ஆன்மிக கோயில்கள்: மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளித்த கள்ளழகர்!

பதிவு செய்த நாள் : 14 ஏப்ரல் 2019

தல வரலாறு : எமதர்மராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தை போக்க பூலோகத்தில் தற்சமயம் ‌கோயில் இருக்கும் அழகர் மலை விருசுபகிரி என்னும் இம்மலையில் தபசுசெய்கிறார். இம்மலை 7 மலைகளை கொண்டது. தர்மராஜனின் தபசை மெச்சி பெருமாள் காட்சி தந்தார். இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் நின்னை ஒரு மு‌றையாகிலும் பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்படியே பெருமாளும் வரம் தர, இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எம தர்மராஜனே நடத்துவதாக ஐதீகம். எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு தர்ம ராஜன் விருப்பத்தின் பேரில் விஸ்வகர்மாவினால் சோமசந்த விமானம் (வட்ட வடிவ) உள்ள ‌கோயில் கட்டப்பட்டது.

தல சிறப்பு : மூலவர்  தெய்வ பிரதிஷ்டை  அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்யதேசங்களில் இது 93வது திவ்ய தேசம்.

தல பெருமை : இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி, மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். ‘பதினெட்டாம் படியான்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவரை கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும். கோட்டை விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக ‌‌செலுத்துவார்கள். அழகர் ‌கோவில் தோசை  காணிக்கையாகக் கிடைக்கும். தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோவில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது. நூபுர கங்கைசிலம்பாறு - ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் வற்றாத ஜீவநதியாக வந்து கொண்டிருக்கிறது. பெருமாள் சப்தரிஷிகள், சப்த கன்னிகள், பிரம்மா, விக்னேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார். 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம்.சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார்.

சிறப்பு தகவல்: மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா தமிழகத்தின் மிக முக்கிய திருவிழா ஆகும். இதில் மீனாட்சிக்கு திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் கண்டு வந்தால் வாழ்க்கை முழுவதும் இனிமையாக கழியும் என்பது நம்பிக்கை. அழகர் கோவிலிலிருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக் கொண்டு குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார். சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார். அழகர் கோவிலிலிருந்து மதுரை வந்து, மீண்டும் கோயில் திரும்பி செல்லும் வரை அழகர் சுமார் 7 வாகனங்கள் மாறுகிறார்.அழகர்கோவிலில் தான் லட்சுமி, பெருமாளைக் கைப்பிடித்தாள். அன்றுமுதல் ‘கல்யாண சுந்தர வல்லி’ என்னும் பெயர் பெற்றாள் அன்னை. இந்த திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக் கொண்டது.

சிறப்பம்சம்: விஞ்ஞானம் அடிப்படையில் தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும்.

பிரார்த்தனை: இங்குள்ள அழகுமலை யானை வணங்கினால் விவசாய செழிப்பு, வியாபார விருத்தி, புதிய ‌தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை சாத்தியமாகும். மேலும் மழைவரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமா‌ளை வணங்கலாம். இவை தவிர பெரும்பாலும் குடும்ப நலம், கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

நேர்த்திக்கடன்: தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடுத்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக முடி காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர்.  இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு. பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம்.  ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள், துளசி தளங்கள், பூக்கள், பூ‌மாலைகள் முதலியன  படைக்கலாம்.  பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

திருவிழா: : சித்திரைத் திருவிழா - 10 நாட்கள், ஆடிப் பெருந்திருவிழா - 13 நாட்கள், ‌ஐப்பசி தலை அருவி உற்சவம் - 3 நாட்கள். இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.

வாரத்தின் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். மாதந்தோறும் இக்கோவிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.

பொது தகவல்: புத்தம், சமணம், இஸ்லாம் என்று எல்லா சமயங்களை சேர்ந்தவர்களும் வணங்கியதற்கான சரித்திர சான்றுகள் உள்ளன. வைணவம், சைவம் என்ற பேதமில்லாமல் இக்கோயிலில் ஆராதனை நடைபெறுவது மற்றொரு சிறப்பு.

திறக்கும் நேரம்: காலை 6  மணி முதல் 11 மணி வரை, மாலை  4   மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோவில்- – 625 301, மதுரை மாவட்டம்.