வெற்றி பெற்ற மாநிலங்களில் நியாய் திட்டத்தை செயல்படுத்த முடியுமா? காங்கிரசுக்கு பாஜக அமைச்சர் சவால்

பதிவு செய்த நாள் : 15 ஏப்ரல் 2019 13:51

மும்பை,

ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய் வழங்கும் நியாய் திட்டத்தை காங்கிரஸ் தான் வெற்றி பெற்ற மாநிலங்களில் முதலில் செயல்படுத்தி காட்ட முடியுமா என்று மகாராஷ்டிர நிதி அமைச்சர் சுதிர் முன்காந்திவார் சவால் விட்டுள்ளார். 

மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருமானம் உறுதி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார். அதை தொடர்ந்து நாட்டின் 20 சதவீத ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய் வருவாய் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கடந்த மாதம் அறிவித்தார்.

இந்த திட்டத்திற்கு நியானதம் ஆய் யோஜனா திட்டம் (Nyunatam Aay Yojana) என்று பெயரிட்டார். சுருக்கமாக நியாய் (Nyay) என்றழைக்கப்படும் இந்த திட்டம் இந்த மாதம் வெளியிடப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றிருந்தது.

காங்கிரஸின் இந்த திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமல்ல என்று பாஜக கூறி வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர நிதி அமைச்சர் சுதிர் முன்காந்திவார் பிடிஐ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது நியாய் திட்டம் குறித்து பேசினார். அதன் விவரம் :

ஏழை மக்களுக்காக காங்கிரஸ் அறிவித்துள்ள நியாய் திட்டத்தை செயல்படுத்த முடியாது என காங்கிரஸ் கட்சிக்கே நன்றாக தெரியும். இதே போல் கடந்த 2004 மகாராஷ்டிராவில் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் 6 மாதங்களில் ஒரு யூனிட்டுக்கு 1 ரூபாய் என மின் கட்டண வரி உயர்த்தப்பட்டது.

இதேபோல் கிலோவுக்கு ஒரு ரூபாய் என்ற விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படும் என சுஷில் குமார் ஷிண்டே வாக்குறுதி அளித்தார். ஆனால் அப்போதைய காங்கிரஸ் தலைவர் அதை தேர்தல் அறிக்கை அச்சிடும் போது ஏற்பட்ட பிழை என கூறினார்.

சமீபத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ராஜஸ்தான் மாநிலத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

நடுராத்தியில் சூரியன் உதித்தாலும் உதிக்கும் ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து நிச்சயம் ஒருவர் பிரதமராக முடியாது. ஒருவேளை காங்கிரஸ் பொருளாதார விஷயத்தில் மிகவும் திறமைசாலி என்பது உண்மையானால் சமீபத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவற்றில் நியாய் திட்டத்தை செயல்படுத்தி காட்டட்டும்.

இந்த திட்டத்தால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை தீர்ந்தால் மக்கள் அவர்களை நம்ப முடியும்.

இந்த நியாய் திட்டத்திற்கு தேவைப்படும் 4 லட்சம் கோடி ரூபாயை எப்படி திரட்டப்படும் என்பதை காங்கிரஸ் இதுவரை விளக்கவில்லை என்று நிதி அமைச்சர் சுதிர் முன்காந்திவார் தெரிவித்தார்.