முதல்வர் யோகி ஆதித்தியநாத், மாயாவதி தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

பதிவு செய்த நாள் : 15 ஏப்ரல் 2019 16:04

புதுடில்லி,

   மதசார்பின்மைக்கு குந்தகம் விளைவிக்கும்படி பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் மற்றும் பகுஜன் சமாஜன் கட்சி தலைவர் மாயாவதி இருவரும் தேர்தல் பரப்புரை செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வாரம் மீரட் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் யோகி ஆதித்தியநாத்  பேசுகையில் இந்த மக்களவை தேர்தல் அலி மற்றும் பஜ்ரங் பலி இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மாயாவதி அலி மற்றும் பஜ்ரங் பலி இருவரும் எங்கள் கட்சிக்கு தேவை என கூறினார். மேலும் இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு ஓட்டு போட கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த இருவரின் பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இரு தலைவர்களின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் இன்று கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும் முதல்வர் யோகி ஆதித்தியநாத் மற்றும் மாயாவதி இருவரும் நாளை காலை முதல் தேர்தல் பரப்புரையில் ஈடுபட தடை விதிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி முதல்வர் யோகி ஆதித்தியநாத் மூன்று நாட்களுக்கும் மாயாவதி இரண்டு நாட்களுக்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக யோகி ஆதித்தியநாத் மற்றும் மாயாவதி பேசியது தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது அவதூறாக பேசிய இரு தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியது.

அப்போது இரு தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

விதிமுறை மீறி பேசும் அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு போதிய அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்தை பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் விசாரணை நாளை தொடரும் என நீதிபதிகள் அறிவித்தனர்.