அழகற்ற ராஜகுமாரி!

பதிவு செய்த நாள் : 19 ஏப்ரல் 2019

வெற்றிமாறன் என்ற மன்னன், நீதி தவறாது மரகத நாட்டை ஆண்டு வந்தான்; ஆனால், அவனுக்குப் பின், நாட்டை ஆள, வாரிசு இல்லை.

மழலைச் செல்வம் வேண்டி, விரதம் இருந்து, சாதுக்களை வரவழைத்து, யாகங்கள் நடத்தி, ஏழை, எளியோருக்கு, தினமும், அன்னதானம் செய்து வந்தான்.

அதன்பின், மகாராணி கர்ப்பமுற்றாள்; அதைக் கொண்டாட, சாதுக்களுக்கும், ஏழை மக்களுக்கும், தான, தர்மம் செய்து மகிழ்ந்தான் வெற்றிமாறன்.

திடீரென, அவன் நாட்டில், காட்டு மிருகங்கள் புகுந்து, பயிர்களை நாசம் செய்து, மக்களை துன்புறுத்தியது. படைகளோடு காட்டிற்கு, வேட்டையாட சென்றான்; செல்லும் வேகத்தில், ஒரு மரத்தடியில், ஒரு மகான் நிஷ்டையில் இருந்ததை கவனிக்கவில்லை.

சேறும், சகதியும் படிந்த சாலையில், குதிரைகள் செல்லும் போது, தேங்கியிருந்த, அசுத்த நீர், மகான் மீது விழுந்தது.

இதனால், தவம் கலைந்த மகான், மிகவும் கோபமுற்றார்; இதை கண்ட படைவீரர்கள், மன்னரிடம் கூறினர்; தவறை உணர்ந்த வெற்றிமாறன், மகான் கால்களில் விழுந்து, தான் அறியாது செய்த பிழைக்கு மன்னிப்புக் கேட்டான்.

ஆனால், மகானுக்கு கோபம் தணியவில்லை.

'நீ செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கிடையாது; உனக்குப் பிறக்கும் குழந்தை விகார தோற்றத்தோடு பிறக்கும்...' என, சாபமிட்டார்.

'சுவாமி... இத்தனை ஆண்டுகளுக்குப் பின், ஒரு பெண் மகள் பிறக்க, கனவில் ஈசன் அருள் புரிந்திருக்கிறார்; ஆகவே, என் பிழையை மன்னித்து, சாப விமோசனம் அளியுங்கள்...' என்று, மன்றாடினான்.

கோபம் தணிந்த மகான், மனமிரங்கி, 'மன்னா... நான் கொடுத்த சாபம், கொடுத்தது தான்; திரும்ப பெற இயலாது; ஆனால், எவனொருவன், துணிந்து உனக்குப் பிறக்கப் போகும் மகளை மணக்கிறேன் என, அவளைத் தொடுகிறானோ, அப்போது, அவள் ஒரு அழகான ராஜகுமாரியாக மாறுவாள்; ஆனால், இவ்வுண்மையை யாரிடமும் சொல்லக் கூடாது; மீறினால், உன் தலை, சுக்கு நுாறாக வெடித்து விடும்...' என்றார்.

மன வருத்தத்தோடு, நாடு திரும்பினான் வெற்றிமாறன்.

நாட்கள் உருண்டோடின; பிரசவ காலம் நெருங்கியதும், மகாராணி ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள்; குழந்தையைப் பார்த்ததும், மயங்கினார், மகாராணி.

பார்த்தவர்கள் பயந்தோடினர்; வெற்றிமாறனும் கதறி அழுதான்; காரணம், தலை இல்லை; நெற்றியிலிருந்து, கண், மூக்கு, கழுத்தோடு ஒட்டிய வாய் வழியாக, உணவு செல்லும்; அப்படி ஒரு கோரம்.துடித்துப் போனான் மாறன்; இருப்பினும், மகானின் சாப விமோசனத்தினால், மனதைத் தேற்றிக் கொண்டான்.

வருடங்கள் உருண்டோடின. இளவரசியும் வளர்ந்தாள்.

' ராஜகுமாரியை, யார் மணக்க வருகின்றனரோ, அவரை இந்நாட்டின் மன்னராக முடிசூட்டி, கானகம் சென்று தவமிருப்பேன்...' என, பறைசாற்றினான் மன்னன்.

பலர், ஆவலோடு வந்தனர்; முண்ட ராஜகுமாரியை பார்த்ததும், வந்த வேகத்தில், 'திருமணமும் வேண்டாம்; ராஜ்யமும் வேண்டாம்..'என்று கூறி, பயந்தோடினர்.

வெற்றிமாறன் மனம் தளர்ந்தான்; உள்ளுக்குள் கதறி அழுதான்.

பரஞ்ஜோதி என்ற இளைஞன், பரம ஏழை; ஆனால், அறிவாளி; நற்குணம் கொண்டவன். மன்னன் அறிவித்த செய்தியைக் கேட்டு, ஆண்டவன் தனக்களித்த ஒரு நல்ல சந்தர்ப்பமாக இதை நினைத்தான்.

'அழகற்ற ராஜகுமாரியை மணந்தால், நாட்டுக்கு அரசனாகி, நல்ல சேவை புரியலாம்; ஏழை என்ற சொல்லே நாட்டில் இருக்கக் கூடாது. நாடு செழிப்பாக இருந்தால், மக்களும் மகிழ்ச்சியாக இருப்பர். ஆகவே, எனக்கு சுகம் வேண்டாம்; அழகற்ற ராஜகுமாரியை மணக்க தயார்...' என்று, மன்னனிடம் கூறினான்.

அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த மன்னன், பரஞ்ஜோதியை கட்டி தழுவி, திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். அவன் தியாகத்தைப் எல்லாரும் புகழ்ந்தனர்.

திருமணத்தன்று, மணமேடையில், ராஜகுமாரியின் கையைப் பிடித்தான். என்ன ஆச்சரியம்! பரஞ்ஜோதியின் கை பட்டதும், ராஜகுமாரி தேவலோக ரம்பையாக மாறினாள்; அப்படியே ஸ்தம்பித்து நின்றான் பரஞ்ஜோதி.

வெற்றிமாறன் மகான் சொன்ன சாப விமோசன ரகசியத்தை, அப்போதுதான் எல்லாருக்கும் அறிவித்தான்.

சாபம் கொடுத்த முனிவரும் நேரில் வந்து, ரகசியத்தை பாதுகாத்ததற்காக, வெற்றிமாறனை பாராட்டி, திருமணத்தை அவரே நடத்தி மணமக்களை வாழ்த்தினார்.

மன்னர் வெற்றிமாறன், கானகத்திற்கு போவதைத் தடுத்து, தான் அரசாள உதவுமாறு வேண்டினான் பரஞ்ஜோதி; அவரும் ஒப்புக் கொண்டார்.

பரஞ்ஜோதியின் ஆட்சியில், சமத்துவம் நிலவியது; மக்கள் மகிழ்ந்தனர்!