மேனகா காந்தி சர்ச்சைக்குரிய பேச்சு: விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பதிவு செய்த நாள் : 13 ஏப்ரல் 2019 13:21

சுல்தான்புர்

முஸ்லீம் வாக்குகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக வேட்பாளர் மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 6 கட்டங்கள் வரும் மே 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுல்தான்பூர் மக்களவை தொகுதிக்கு, வரும் மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில், பாஜக, வேட்பாளராக, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி போட்டியிடுகிறார்.

பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஒன்றி பேசிய மேனகா காந்தி,

”நான் உறுதியாக இந்தத் தொகுதியில் வெற்றி பெறப்போகிறேன். இந்த வெற்றியில் இஸ்லாமியர்களின் பங்கு இல்லாவிட்டால் அது நன்றாக இருக்காது. அத்துடன் இங்குள்ள இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களிக்காமல், வெற்றிக்குப் பின் என்னிடம் ஏதாவது உதவி  கோரி வந்தால், வந்தால் என்ன? நிச்சயம் வருவார்கள். என மனது கல்லாகிவிடும்.  அவர்களுக்கு நான் ஏன் உதவி செய்யவேண்டும். அதனால் எனக்கு வாக்களித்தால்தான் அவர்களுக்கு உதவி செய்வேன். இது ஒரு வகையில் கொடுத்து வாங்குதல்  போன்றதுதான்” என்று மேனகா காந்தி பேசினார்.

சுல்தான்பூர் மக்களவை தொகுதியில் மேனகா காந்தி வெற்றி பெற்றால் அவருக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்கு அளிக்காதவர்களுக்கும் அவர்தான் எம்பி ஆவார். அதைவிட்டுவிட்டு மேனகா காந்தி பேசி உள்ளார்.

மேனகாவின் இந்த பேச்சு குறித்த, வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சி, மேனகா காந்தியின் இந்த பேச்சை வன்மையாகக் கண்டித்தது. வாக்களிக்க மக்களை வற்புறுத்துவது தவறு. தேர்தல் ஆணையம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மேனகா காந்தியின் சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கேட்டு, மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி பிஆர் திவாரி, இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது. அதன்படி சுல்தான்புர் மாவட்ட மாஜிஸ்திரேட் மேனகா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனத் தெரிவித்தார்.

3 நாட்களுக்கு பதிலளிக்கவேண்டும் என்று மேனகா காந்தியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது  என்றார் பிஆர் திவாரி