‘தலை’யால் தப்பித்த தலை!

பதிவு செய்த நாள் : 16 ஏப்ரல் 2019

கலிங்கம், அங்க தேசத்துக்கிடையே போர் மூண்டது. கலிங்கத்தின் படை பலத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாதது அங்க தேசப்படை. இருந்தாலும் வீரர்கள் போருக்கு ஆயத்தமாயினர். காரணம், அங்கதேச தளபதியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை.

போர் தீவிரமானது. கிட்டத்தட்ட அங்க தேசத்தின் கதை முடியும் நிலை வந்தது.

இந்நிலையில் தளபதி, களத்திற்கு செல்லும் வழியிலுள்ள காளி கோயிலுக்கு வீரர்களை அழைத்துச் சென்றார்.

''வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதற்கு மேலும் நம்மிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. இதோ காளியின் முன் நாணயத்தை சுண்டுகிறேன். தலை விழுந்தால் தொடர்ந்து போராடுவோம். பூ விழுந்தால் இப்படியே எதிரியிடம் சரணடைவோம்.''

எல்லோரும் தலையசைக்க, தளபதி நாணயத்தைச் சுண்டினார். காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது. 'தலை!’

உற்சாகம் அடைந்த வீரர்கள் துணிவுடன் புறப்பட்டனர். பலத்துடன் சண்டையிட, கலங்கியது கலிங்கப்படை. முடிவில் அங்க தேசம் வென்றது.

''காளியின் தீர்ப்பு வென்று விட்டது'' என்று வீரர்கள் குதித்தனர்.

புன்னகையுடன் தளபதி, ''தீர்ப்பை வெல்ல வைத்தது உங்கள் நம்பிக்கைதானே'' என்று சுண்டிய காசை காண்பித்தார். அதன் இரு பக்கங்களிலும் 'தலை'.