஜ.,வும் காங்., கட்சியும் மாநில கட்சிகளுக்கு அதிக இடங்களை விட்டுக்கொடுத்து விட்டு குறைந்த இடங்களிலேயே போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

பாஜ.,வை பொறுத்தவரையில் கடந்த தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியது. இதனால், பல்வேறு வட மாநிலங்களில் அதிக இடங்களை பெறுவதற்கு அது காரணமாக அமைந்தது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜ., போதிய அளவில் வெற்றி பெற வில்லை. பாஜ., தனித்து 282 இடங்களில் வெற்றி பெற்றது.

அக்கூட்டணி இடம்பெற்றிருந்த சிவசேனா 18, தெலுங்குதேசம் 16, லோக் ஜனசக்தி 6, சிரோன்மணி அகாலிதளம்-4, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி-3, அப்னாதளம்-2, பாமக-1, ஸ்வாபிமான் பக்ஷா-1, என்.ஆர். காங்கிரஸ்-1, நாகா மக்கள் முன்னணி-1, தேசிய மக்கள் கட்சி-1 ஆகிய இடங்களை கைப்பற்றின. ஆனால், இன்று பாஜ கூட்டணியில் இருந்த தெலுங்குதேசம், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி ஆகியன, கூட்டணி உறவை முறித்துக் கொண்டன.

அதனால், தெலுங்கு தேசம் ஆந்திராவில் தனித்தும், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி பீகாரில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. கடந்த தேர்தலில் வெற்றியை தீர்மானித்த மேற்கண்ட 10 பெரிய மாநிலங்களில் அதிகமான தொகுதிகளை பாஜ கூட்டணி இழக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேற்கண்ட மாநிலங்களில் பாஜ பெரும்பான்மை பலம் பெற வேண்டும் என்றால் குறைந்தது இங்கு 196 தொகுதிகளையாவது கைப்பற்றியாக வேண்டும். ஆனால், அங்குள்ள சூழ்நிலை அப்படி இல்லை. கடந்தாண்டு டிசம்பரில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் பாஜ தோல்வியுற்று  மாநிலத்தில் ஆட்சியை இழந்து உள்ளது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் பாஜ 27 தொகுதிகளை கைப்பற்றியது.

ஆனால், இந்தத் தேர்தலில் பாஜ தனது வெற்றிகளை தக்கவைக்குமா என்பது சந்தேகத்திற்கு இடமாகத்தான் உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜ கட்சி 71 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது.

ஆனால் இந்த முறை அங்கு கூட்டணி நிலவரங்கள்  மாறிவிட்டன. முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளன. காங்கிரஸ் தனித்து விடப்பட்டு உள்ளது. மாயாவதி - அகிலேஷ் கூட்டணி ஆளும் பாஜவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன.  

பீகாரில் கடந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து போட்டியிட்ட பாஜ, இந்த தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமாருடன் கூட்டணி வைத்து களம் காணுகிறது. மகாராஷ்டிராவில் பாஜ - சிவசேனா கூட்டணி இந்த தேர்தலிலும் தொடர்ந்தாலும், கடந்த முறை வென்ற தொகுதிகளை மீண்டும் தக்கவைக்க முடியாத சூழ்நிலையே நிலவுகிறது. மேலும், கடந்த தேர்தலில் ராஜஸ்தான் (25), குஜராத் (26), டெல்லி (7), இமாச்சலப் பிரதேசம் (4), கோவா (2), உத்தரகாண்ட் (5) என 6 மாநிலங்களில் மட்டும் மொத்தமுள்ள 69 தொகுதிகளையும் பாஜ கைப்பற்றியது.

மேற்கண்ட மாநிலங்களில் டில்லி, ராஜஸ்தான் தவிர மற்ற மாநிலங்களில் பாஜ ஆட்சிதான் உள்ளது.

இந்நிலையில், ‘2019 மக்களவைத்  தேர்தலில் தேசிய அளவில் பாஜவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் முடிவு செய்தாலும், எதிர்க்கட்சிகள் இடையே கூட்டணி குறித்த தெளிவான முடிவுகள் எடுக்கப்படாததால், பாஜவுக்கு எதிராக திரண்ட காங்கிரஸ், ஆம்ஆத்மி, கம்யூ., திரிணாமுல், தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் தனித்தே களம் காணுகின்றன. ‘பிரதமர் வேட்பாளர் யார் என்ற ஆலோசனை, பிரிவினையை ஏற்படுத்தி, கூட்டணி யில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால்  தேர்தலுக்கு பிறகு யார் பிரதமராக வேண்டும் என்பதை தீர்மானித்து கொள்ளலாம்’ என்ற முடிவுக்கு எதிர்கட்சிகள் வந்துள்ளன. இது பாஜ.,வுக்கு சாதகமாக அமைந்திருப்பதாகவே தெரிகிறது.

மீண்டும் ஆட்சி அமைத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜ., இம்முறை நாடு முழுவதும் சுமார் 440 வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. இதில் பாதி அளவு வெற்றி கிடைத்தாலும் கூட பாஜ., தலைமையில் கூட்டணி ஆட்சியை மீண்டும் அமைத்துவிடலாம் என அக்கட்சி கருதுகிறது.

காங்., கட்சி தனிப்பெரும் பான்மையை பெற முடியாத சூழ்நிலை, பல்வேறு மாநிலங்களில் பாஜ., அணிக்கு எதிராக உள்ள கட்சிகள் ஒருங்கிணையாமல் சிதறி கிடப்பது போன்ற காரணங்களால் மீண்டும் பாஜ., ஆட்சி அமைப்பதற்குரிய வாய்ப்பு இருப்பதாக வட மாநிலங்களில் இருந்து வரும் ஒரு சில கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

கடந்த 1970கள் மற்றும் 90களில் நிலையான ஆட்சி இல்லாமல் பல்வேறு பிரதமர்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் மத்தியில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்கிற எண்ணமும் மக்கள் மனதில் இருப்பதால் பாஜ.,வுக்கு இம்முறையும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே அக்கட்சியினரும் நம்புகின்றனர்.