துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 25

பதிவு செய்த நாள் : 20 ஏப்ரல் 2019

விடுதலை போராட்ட தியாகி திருப்பூர் குமரன்

பாரத தேசம் அந்நியர் ஆதிக்கத்தில் இருந்து விடுபடவேண்டும், மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழவேண்டும் என்கிற எண்ணத்தோடு பல்லாயிரக்கணக்கானோர் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட பல தியாகிகளின் வரலாறு என்பது பெரிய அளவில் பதிவு செய்யப்படவில்லை. எனவே, அதுபற்றிய விவரங்களை சேகரித்து தேச விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்ட தியாகிகளை இன்றைய இளம் தலைமுறையினருக்கு அடையாளப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த தொடர் எழுதப்படுகிறது.

இந்த வாரம் தேச விடுதலைக்காக தன் உயிரை நீத்த கொடிகாத்த குமரன் என்று நாடு கொண்டாடும் திருப்பூர் குமரன் பற்றிய பதிவுகளை காண்போம்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை நகரத்திற்கு அருகேயுள்ள மேலப்பாளையம் என்னும் குக்கிராமத்தில் 1904ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி நாச்சிமுத்து – கருப்பாயி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர்தான் குமரன். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பைக்கூட முழுமையாக தொடரமுடியாத அளவில் ஆரம்பப் பள்ளியிலேயே தமது படிப்பை முடித்துக்கொண்டார். தம்முடைய தந்தைக்கு உதவியாக கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவந்த குமரன், 19ஆவது வயதிலேயே திருமணம் செய்துகொண்டார்.

கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காமல் வேலை தேடி திருப்பூர் நகருக்கு சென்ற குமரன், அங்கு தனியார் மில் ஒன்றில் எடைபோடும் பணியில் சேர்ந்தார். இளம் வயதிலேயே தேசிய சிந்தனையும் விடுதலை வேட்கையும் நிரம்பியவராக காணப்பட்ட குமரன், அப்போதே அந்த பகுதியில் நடைபெறும் சுதந்திர போராட்டங்களில் கலந்துகொள்வார்.

காந்தியக் கொள்கையில் அதிக ஈடுபாடுகொண்ட குமரன், தேச விடுதலைக்காக மகாத்மா காந்தி அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொள்வார். ஏழ்மையும் வறுமையும் தம்மை வாட்டியபோதும், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதை தமது கடமைகளில் ஒன்றாக கருதியவர் திருப்பூர் குமரன்.

1932ஆம் ஆண்டு, சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கியபோது, தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடைபெற்றது. அந்த நேரத்தில் திருப்பூர் நகரத்தில் தேசபந்து இளைஞர் மன்றம் என்ற அமைப்பை சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆண்டு, ஜனவரி 10ஆம் தேதி, கையில் மூவர்ண தேசிய கொடியை ஏந்தி தேசபந்து இளைஞர் மன்றத்தின் தொண்டர் படைக்கு தலைமையேற்று திருப்பூர் குமரன் மறியலுக்காக அணிவகுத்துச் சென்றபோது, காவலர்களின் தாக்குதலுக்கு ஆளானார்.

குமரனை மண்டைப் பிளந்து ரத்தம் பீறிட்டு வெளியேறும் அளவிற்கு கடுமையாக தாக்கிய காவலர்கள், அவருடைய கைகளில் இருந்த தேசிய கொடியை பறிக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், கடுமையான தாக்குதலையும் பொருட்படுத்தாமல், தேசிய கொடியை கைகளில் இறுக பற்றியபடி தரையில் மயங்கி சாய்ந்திருக்கிறார் குமரன்.

உடனே, அவரோடு வந்த இளைஞர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் ஜனவரி 11ஆம் தேதி அந்த தியாகி உயிரிழந்தார்.

இதனால்தான், இன்றளவும் திருப்பூர் குமரனை இந்த தேசம் கொடிகாத்த குமரன் என்று அழைக்கின்றது.

குமரனின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான தேச பக்தர்கள் கலந்துகொண்டனர். குடும்ப வழக்கப்படி அவருடைய தம்பி ஆறுமுகம் என்பவர் கொள்ளி வைத்தாலும், வந்திருந்த தேச பக்தர்கள் திருப்பூர் குமரன், இந்த தேசத்தின் பொதுச் சொத்து என்று கூறி, தியாகி ராஜகோபால ஐயர், விடுதலை போராட்ட வீரர்கள் மாணிக்கம் செட்டியார், வெங்கடாச்சல பிள்ளை உள்ளிட்ட பலரும் இறுதிச் சடங்கில் பங்கேற்று குமரன் உடலுக்கு கொள்ளி வைத்தனர்.

திருப்பூர் குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள், திருப்பூர் நகரத்திற்கு வருகைத்தந்த அண்ணல் மகாத்மா காந்தி, அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் கூறிச்சென்றுள்ளார். பெருந்தலைவர் காமராஜர் உயிருடன் இருந்தவரையிலும் திருப்பூர் குமரன் குடும்பத்தினரை அவ்வப்போது சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார்.

14 வயதில் திருப்பூர் குமரனை கைப்பிடித்த அவரது மனைவி ராமாயி அம்மாள், 1998ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உயிர் துறந்தார். திருப்பூர் குமரனின் நூறாவது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் இந்திய அரசாங்கம் சிறப்பு நினைவு தபால் தலையை வெளியிட்டது.

திருப்பூர் குமரனின் தியாகத்தை போற்றும் வகையில் திருப்பூர் நகரத்தில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்தது. இங்கு, நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.