துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 24

பதிவு செய்த நாள் : 13 ஏப்ரல் 2019

கடமை வீரர் ‘கவியோகி’ சுத்தானந்த பாரதி!

மிகச் சிறந்த இலக்கியவாதியாகவும், தெய்வ பக்தியும், தேச பக்தியும் மிக்கவராகவும் அறியப்பட்ட ‘கவியோகி’ சுத்தானந்த பாரதி குறித்து இந்த வாரம் பார்ப்போம்.

ராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கை நகரில், சிவிகுல ஜடாதர அய்யர், காமாட்சி அம்மையார் தம்பதியருக்கு 1897ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி மகனாகப் பிறந்தவர்தான், வேங்கட சுப்பிரமணியன் என்ற இயற் பெயரை கொண்ட சுத்தானந்த பாரதி. சிறுவயதில் சிவகங்கை ரங்க ஐயங்காரின் திண்ணை பள்ளியில் ஆரம்ப கல்வியையும், அதை தொடர்ந்து மன்னர் பள்ளியிலும் கல்வி பயின்றார். சிறந்த ஞானமும், சிந்தனை திறனும் வாய்க்கப்பெற்ற சுத்தானந்தர் எட்டு வயதிலேயே கவி புனையும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்.

கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட சுத்தானந்தர் வேதங்கள், உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரம் உள்ளிட்டவற்றை நன்கு கற்றதுடன் அவற்றை தமிழிலும் மொழி பெயர்த்துள்ளார். பிறநாட்டு  அறிஞர்களான ஷேக்ஸ்பியர், மில்டன், பைரன் போன்றோரின் நூல்களையும் ஆர்வத்துடன் கற்று வந்துள்ளார்.

 இவர் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் ‘பாரதசக்தி’ எனும் காவியத்தை படைத்தார். பலராலும் பாராட்டப்பெற்ற இக்காவியத்திற்குதான், 1984ம் ஆண்டு தமிழக அரசும், தஞ்சை தமிழ் பல்கலைக் கழகமும் இணைந்து நிறுவிய மாமன்னன் ராஜராஜன் படைப்பிலக்கிய பெரும் பரிசான ‘ராஜராஜன்’’ விருது வழங்கப்பட்டது. கவியோகி சுத்தானந்த பராதி இவ்விருதை பெற்றார்.

வேங்கட சுப்பிரமணியன் என அறியப்பட்ட இவருக்கு, இமயமலையில் வாழ்ந்து வந்த சித்தர் ஒருவர் தீட்சை வழங்கியதுடன் ‘சுத்தானந்தம்’ என்ற பெயரையும் சூட்டியுள்ளார். அது முதல், ஆன்மிக கவிதை நூல்கள் பலவற்றை இயற்றிய இவருக்கு, சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ‘பாரதி’, ‘கவியோகி’ என்ற பட்டங்களை சூட்டினார். ரமண மகரிஷி, சீரடி சாய்பாபா, ஆகியோர் சுத்தானந்த பாரதியின் ஆன்மிக உயர்வுக்கு வழி காட்டியுள்ளனர்.

 சுத்தானந்தபாரதி இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் மிகவும் பிரபலமானது.

ஆன்மிக அன்பர்கள் பலரால் படித்துப் பாராட்டப்பட்டது. இவர் திருக்குறளை, அதே ஈரடிகளில், பொருள் மாறாமல், கருத்துப் பிசகாமல் அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

இந்த நூல் 1968ம் ஆண்டு அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை ஏற்பாட்டில் சென்னையில் நடைபெற்ற, இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டது. திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த பதிப்புக் கழகத்தால், பதிப்பித்து இந்நூல் வெளியிடப்பட்டள்ளது.

தேச விடுதலைப் போராட்டத்திலும் சுத்தானந்த பாரதி தமது பங்களிப்பை செலுத்தியுள்ளார். பாலகங்காதர திலகர், அண்ணல் காந்தியடிகள், நேதாஜி, வ.வே.சு. ஐயர் ஆகியோருடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்த இவர், அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். தேசிய சிந்தனைகளைத் தூண்டும், சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல பாடல்களையும் இவர் எழுதியுள்ளார்.

