கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 174

பதிவு செய்த நாள் : 08 ஏப்ரல் 2019

பெண் பாத்திரங்களை நயமாக சித்தரித்த இயக்குநர் மகேந்திரன்!

மகேந்­தி­ரன் மறைந்­து­விட்­டார். எப்­போ­தும் எதிர்­நீச்­சல் அடித்­துக்­கொண்­டி­ருந்­த­வர்­தான் அவர்.  வியா­பார சுழ­லில் சுழன்­று­வ­ரும் தமிழ்  சினி­மா­வில், உள்­ளம் பேசும் மொழியை பேச வேண்­டும் என்று நினைத்­த­வர். பேசி­ய­வர்.

உதை வியா­பா­ரம், சதை வியா­பா­ரம் என்று எதை வியா­பா­ரம் செய்­ய­லாம் என்­ப­தைப்­பற்­றிக் கவ­லைப்­ப­டா­மல் நடப்­ப­வர்­கள் மத்­தி­யில், தன்­னு­டைய மன­தைத் தொட்ட கதை வியா­பா­ரத்தை மட்­டும் செய்ய வேண்­டும் என்று கரு­தி­ய­வர். அத­னால், மொத்­தம் பன்­னி­ரண்டு படங்­க­ளைத்­தான் அவ­ரால் இயக்க முடிந்­தது. அவர் தனக்கு அமைத்­துக்­கொண்ட வரம்­பு­களை எண்­ணும் போது, இது­வே­கூட ஒரு அதி­ச­யம்­தான் என்று தோன்­று­கி­றது!

ஆனால், 160 படங்­க­ளில் நடித்து, கோடி­க­ளில் புர­ளும் ரஜி­னி­காந்த், மகேந்­தி­ர­னின் ‘முள்­ளும் மல­ரும்’ படத்­தைத்­தான் தன்­னு­டைய நடிப்பு வாழ்க்­கை­யின் உச்­சா­ணிக்­கொம்­பாக நினைக்­க­வேண்­டி­

யி­ருக்­கி­றது. மலை அளவு செல்­வத்தை முன்­னிட்டு எடுக்­கப்­ப­டும் படத்­தில் கடு­க­ளவு மன­தைத்­தொ­டும் விஷ­யம் இல்­லா­மல் போகும்....செல்­வப் பகட்­டின் எந்த சாய­லும் இல்­லாத படத்­தில் உள்­ளத்தை நிரந்­த­ர­மா­கத்­தொ­டும் உணர்வு நிறைந்­தி­ருக்­கக்­கூ­டும்.  

இந்த வகை­யில், மகேந்­தி­ரனை உச்­சா­ணிக்­கொம்­பில் உட்­கார வைத்த ‘முள்­ளும் மல­ரும்’, இயக்­கு­ந­ராக அவர் செயல்­பட்ட முதல் படம். முதல் முயற்­சி­யி­லேயே தன்­னு­டைய திரைப்­பட உரு­வாக்­கத்­தின் உய­ரத்­தைத் தொட்­டு­விட்­டார் மகேந்­தி­ரன். இது­வும் ஒரு வினோ­தம்­தான். எடுத்த எடுப்­பில் நில­வுக்­குத்­தாவி விட்­டால் அடுத்து என்­ன­தான் செய்­வது? செவ்­வாய் கிர­கத்­திற்கா செல்ல முடி­யும்?

நல்ல  வேளை­யாக மங்­கல்­யா­னாக மகேந்­தி­ர­னுக்கு புது­மைப்­பித்­த­னின் ‘சிற்­றன்னை’ கிடைத்­தது. அந்­தக் கதை மகேந்­தி­ர­னுக்­குள் உசுப்­பி­விட்ட திரைக்­க­தை­தான், ‘உதி­ரிப்­பூக்­க’­ளாக மலர்ந்­தது. அந்­தக் கதை­யின் திரை உரி­மைக்­கான தொகையை மகேந்­தி­ரன் மரி­யா­தை­ யு­டன் செலுத்­தி­விட்­டார். ஆனால் எழுத்­தில் வடிக்­கப்­பட்ட கதை வேறு, திரைப்­ப­டம் வேறு என்ற உண்­மையை மகேந்­தி­ரன் மரி­யா­தை­யாக அறிந்­து­வைத்­தி ருந்­த­தன் கார­ண­மாக, ஒரு இலக்­கிய கதை­யில் பெற்ற உணர்வை அவ­ரால் ஒரு திரைக்­க­தை­யி­லும் அதன் வாயி­லா­கத் திரை­யி­லும் கொண்­டு­வர முடிந்­தது. மழை­நீ­ரைப் பெறும் நதி­யின் அணை, மின்­சா­ர­மாக அதை மாற்­றித்­த­ரு­வ­தைப்­போல், எழுத்து இலக்­கி­யம் தந்த உணர்வை சினிமா இலக்­கி­ய­மாக்­கித்

