ரபேல் போர்விமான கொள்முதல்: ராகுல் பேச்சுக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பதிவு செய்த நாள் : 15 ஏப்ரல் 2019 13:42

புதுடில்லி

  ரபேல் போர் விமான ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று குற்றஞ்சாட்டும் ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான புதிய ஆவணங்களையும் சீராய்வு மனு விசாரணையின் போது இணைத்து பரிசீலிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் அந்த ஆவணங்களை பரிசீலிக்க கூடாது என்று மத்திய அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆங்கில நாளிதழில் வெளியான ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் அமேதி தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”உச்சநீதிமன்றத்துக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஒட்டுமொத்த நாடே பிரதமர் மோடியை திருடன் என கூறுகிறது. உச்சநீதிமன்றம் நீதியை எடுத்துரைத்திருக்கிறது. இது கொண்டாடப்பட வேண்டிய தினமாகும்” என்று அன்றைய தினம் பேசி இருந்தார்.

ராகுல் காந்தி மோடியை திருடன் என்று சாடி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. பாஜக எம்பி மீனாட்சி லேகி தொடர்ந்த  இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு, ராகுல் காந்தி பதிலளிக்கவேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும், ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் ராகுல் காந்தி பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

”ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு கூறியது போல் எதனையும் தனது தீர்ப்பில் நீதிமன்றம் கூறவில்லை. அதுப்போன்ற வார்த்தைகளை நீதிமன்றம் ஒரு போதும் அனுமதித்ததில்லை. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் என்ன இருந்ததோ அதனை முன்னிட்டே முடிவு மேற்கொள்ளப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.