கால்வாய்க்கு நன்றி!

பதிவு செய்த நாள் : 12 ஏப்ரல் 2019

வத்சலபுரம் கிராமத்தில், குப்புசாமியும், மாணிக்கமும் வசித்து வந்தனர்; இருவரும் எதிரிகள்.

ஒரு நாள் - கிராமத்து ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுத்தது. துாண்டிலுடன் ஆற்றுக்குச் சென்றார், குப்புசாமி.

புது வெள்ளத்தில், ஏராளமான மீன்கள் வரும்; அவற்றை பிடித்து, நல்ல விலைக்கு விற்கலாம் என, நினைத்தார்.

அந்த ஊர் எல்லையில் ஓடியது ஆறு. அதன் அருகே, ஆழமான கழிவுநீர் கால்வாய் பாய்ந்தது.

வேகமாக நடந்த குப்புசாமியின் கால்கள் இடறி, 'பொத்...' என்று, கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். உடல் முழுக்க சாக்கடை படிந்தது; துாண்டிலை கெட்டியாகப் பிடித்தபடி, மிகவும் சிரமத்துடன் வெளியே வந்தார்.

சாக்கடை படிந்த கோலத்தோடு, பார்வையை சுழல விட்டார். அந்நேரம், அவரது பரம எதிரி மாணிக்கம் சிரித்தபடியே வந்தார்.

'போச்சுடா... இவன் பார்த்துட்டானா... ஊர் முழுக்க சொல்லிடுவானே' என, நினைத்தபடி வேகமாக நடந்தார். ஆற்று நீரில், சாக்கடை நீரைக் கழுவி உடலை சுத்தம் செய்தார்.

அங்கு வந்த மாணிக்கம், சிரித்தபடியே ஆற்றில் இறங்கினார். அவரது கள்ளச் சிரிப்பைக் கண்ட குப்புசாமி, 'சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவது நல்லது! இவனோடு, ஒரு உடன்படிக்கை செய்தால் தான், மானம் காப்பாற்றப்படும்' என்று முடிவு செய்தார்.

தாமதிக்காமல், மாணிக்கத்தின் அருகே வந்து, ''இதோ பாரப்பா... இதுநாள் வரையிலும், ஏதோ காரணத்தால், எதிரிகளாகயிருந்தோம்; இப்போது நண்பர்களாகி விடலாம்...'' என்றார்.

இதை எதிர்பார்த்த மாணிக்கம், பதில் கூறாமல் மவுனமாக நின்றார்.

உடனே குப்புசாமி, ''என்ன... எதுவும் பேசாமல் நிற்கிறாய்! உன்னோடு ஒரு உடன்படிக்கையை செய்கிறேன்; தினமும், ஆற்றில், இரண்டு மீன்களைப் பிடித்து தந்து விடுவேன்; நான், சாக்கடையில் விழுந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது...'' என்றார்.

''அவ்வளவு தானே... மீன்கள் தந்தால், நான் ஏன் சொல்லப் போகிறேன்; ஒருபோதும், மாட்டேன்...'' என்றார், மாணிக்கம்.

''அப்பாடா... இப்போது தான் நிம்மதி; எங்கே நீ ஒத்துக்கொள்ள மாட்டாயோ என்று நினைத்தேன்... நல்ல வேளை...'' என்றார், குப்புசாமி.

''உன் நன்றியை வைத்து என்ன செய்ய... எனக்கு மீன்களைப் பிடித்துக் கொடுத்தால் குழம்பு வைத்துச் சாப்பிடுவேன்...'' என்றார், மாணிக்கம்.

''சரி தான்... நீ குளிப்பதற்குள், மீன் பிடித்து தருகிறேன்...'' என்று கூறி, சற்று துாரத்தில் துாண்டிலை போட்டார், குப்புசாமி.

சிறிது நேரத்தில், இரண்டு பெரிய மீன்களைப் பிடித்து கொடுத்தார். அவற்றை வாங்கிய மாணிக்கம், 'வீட்டில் இனி தினமும் வித விதமான மீன் சமையல் தான்; முதலில், பல விதமாக மீன் சமைப்பது பற்றி தெரிந்து கொள்ள, ஒரு சமையல் புத்தகம் வாங்க வேண்டும்' என, எண்ணி மிக அலட்சியமாக சென்றார். அப்போது, கழிவுநீர் கால்வாயில் தடுமாறி விழுந்தார்; மீன்களும் சாக்கடையில் விழுந்தன.

சாக்கடையில் முழுக்க புரண்ட நிலையில், சிரமத்துடன் கரை ஏறினார். யாரும் பார்த்து விடக் கூடாதே என, வேகமாக ஆற்றை நோக்கி ஓடினார். அப்போது, மீன் பிடித்து திரும்பிக் கொண்டிருந்த குப்புசாமி, விழுந்து விழுந்து சிரித்தார். அவரைப் பார்த்த மாணிக்கம், ''ஊரில், யாரிடமும் இதை சொல்லி விடாதே... சற்றுப் பொறு; நான் குளித்து வந்து விடுகிறேன். ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளலாம்...'' என்றார்.

ஆற்றில் குளித்து சுத்தம் செய்தவர், ''நண்பா... அந்த துாண்டிலை கொடு; உனக்கு தினமும், இரண்டு மீன்களைப் பிடித்து தருகிறேன்; என் மானத்தை கப்பலேற்றி விடாதே...'' என்றார்.

தலை நிமிர்ந்த குப்புசாமி, துாண்டிலைக் கொடுத்து, ''உடனே, மீன்களை கொண்டு வா... காத்திருப்பேன்...'' என்றபடி வீட்டுக்கு நடந்தார்.

இந்த முறை, கழிவுநீர் கால்வாய் பகுதியில், கவனமுடன் நிதானமாக சென்றார். கர்வத்தை அழித்த கால்வாய்க்கு நன்றி சொன்னார்.

குட்டீஸ்... அலட்சியம், அறிவை இழக்க செய்யும் என்பதை உணருங்கள்.

–- செண்பகா பதிப்பகம்.