09 ஏப்ரல் 2019, 06:46 PM
நடிகர்கள் : சேரன், ஜெயபிரகாஷ், நரேன், செல்வா, ஒய்.ஜி. மகேந்திரா, யுகேந்திரன், ஜி. மாரிமுத்து, இ. ராம்தாஸ், சுனில் சவுத்ரி, மாணிக்க விநாயகம், ஷங்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், ஸ்ருஷ்டி டாங்கே, தீபா ஷா, இனியா மற்றும் பலர். இசை : கே, ஒளிப்பதிவு : சத்யா, எடிட்டிங் : காகின், தயாரிப்பு : கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ்.
திரைக்கதை, இயக்கம் : மிஷ்கின்.
ஓர் மழை இரவில் ஆட்டோ பிடிக்க காத்திருக்கும் இளம்பெண், ஆட்டோ ஒன்றில் மயங்கியிருக்கும் பெண்ணை கண்டு போலீசுக்கு தகவல் தர முயல்கிறாள். ஆனால் ஆட்டோ ஓட்டுநரால் கடத்தப்படுகிறாள்.
புது வருடத்தின் முதல் நாளில் கடற்கரை, பூங்கா என மர்ம அட்டைப்பெட்டிகள் கேட்பாரில்லாமல் கிடக்கின்றன. போலீஸ் திறந்து பார்க்க ஆண்களின் வெட்டப்பட்ட கைகள் கிடைக்கின்றன. வழக்கு சிபிசிஐடியைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஜே.கே. (சேரன்)விடம் ஒப்படைக்கப்படுகிறது. அவருக்கு உதவியாளர்களாக பிரகாஷ் (ஷங்கர்), தமிழ்செல்வி (தீபா ஷா) இருக்கிறார்கள். நேர்மையான நடத்தையால் பிரச்னைகளை சந்திக்கும் ஜே.கே. ஆறு மாதங்களுக்கு முன் காணாமல் போன தன் தங்கையை தேடிக்கொண்டிருக்கிறார்.
அரசு மருத்துவமனை பிணவறையில், வெட்டப்பட்ட கைகளை ஆராயும் டாக்டர். ஜூடாசை (ஜெயபிரகாஷ்) சந்திக்கிறார்கள். ஒரு ஜோடி கைகள் ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தியுடையது என்று தெரிந்து விசாரணையை தொடர்ந்து ராஜமாணிக்கம் எனும் நபரை தேடுகிறார்கள். ராஜமாணிக்கம் துன்புறுத்தப்பட்டு அவனது கைகள் வெட்டப்பட்டு முந்தைய சம்பவங்கள் போல அட்டைப்பெட்டியில் பொது இடத்தில் கிடைக்கிறது. ராஜமாணிக்கம் கடைசியாக சந்தித்த ரகுவைத் தேடிப்போக, ரகுவும் கொல்லப்பட, கொலையாளியை துரத்தும் ஜே.கே. அவனை தவற விடுகிறார். ரகுவோடு தங்கியிருந்த பிரிட்டோவைப் பற்றி விசாரிக்க வழக்கு டாக்டர். புருஷோத்தமனின் வழக்கோடு தொடர்பாகிறது.
இதற்கிடையே பச்சைநிற குவாலிஸ் வண்டி பெண்ணை கடத்த முயலும் ஆட்டோ ஓட்டுனரை தடுத்து அவனை கடத்திச் செல்கிறது.
உயரதிகாரிகளின் அனுமதியோடு புருஷோத்தமனின் வழக்கை மீண்டும் விசாரிக்கும் ஜே.கேவுக்கு, செப்டம்பர் மாதத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட புருஷோத்தமனின் வழக்கில் போலீசாரின் தகவல்கள் வேறாகவும், தெருவில் வசிப்பவர்கள், நண்பர்கள் சொல்லும் தகவல்கள் வேறாகவும் இருக்கின்றன. புருஷோத்தமனின் மகள் சுஜாவும், ஜே.கே.வின் தங்கையும் ஒரே நாளில் காணாமல் போனதை தமிழ்ச்செல்வி கண்டுபிடிக்கிறாள். முன்னர் அந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்துவிடம் (ஜி.மாரிமுத்து) தகவல்கள் சேகரிக்கிறார்கள். துரைப்பாண்டி (மாணிக்க விநாயகம்) தனது துணிக்கடையில் பெண்கள் (சுஜாவும் அதில் ஒருவர்) உடை மாற்றுவதை தனது அறையிலிருந்து பார்த்ததாக புகார் அளிக்கப்படுகிறது. ஆனால் அவரது மேனேஜர் நாதமுனி அந்தப் பழியை ஏற்றுக்கொள்கிறான்.
திரிசங்குவும் அவனது கூட்டாளிகளும் இளம்பெண்களை கடத்தி, போதை மருந்து கொடுத்து ‘பீப் ஷோ’ நடத்தி அதன்மூலம் துரைபாண்டி மற்றும் நண்பர்களிடமிருந்து ஏராளமான பணத்தை பெறுகின்றனர். இதனால் பாதிக்கப்படும் சுஜா தற்கொலை செய்து கொள்ள, மகளது மரணத்தால் கொதிக்கும் சுஜாவின் பெற்றோர் புருஷோத்தமன், அன்னபூரனி மற்றும் நண்பர் ஜூடாஸ் பழிவாங்க முடிவெடுக்கிறார்கள். குடும்பத்தோடு இறந்ததாக நாடகமாடி, திட்டமிட்டு குற்றவாளிகளை ஒவ்வொருவராக கடத்தி தண்டிக்கிறார்கள்.
ஜே.கேவின் தங்கையை விடுவிப்பதற்காக ஜே.கே. பொறுப்பிலிருக்கும் சுஜாவின் தம்பி நிஷாந்தை (சுனில் சௌத்ரி) தன்னிடம் ஒப்படைக்குமாறு திரிசங்கு மிரட்டுகிறான். ஜே.கேவிற்காக அவனது உதவியாளர்கள் நிஷாந்தை விடுவிக்க, இரு தரப்பும் பின்னி மில்லில் சந்திக்கிறது. துரை பாண்டி மற்றும் நண்பர்கள் குருடாக்கப்பட்டிருக்க, கடத்தப்பட்ட மற்றவர்கள் நாக்கு அறுக்கப்பட்டிருக்கின்றனர். இசக்கி முத்துவையும் அவனது கூட்டாளிகளையும் கொல்லும் புருஷோத்தமனும், அன்னபூரணியும் திரிசங்குவிடமிருந்து ஜே.கேவின் தங்கையை தங்களது மகளாக எண்ணி காப்பாற்றுவதற்காக உயிரிழக்கின்றனர். ஜே.கே. திரிசங்கை கொல்கிறான்.
குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை கிடைக்க, குடும்பத்தையே இழந்துவிட்ட நிஷாந்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் வேறு பெயரில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறான் ஜே.கே. பெற்றோரின் தியாகத்திற்கு அர்த்தம் தேடுமாறு நிஷாந்தை வாழ்த்தி அனுப்பி வைக்கும் ஜே.கே. மற்றும் டீமிற்கு ஆறு மாதத்திற்கான சஸ்பென்ட் ஆர்டர் கிடைக்கிறது.