விழிப்பு!

பதிவு செய்த நாள் : 09 ஏப்ரல் 2019

அண்ணனும் தம்பியும் ஒரு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று தம்பி விழித்துக் கொண்டு அண்ணனைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அண்ணனின் அமைதியை ரசித்தபடியே மீண்டும் தூங்கி விட்டான்.

திடீரென்று அண்ணன் விழித்துக் கொண்டான்: தம்பியைப் பார்த்தான். தம்பியின் அழகை ரசித்தபடியே மீண்டும் தூங்கி விட்டான்.

இப்படி ஒருவர் தூங்கும்போது ஒருவர் விழித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த பக்தன் ஒருவன் இறைவனிடம் கேட்டான்:

‘‘இறைவா, ஒருவர் மாற்றி ஒருவர் விழித்துக் கொள்கிறார்களே, இருவரும் சேர்ந்தாற்போல் விழித்துக் கொள்ளக்கூடாதா?’’

இறைவன் பதில் சொன்னான்:

‘‘கூடாது. இருவரும் சேர்ந்தாற்போல் விழித்துக் கொள்ளாத வரையில்தான், இருவருக்கிடையே பாசம் இருக்கும்.’’

கவிஞர் கண்ணதாசனின் ‘குட்டிக் கதைகள்’ நூலிலிருந்து...