ராமா... பட்சணத்தை மறக்காதே!

பதிவு செய்த நாள் : 09 ஏப்ரல் 2019

மகா பெரியவர் ஒரு முறை ‘ராமாயணம்’ பற்றி பேச, பக்தர்கள் ஆர்வமாக கேட்டனர்.

குழந்தைகள் வெளியூர் சென்றால் சாப்பிடுவதற்கு அம்மா, பட்சணம் கட்டிக் கொடுப்பாளே? அது போல, ராமன் காட்டிற்கு போன போது, அம்மா கவுசல்யாவும் பட்சணம் கொடுத்து அனுப்பினாள். ராமன் திரும்பும் வரை, அதாவது பதினான்கு ஆண்டுகளும் கெட்டுப்போகாத பட்சணம் அது!

கேள்விப்படாத செய்தியாக இருக்கிறதே என பக்தர்கள் வியந்தனர்.

பெரியவர் தொடர்ந்தார்.

''திரேதா யுகத்தில் வேதப் பொருளான பரமாத்மா, பூமியில் தசரதரின் குழந்தை ராமனாக வேடமிட்டு கொண்டது. இதன் பயனாக வால்மீகியின் சொல்லோவியமாக ‘ராமாயணம்’ நமக்கு கிடைத்தது. வேத சாரம்தானே ‘ராமாயணம்?’ அதில் எங்கு பார்த்தாலும் தர்மம் தான் கூறப்படுகிறது. கணவன் மனைவி, தந்தை பிள்ளை, தாய் மகன், அண்ணன் தம்பி என இப்படி எந்த உறவாக இருந்தாலும், அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்ற தர்மத்தை ‘ராமாயணம்’ நமக்கு போதிக்கிறது. வேதம் கதையல்ல; ஆனால் ராமாயணம் கதை. அதுதான் வித்தியாசம். மற்றபடி இரண்டும் ஒன்றே.

கவுசல்யா காட்டுக்கு போகிற ராமனுக்கு கெட்டுப்போகாத பட்சணமாக, தர்மத்தை கொடுத்தாள். 'ராகவா... வாழ்வில் நீ தர்மத்தை மறக்காமல் கடைப்பிடித்தால் அது உன்னை காக்கும்' என்று சொல்லி ஆசீர்வதித்தாள்.

மற்றவர் கேலி செய்வர் என்பதற்காக தர்மத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது.

காட்டிற்கு புறப்படும் முன் லட்சுமணன், ''அண்ணா, நீ தர்மத்தை கட்டிக்கொண்டு அழுவதால்தான் வாழ்வில் இத்தனை கஷ்டங்கள். இப்போது உத்தரவிட்டாலும், தந்தையிடம் போரிட்டாவது அயோத்தியை பெற்று தருகிறேன்'' என்று காட்டுக்கு புறப்படும் முன் கேட்டான். அதற்கு ராமன், ''நான் காட்டிற்கு செல்வதற்கு காரணம் விதியே தவிர, வேறு யாருமல்ல'' என பதிலளித்தான். வாழ்வின் இறுதி வரை தர்மத்தை உயிராக மதித்தான்.

தர்மம் தலை காக்கும் என்பார்களே? ராவணனின் பத்து தலைகளும், அவன் தர்மம் தவறியதால் போரில் உருண்டன. ராமன் அனுசரித்த தர்மம் அவன் தலையை காத்தது. அந்த தர்மம் என்னும், கெடாத பட்சணத்தை நாமும் வாழ்வில் பாதுகாக்க உறுதி கொள்வோம்'' என்றார்.