ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

பதிவு செய்த நாள் : 16 ஏப்ரல் 2019

* நவக்கிரகங்களை அவற்றுக்குரிய நாட்களில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டுமா, அல்லது மற்ற நாட்களிலும் செய்யலாமா? சு. மணிமேகலை, நாகர்கோவில்.

பொதுவாக, நல்லது நடக்க எல்லா நாட்களிலும் வழிபடலாம். பரிகாரம் வேண்டி வழிபட அந்ததந்த நாட்களில் செய்வதே நன்று.

* ஜென்ம சாபல்யம் என்பதன் பொருள் என்ன? என். தண்டபாணி, ஆறுமுகநேரி.

ஒரு காரியத்தை செய்வதனால் ஏற்படும் நன்மை, தீமைக்கு பலன் என்று பொருள். இதிலிருந்து வந்தது சாபல்யம் என்ற சொல்லாகும். அதாவது எண்ணியது பலித்தது என்பதாகும். பிறந்ததன் பயனை அடைந்து விட்டதாகப் பொருள் தருவது ெஜன்ம சாபல்யமாகும்.

* உடல்நலம் இல்லாதவர்களுக்காக மற்றவர் வழிபட்டால் பலன் கிடைக்குமா? இ. கார்த்திக், கடையநல்லூர்.

இயலாதவர்கள் குணமடையவேண்டி பிறர் வழிபடலாம். விரதமும் கூட இருப்பார்கள். நல்ல பலன் கிடைக்கும்.

* குளிக்காமல் சாமி கும்பிட்டால் கடவுளின் அருள் கிடைக்குமா? எஸ். ஷண்முகப்ரியா, நெல்லை.

காலையில் எழுந்தவுடன் கை – கால் கழுவி திருநீறு பூசி வீட்டில் சாமி படத்தை கும்பிடலாம். விளக்கேற்றுவது, பூஜை செய்வது, கோயிலுக்குப் போவது என எல்லாமே குளித்துவிட்டுத்தான் செய்ய வேண்டும்.