பாஜகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை: பிரியங்கா தாக்கு

பதிவு செய்த நாள் : 15 ஏப்ரல் 2019 15:13

ஆக்ரா,

   பாரதிய ஜனதா கட்சி உண்மையின் பாதையில் இருந்து தடம் புரண்டு விட்டது என்றும், மக்கள் மீதும்  ஜனநாயகத்தின் மீது அதற்கு நம்பிக்கை இல்லை என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா கடுமையாக தாக்கிப் பேசினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் சிக்ரி மக்களவை தொகுதியில், போட்டியிடும் மாநில காங்கிரஸ் தலைவரும் நடிகருமான ராஜ் பப்பரை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் மேலும் பேசியதாவது:
மத்திய அரசுக்கு, ஜனநாயகத்தின் மீதோ, அதன் நிறுவனங்கள் மீதோ, மக்களின் மீதோ நம்பிக்கை இல்லை என்றே தோன்றுகிறது. இவர்கள் உண்மையான தேசியவாதிகளாக இருந்தால், உண்மையின் பாதையில் நடந்திருப்பார்கள். இந்த நாடு உண்மையை அடித்தளமாகக் கொண்டது என்பதையும் இதிலிருந்து விலகிச் செல்பவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் உணர்ந்திருப்பார்கள்

ஆனால் நீங்கள் நெடுநாட்களுக்கு முன்பே உண்மையின் பாதையை விட்டு தடம் புரண்டுவிட்டீர்கள். உங்களுக்கும் மன்னிப்பு கிடையாது.

தேர்தல் வரும்போதெல்லாம் பாஜகவினர் தேசபக்தியைப் பற்றியும், பாகிஸ்தானைப் பற்றியும் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் இந்தியாவைப் பற்றி பேச வேண்டும். இந்த நாட்டின் இளைஞர்களுக்காக, விவசாயிகளுக்காக, சமுதாயத்தின் மற்ற பிரிவினருக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி பேச வேண்டும். இவ்வாறு பிரியங்கா காந்தி குறிப்பிட்டார்.