ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

பதிவு செய்த நாள் : 09 ஏப்ரல் 2019

* நிறைவேறாத ஆசையுடன் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பரிகாரம் என்ன? எம். மனோகரி ராமன், குமரி.

இதனை இரண்டுவிதமாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம். ஆசைகள் நிறைவேறாமல் ஒருவர் இறந்தால், அதை நிறைவேற்றிக்கொள்ள மறுபிறவியை ஒரு வாய்ப்பாக இறைவனே தருவார். அப்படி ஆசைப்பட்ட விஷயம் தர்மத்துக்குப் புறம்பில்லாததாக இருந்தால் அவருக்குப்பின் மற்றவர்கள் அதை நிறைவேற்றலாம். கோயில், பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்றவை அமைத்தல். இதனால் அந்த ஆன்மா சாந்தியடைவதுடன் மக்களும் பயனடைவர். மற்ற அற்ப ஆசைகளுடன் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொண்டாலே போதும்.

* ஜென்ம நட்சத்திரம் தெரியாதவர்கள் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வதன் பொருள் என்ன? அதன் பலன் யாரை சேரும்? அரு. நாச்சிமுத்து, நாகர்கோவில்.

சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வது என்பது நட்சத்திரம் தெரியாததால் அல்ல. அர்ச்சனை எனும் வழிபாட்டை சுவாமிக்கு செய்தால் நமக்கு வேண்டியதை அறிந்து சுவாமியே கொடுப்பார் என்ற உறுதியான நம்பிக்கை உடையவர்கள் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வார்கள். யார் பெயருக்கு செய்தாலும் உண்மை பக்தி எங்கிருந்து வருகிறதோ அங்கு பலன் தாமே சென்றடையும்.

* மனபயம் நீங்க என்ன சுலோகம் சொல்லி யாரை வணங்கலாம்? அ. மல்லிகா, தென்காசி.

துர்க்கையை வழிபட்டால் மனபயம் நீங்கும். ‘நன்றே வருகினும் தீதே வருகினும்’ எனத் துவங்கும் ‘அபிராமி அந்தாதி’ பாடலை பாடி வழிபட நலம்.

* சிவலிங்கத்தை வீட்டில் வைத்து பூஜிக்கலாமா கூடாதா? பி.கே. ஆறுமுகம், சுசீந்திரம்.

“நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளி செங்கமலப் பொற்பாதம் தந்தருளும்” எனும் மாணிக்கவாசகரது பாடலுக்கு, வீட்டில் சிவலிங்கத்தை வைத்து ஆத்மார்த்தமாக பூஜிப்பதே பொருள் என பெரியவர்கள் உரை எழுதியுள்ளார்கள். இப்படி செய்வது சகல ஐஸ்வர்யங்களையும் தரும் என சாத்திரங்களும் கூறுகின்றன.