வளர்ச்சியில் அக்கறையுள்ள ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் அமையும்: கே.எஸ். அழகிரி நம்பிக்கை

பதிவு செய்த நாள் : 15 ஏப்ரல் 2019 13:54

சென்னை, 

  வளர்ச்சியில் அக்கறையுள்ள ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் அமையும் என்ற நம்பிக்கையோடு மக்களின் ஆதரவை அன்போடு வேண்டுகிறேன் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த மக்களவை தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தங்களது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் பரப்புரை நிகழ்த்திய நரேந்திர மோடி இதுவரை கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றியதில்லை. இந்த நிலையில் தான் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கிறது.

கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சியில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஜூன் 2018 நிலவரப்படி 4.27 கோடி பேர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். ரயில்வே துறையில் 90 ஆயிரம் கேங் மேன், ஸ்விட்ச்மேன் போன்ற வேலைகளுக்கு 2 கோடியே 80 லட்சம் பேர் மனு செய்திருக்கிறார்கள்.

மத்திய அரசில் 18 பியூன் வேலைக்கு 12,453 பேர் மனு செய்திருக்கிறார்கள். இதில் 129 பொறியியல் பட்டதாரிகள், 23 சட்டம் படித்தவர்கள், 323 சட்ட மேற்படிப்பு படித்தவர்கள் அடங்குவர். தகுதியானவர்கள், தகுதிக்கு குறைவான வேலைக்கு மனு செய்ய வேண்டிய அவலநிலைக்கு யார் பொறுப்பு? ஆண்டுக்கு 2 கோடி என ஐந்தாண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்று ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடியை பார்த்து படித்த பட்டதாரிகள் கேட்கிறார்கள். நரேந்திர மோடியே வேலை வாய்ப்பு எங்கே ? கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், விளைபொருளுக்கு உற்பத்தி செலவோடு 50 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கியது. ஆனால், விவசாயிகளின் விளைபொருளுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவாகவே சந்தையில் விற்கப்படுகிறது.

அதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு, கடன்சுமை அதிகரித்துள்ளது. விவசாயிகள் கடனை ரத்து செய்வதால் பிரச்சினை தீராது என்கிறார் பிரதமர் மோடி. ஆனால் காங்கிரஸ் ஆட்சி அமைந்த 3 மாநிலங்களில் விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2016 நவம்பர் 8ந்தேதி அன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்தார். இதனால் கருப்புப் பணமோ, கள்ளப் பணமோ, தீவிரவாதமோ ஒழிந்ததாக தெரியவில்லை. செல்லாது என அறிவிக்கப்பட்ட மொத்த தொகையில் 99 சதவீதம் வங்கிகளுக்கு திரும்ப வந்து விட்டது. ரூபாய் 4 லட்சம் முதல் 5 லட்சம் கோடி வரை கருப்பு பணம் இருப்பதாக கருதியே மோடி இதை அறிவித்தார்.

ஆனால் அறிவிப்பினால் எந்த பலனும் ஏற்படவில்லை. அப்பாவி மக்கள் 140 பேர் உயிரை இழந்தனர். 35 லட்சம் வேலைகள் பறிபோயின. ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் மூடப்பட்டன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூபாய் 2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இது நரேந்திர மோடியால் நாட்டுக்கு ஏற்பட்ட பேரழிவாகும்.

மோடி ஆட்சியில் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வங்கிகளில் மோசடி நடைபெற்றுள்ளது. இதில் 53 ஆயிரம் கோடி ரூபாய் ஏமாற்றிய 23 பேர் வெளிநாடுகளுக்கு தப்பித்துப் போகவும் அனுமதிக்கப்பட்டனர். மோடியின் நண்பர்களான குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகளான நீரவ் மோடி, மெகுல்சோக்ஷி ஆகியோர் 26 ஆயிரம் கோடி ரூபாயை வங்கியை ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி விட்டார்கள். இவர்கள் இருவரும் பிரதமர் மோடியோடு தூதுக்குழுவில் வெளிநாட்டுக்கு சென்று அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள்.

அதேபோல, காங்கிரஸ் ஆட்சி பதவி விலகிய போது 2014-ல் வராக் கடன் ரூபாய் 2 லட்சத்து 83 ஆயிரம் கோடி. ஆனால் ஜனவரி 2019-ல் மோடி ஆட்சியில் வராக் கடன் ரூபாய் 13 லட்சம் கோடி. வங்கிப் பணம் மக்கள் பணம். மக்கள் பணத்தை ஒருசில முதலாளிகள் கொள்ளையடிப்பதை தடுக்காத மோடியை ஊழல் பேர்வழி என்று அழைக்காமல், வேறு எப்படி அழைப்பது?

பாஜக ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. 2014-ல் கச்சா எண்ணெய் விலை 110 டாலர். அப்போது பெட்ரோல் விலை ரூ.76.10. இதில் கலால் வரி ரூ.9.48. ஆனால் மோடி ஆட்சியில் 2018-ல் கச்சா எண்ணெய் விலை 64.70 டாலர். பெட்ரோல் விலை ரூ.76.61. இதில் கலால் வரி ரூபாய் 19.46. மத்திய அரசு கடந்த ஐந்தாண்டுகளில் கலால் வரியாக ரூபாய் 13 லட்சம் கோடி வருமானத்தை பெருக்கிக் கொண்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டது வாக்களித்த பொதுமக்கள் தான்.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல் தொடர்கிறது. தலித் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. வன்முறையினால் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களிடையே பாதுகாப்பற்ற தன்மை அதிகரித்துள்ளது. மதக்கலவரங்களினால் பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பில்லை. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலுள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்கால நலனுக்கு உலை வைக்கிற வகையில் மத்திய பாஜக அரசு நீட் தேர்வை 2017, 2018 ஆம் ஆண்டுகளில் திணித்தது. இதை தடுத்து நிறுத்த கையாலாகாத அரசாக அதிமுக இருந்து வருகிறது. பாஜக நீட் தேர்வை திணிக்கிறது. காங்கிரஸ் கட்சி நீட் தேர்வை ரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறது. நீட் தேர்வை தமிழகத்தின் மீது திணித்து அனிதா போன்ற மாணவிகளின் தற்கொலைக்கு காரணமான பாஜக - அதிமுக கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டியது வாக்காளர்களின் கடமையாகும்.

எனவே, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய பாஜக அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழக வாக்காளர்கள் மத்திய அரசினால் பாதிக்கப்பட்டதோடு, மாநிலத்தில் நடைபெற்று வரும் அராஜக ஊழல் ஆட்சியாலும் கடுமையாக வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கிற்கு முடிவுகட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் சின்னங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்கால பிரதமராக ராகுல்காந்தி வர வேண்டுமென்று முன்மொழிந்திருக்கிறார். அதேபோல, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்ற விருப்பத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டிருக்கிறார். இதனடிப்படையில் தமிழக வாக்காளர்கள் வாக்களித்து மக்கள் நலன் சார்ந்த, வளர்ச்சியில் அக்கறையுள்ள ஆட்சிகள் மத்தியிலும், மாநிலத்திலும் அமையும் என்ற நம்பிக்கையோடு உங்களது ஆதரவை அன்போடு வேண்டுகிறேன் என, கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.