மின் வாகன கண்டுபிடிப்புகளை காப்பியடிக்கலாம்!

பதிவு செய்த நாள் : 21 ஏப்ரல் 2019

முதலில் டெஸ்லா, இப்போது டொயோட்டா. மின்சார கார்களை பரவலாக்க வேண்டும் என்ற நோக்கில், டொயோட்டா, தன் பதிவு செய்த கண்டுபிடிப்புகளை, இனி எவரும் பயன்படுத்தலாம் என்று அண்மையில் அறிவித்துள்ளது. பெட்ரோலியம் அல்லாத எரிபொருளில் ஓடும் கார்களை தயாரிக்க வேண்டும் என, 20 ஆண்டுகளாக டொயோட்டா ஆராய்ச்சி செய்து வருகிறது. இதன் விளைவாக, பாதி மின்சாரம், மீதி பெட்ரோலியத்தில் ஓடும், ‘ஹைப்ரிட்’ கார் இயந்திரங்கள், எரிபொருள் கலன் எனப்படும், ‘பியூயல் செல்’ இயந்திரங்கள் என, 23 ஆயித்திற்கும் மேல் புதுமைகளை டொயோட்டா பதிவு செய்துள்ளது. இவை அனைத்தையும் எவரும் கட்டணமின்றி பயன்படுத்தலாம் என, டொயோட்டா அறிவித்துள்ளது. சிக்கலான வரைபடங்கள், சமன்பாடுகளைக் கொண்ட அந்தக் கண்டுபிடிப்புகள் புரியாவிட்டால், சிறிது கட்டணம் வாங்கி ஆலோசனை தரவும் டொயோட்டா நிர்வாகம் தயாராக உள்ளது. இருந்தாலும், முழுக்க முழுக்க மின்சாரத்தில் ஓடும் அதன் கார்கள் பற்றிய விவரங்களை, டொயோட்டா இலவசமாக தர முன்வரவில்லை. ஆனால், டெஸ்லா மோட்டார்சின் அதிபர் எலான் மஸ்க், ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதைச் செய்துவிட்டார்.

மின்சார வாகனத்தின் பயன்பாடு உலகெங்கும் பரவ வேண்டும் என்பதால், தங்கள் கண்டுபிடிப்புகளைக் கூட எவரும் அனுமதியோ, கட்டணமோ இன்றி பயன்படுத்தலாம் என, அறிவித்தார். ஓசூர், கோவை, சென்னை வாகனப் பொறியாளர்களுக்கு இது தெரியுமா?