அமமுக கடைசி வரை குழுவாக மட்டுமே இருக்கும்- அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

பதிவு செய்த நாள் : 19 ஏப்ரல் 2019 14:39

சென்னை,

அமமுக கடைசி வரை குழுவாக மட்டுமே இருக்கும் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தெரிவித்துள்ளார்.

அமமுக கட்சியினர் நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை அசோக் நகரில் அமமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய உள்ளதாக முடிவு எடுக்கப்பட்டது. மேலும், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரான டிடிவி. தினகரன், அக்கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் எனவும் அக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார்,

ஒரு குழுவாகப் பிரிந்து அதற்கு அமமுக என பெயர் வைத்துள்ளனர். அவர்களுக்குத் தேர்தல் ஆணையம் சின்னம் கொடுத்துள்ளது. கட்சியை யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். ஆனால், சட்டசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறைந்தபட்சம் 6 சதவீத வாக்காளர்கள் இருந்தால் தான் அது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்கும்.

அமமுக 1 அல்லது 2 சதவீத வாக்குகள் பெறலாம். அதனால், அந்தக் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்காது.

அதனால், கடைசிவரை அமமுக குழுவாகத்தான் இருக்கும் என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.