அது மட்டுமல்ல, சமூக சேவை யிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட சுத்தானந்தர், கிராம மேம்பாட்டுப் பணிகள், கதர் இயக்கப் பணிகள், மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் அவர்களின் மறுவாழ்வு உள்ளிட்ட சீர்த்திருத்த பணிகளையும் மேற்கொண்டார்.

முற்போக்கு சிந்தனை கொண்ட, தீவிரவாத தேச பக்தர்கள் பலர் சங்கமித்திருந்த புதுச்சேரிக்கு சென்ற பலரின் வாழ்வில் பெரும் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த வரிசையில், சுந்தானந்த பாரதிக்கும் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது.

ஆம், புதுவையில் ஸ்ரீ அரவிந்தரை சந்தித்த அவர் அங்கேயே தங்கி விட்டார். முழு நேர ஆன்மிக சிந்தனையோடு அங்கு வாழ்ந்த சுந்தானந்தர் 20 ஆண்டுகள் மவுன விரதம் கடைப்பிடித்துள்ளார் என்பதுதான் மிகப்பெரிய ஆச்சர்யமாக, அதிசயமாக பார்க்கப்பட்டது.

ஜாதி, மத, சமய வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிய இவர் இஸ்லாம், கிறிஸ்தவ மத நூல்களையும் கற்று அவை காட்டிய நெறிகளையும் மதித்தார். ‘ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்மிக நேயர் நாம் என்ற கோட்பாட்டை உலகுக்கு உணர்த்தினார்.

சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளிலும் பாண்டித்யம் பெற்ற சுத்தானந்தர் இந்த மொழிகளிலும் நூல்களை எழுதியுள்ளார்.

கவியோகி சுத்தானந்தபாரதி எழுதிய ‘சோவியத் கீதாஞ்சலி’ எனும் நூல் சோவியத் ஒன்றியத்தால், சிறந்த நூல்களுக்கு வழங்கப்படும் ‘சோவியத்நாடு நேரு நினைவுப் பரிசைப் பெற்றது.

காவியம், கவிதை, உரைநடை, பயணநூல், இலக்கணம், கீர்த்தனைகள், நாடகம், திறனாய்வு, சிறுகதை, அறிவியல், வாழ்க்கை வரலாறு என பல்வேறு துறைகள் சார்ந்த நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிய மிகப்பெரிய சாதனையாளராக, இவர் திகழ்ந்துள்ளார்.

1947ம் ஆண்டுக்கு பிறகு உலகளாவிய ஆன்மிக பயணங்களை மேற்கொண்ட சுத்தானந்தர் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சீனா, ஜப்பான், சோவியத் யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்கெல்லாம் உரை நிகழ்த்தி உள்ளார்.

‘‘அகவாழ்வு சிறந்திட யோகா’’ புறவாழ்வு சிறந்திட அறிவியல் இவை இரண்டும் இணைந்தால் மனித வாழ்வு அமரத்துவம் பெறும், மண்ணில் விண்ணரசு தோன்றும்’’ என்பதுதான் சுத்தானந்தர் உலகுக்கு அளித்த செய்தி.

மாநில அளவிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தமது ஆன்மிக, மனிதநேய பங்களிப்பை செலுத்திய சுத்தானந்தர். 1977ம் ஆண்டு சிவகங்கை திரும்பி, ‘‘சுத்தானந்த யோக சமாஜம்’’ எனும் அமைப்பை நிறுவினார்.

அதைத் தொடர்ந்து 1979ம் ஆண்டு ‘சுத்தானந்த தேசிய வித்யாலயம்’ எனும் பெயரில் உயர்நிலை பள்ளியையும் நிறுவி ஆன்மிகப் பணியையும், கல்வி பணியையும் மேற்கொண்டார்.

இறுதிக் காலத்தில், பள்ளி வளாகத்திலேயே ‘குடில்’ ஒன்றை அமைத்து சமாஜம் மற்றும்  பள்ளியின் வளர்ச்சிகாக வழிகாட்டி வந்த சுத்தானந்த பாரதி 1990ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி தமது 93வது வயதில் இந்த உலக வாழ்வை நீத்தார்.