திண்ணை

பதிவு செய்த நாள் : 14 ஏப்ரல் 2019

‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - – பதில்கள்!’ எனும் நுாலிலிருந்து:

இந்திய ஜனாதிபதியாக இருந்தவர், அப்துல் கலாம். அவர், ஈரோடு மாவட்டத்தில், ஒரு ஊர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த விழா மேடையில், அப்துல் கலாமுக்கு, நினைவு பரிசாக, ‘வெட் கிரைண்டரை’ தனியார் நிறுவனத்தினர் வழங்கினர்.

உயர் பதவியில் இருந்த, அப்துல் கலாம், அன்பளிப்பாக எதையும் ஏற்றுக் கொள்வதில்லை என்ற கொள்கையுடன் இருந்தார். அதே நேரம், அவருக்கு, வெட் கிரைண்டர் ஒன்றும் தேவைப்பட்டது.

அதனால், அவர், அதை வாங்கிக் கொள்ள முடிவெடுத்து, ஒரு நிபந்தனை விதித்தார். ‘இந்த கிரைண்டருக்கு உரிய விலையை, நீங்கள் வாங்கிக் கொண்டால் மட்டுமே, நான் இதை பெற்றுக் கொள்வேன்...’ என்றார்.

பரிசாக கொடுக்க முடியவில்லையே என, அந்த நிறுவனத்தார் சங்கடப்பட்டாலும், பரவாயில்லையென, ‘4,850 ரூபாய்’ என்றனர்.

உடனே, காசோலை கொடுத்தார், அப்துல் கலாம். கிரைண்டரும் அவரிடம் வழங்கப்பட்டது.

வாங்கிய காசோலையை, வங்கியில் செலுத்தாமல், அப்துல் கலாம் கையெழுத்திட்ட காசோலை என, அபூர்வ பொருளாக நினைத்து, இரண்டு மாதங்களாகியும், பணமாக மாற்றாமல், காசோலையை பத்திரமாக வைத்துக் கொண்டனர், அந்நிறுவனத்தார்.

அதன்பின், அப்துல் கலாம் அலுவலகத்தி லிருந்து, கிரைண்டர் நிறுவனத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில், ‘உடனடியாக, வங்கியில் காசோலையை செலுத்தி, பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்... இல்லையென்றால், நீங்கள் வழங்கிய கிரைண்டரை திருப்பி அனுப்பி விடுவோம்...’ என்று கூறினர்.

இதையடுத்து, காசோலையை மாற்றி, பணத்தை எடுத்துக் கொண்டனர், கிரைண்டர் நிறுவனத்தினர்.

பிறகே நிம்மதியானார், கலாம்.



‘கி.வா.ஜ.,வின் சிலேடைகள்’ நுாலிலிருந்து:

நெடுநேரம் பேசிக் கொண்டிருந்த, நண்பர் ஒருவர், புறப்பட்டபோது, ‘வறட்டுமா?’ என்று ரகரத்தை அழுத்திக் கேட்டார். ‘கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள்...’ என்றார், கி.வா.ஜ.,

‘ஏன்?’

‘நீங்கள் வறட்டு மா என்கிறீர்களே... தொண்டையில் அடைத்துக் கொள்ளும்; தண்ணீர் குடியுங்கள்...’ என்றேன்.



‘விலங்குகளின் வினோத குணங்கள்’ நுாலிலிருந்து:

ஆடுகளுக்கு இயற்கை யிலேயே ஒருவித மோப்ப சக்தி உண்டு. அதாவது, வேறொரு ஆட்டின் குட்டியை ஒரு ஆட்டின் பக்கம் எடுத்து போய் விட்டால், உடனே, அதை முகர்ந்து பார்க்கும். தன்னுடையது அல்ல என்று தெரிந்ததும், அதை முட்டி தள்ளி விடும்.

சரி... தாயை இழந்த இளம் குட்டியை, வேறொரு ஆட்டிடம் பால் குடிக்க செய்வது எப்படி?

தாய் ஆட்டின் பாலை கொஞ்சம் எடுத்து குட்டி ஆட்டின் முகத்திலும், பின்புறத்திலும் தடவி விட்டால், மோப்பம் பிடிக்கும்போது, வரும் வாசனையை வைத்து, தன் குட்டி என்று அதை ஏற்றுவிடும்.

மேய்ச்சலுக்கு செல்லும்போது, முதலில் செல்லும் ஆடு போகிற வழியிலேயே சற்றும் பிறழாமல், மற்ற ஆடுகள் செல்லும். இயல்பாகவே, மலை உச்சி, செங்குத்தான பாறைகள், இவற்றின் மேல் ஏறி நின்று மேயும் திறன், ஆடுகளுக்கு உண்டு.

இதுபோன்ற உயரமான இடங்களில் ஏறி நின்று மேயும் திறமை, மாடுகளுக்கோ, குதிரைகளுக்கோ, ஏன், மற்ற எந்த கால்நடை இனத்திற்கும் கிடையாது. ஆடுகளின் குளம்புகள் கூர்மையாகவும், பிளவுபட்டும் இருப்பதே, இதற்கு காரணம்.           