ரபேல் விவகாரத்தில் ராகுலின் பொய் வெளிபட்டுள்ளது: பாஜக விமர்சனம்

பதிவு செய்த நாள் : 15 ஏப்ரல் 2019 14:00

புதுடில்லி

    ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் பொய் இன்று உச்சநீதிமன்றத்தால் வெளிபட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் இன்று விமர்சித்துள்ளார்.

ரபேல் போர் விமான ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று குற்றஞ்சாட்டும் ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது

இந்நிலையில், மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். இதில் பேசிய அவர், ராகுல் காந்தியை கடுமையாக சாடினார்.

இதில் பேசிய ஜவடேகர்,”ராகுல் காந்தியின் பொய்களை உச்சநீதிமன்றம் இன்று வெளியே கொண்டுவந்துள்ளது. அவர் தினமும் நிறைய பொய்களை கூறி வருகிறார். அதில் ஒரு பொய் இன்று வெளியே தெரியவந்துள்ளது. அவர் தொடர்ந்து கூறிய பொய்களுக்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்” என்று கூறினார்.

”பிரதமர் மோடியையும் அவரது அரசுக்கும் களங்கம் விளைவிக்க நீதிமன்றத்தை ராகுல் காந்தி பயன்படுத்துகிறார். இவ்வளவு சிறப்பாக அரசாங்கத்தை மோடி நடத்துவதை காங்கிரஸ் மற்றும் காந்தி குடும்பத்தாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல ஊழல்கள் மற்றும் மோசடிகளில் சிக்கியுள்ளதால் இதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்று வசைபாடினார்.

”இந்திய அரசியல் தற்போது மிகவும் கீழே சென்றுள்ளதற்கு ராகுல் காந்தி தான் முக்கிய காரணம்” என்று ஜவடேகர் சாடினார்.

பதிலளிக்க தயார்

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். இதில் பேசிய அவர்,”உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. நாங்கள் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளிப்போம்” என்று தெரிவித்தார்.