திருத்­திய திருட்டு நாட­கம்!

பதிவு செய்த நாள் : 12 ஏப்ரல் 2019

சிவ­காசி, அரசு மேல்­நி­லைப் பள்­ளி­யில், 1982ல் படித்­தேன். உடன் படித்த மாண­வன், தினேஷ், பள்­ளிக்கு வெளியே, மிட்­டாய் விற்­கும் பாட்­டியை, கண்­ணி­மைக்­கும் நேரத்­தில் ஏமாற்­று­வான். கொடுக்­கும் காசுக்கு அதி­க­மாக, மிட்­டாய், இலந்தை பழம் எடுத்து வரு­வான்.

பல­முறை நான் கண்­டித்­தும், திருந்­த­வில்லை. வறு­மை­யில் வாடிய போதும், உழைத்து வாழ எண்­ணிய அந்த பாட்­டியை ஏமாற்­றி­யது, என் நிம்­ம­தி­யைக் குலைத்­தது. அவ­னுக்கு பாடம் புகட்ட காத்­தி­ருந்­தேன்.

தேர்­வுக்­கட்­ட­ணம் செலுத்த வேண்­டிய நாள் வந்­தது. அதற்­காக, அவன் கொண்­டு­வந்த பணத்­தைக் காண­வில்லை. அழுது புரண்­ட­படி, 'அந்த பாட்­டியை ஏமாற்­றிய பாவத்­தால் தான், பணம் காணா­மல் போய்­விட்­டது...' என்று கண்­ணீ­ரு­டன் சொன்­னான்.

அவனை, தனியே அழைத்து சென்று, பணத்தை கொடுத்­தேன்; ஆச்­ச­ரி­யத்­தில், ஆனந்­தக் கண்­ணீர் வடித்­தான். அன்று முதல், ஏமாற்­று­வதை விட்­டான்.

அவனை திருத்த, நான் போட்ட திருட்டு நாட­கம் அது. இன்­றும் அந்த நாட­கத்தை பெரு­மை­யாக, தன் பிள்­ளை­க­ளி­டம் கூறி மகிழ்­கி­றான்!

–- எஸ்.குமார், சிவ­காசி.