தரு­வ­தில் வெற்றி பெற்­று­விட்­டார் மகேந்­தி­ரன்.

இளை­யான்­கு­டி­யில் மகேந்­தி­ரன்  படித்­துக் கொண்­டி­ருந்­த­போது, ‘பரா­சக்தி’ போன்ற நீண்ட  வச­னங்­க­ளுக்­குப் பேர் பெற்ற படங்­கள் வெற்­றி­ய­டைந்­தி­ருந்­தன. திரை வச­னங்­க­ளைக் கூவித்­தி­ரிந்த பையன்­கள் போல, மகேந்­தி­ர­னும் அவற்­றைக் குறித்து நல்ல உற்­சா­கத்­து­டன் இருந்­தார்.  ‘இதெல்­லாம் சினி­மா­வா-டா?’ என்று மகேந்­தி­ர­னைக் கேட்ட அவ­ரு­டைய தாய்­மா­மாக்­கள்­தான், இந்த விஷ­யத்­தில் அவ­ரு­டைய ரச­னையை மாற்­றி­ய­வர்­கள். தமி­ழில் வந்­து­கொண்­டி­ருப்­பவை பேச்­சுக்­கச்­சே­ரி­கள், பேசும் படங்­கள் கூட அல்ல. நல்ல சினிமா என்­பது என்ன என்று தெரிந்­து­கொள்­ள­வேண்­டும் என்­றால், கோடை விடு­மு­றைக்கு மதுரை வரும் போது  ரீகல் திரை­ய­ரங்­கில்   வரும் ஹாலி­வுட் படங்­க­ளைப் பார் என்று தன்­னு­டைய தாய்­மா­மாக்­கள் கூறி­ய­தாக மகேந்­தி­ரன் பல­முறை பகிர்ந்­து­கொண்­டி­ருக்­கி­றார்.

தமி­ழில் வந்த திரைப்­ப­டங்­களை

இப்­ப­டிப்­பட்ட கோணத்­தி­லி­ருந்து கல்கி கிருஷ்­ண­மூர்த்­தி­யும் கூட தமிழ்ப் பேசும் படத்­தின் ஆரம்ப காலத்­தி­லி­ருந்தே சொல்­லி­வந்­த­வர்­தான். பிருத்­வி­ராஜ் கபூர் நடித்த ‘டாகு மன்­சூ’­ரைப்­பார், சைகல் நடித்த தெருப்­பா­ட­க­னைப் பார் என்று வடக்­கையோ, அதை­யும் கடந்து மேற்­கையோ அவர் நல்ல சினி­மா­வுக்கு உதா­ர­ண­மா­கக்­காட்­டு­வார். தவழ்ந்­து­கொண்­டி­ருந்த தமிழ் சினி­மா­வின் தத்­த­ளிப்­பு­களை அவர் அந்­தக் கண்­ணாடி கொண்­டு­தான் பார்த்­தார்.

ஐம்­ப­து­க­ளின் தொடக்­கத்­தில் தமிழ் சினி­மா­வைப் பிடித்த தீவிர வசன வைரஸ்­சின் வீரி­யம், விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய சில ஆண்­டு­க­ளி­லேயே குறைந்­து­விட்­டது. ஆனா­லும், நாட­கப்­பாணி காட்சி அமைப்­பு­கள், செயற்­கை­யான கதைப்­பின்­னல்­கள், திணிக்­கப்­

பட்ட காதல் டூயட்­டு­கள் என்ற  அதன் மற்ற தன்­மை­கள் மாற­வில்லை.

இந்த நிலை­யில், ஒரு சின்ன வேடத்­தில் ‘சதி லீலா­வதி’ படத்­தில் 1936ல் திரை­யு­ல­கிற்­குள் நுழைந்­தி­ருந்த எம்.ஜி.ஆர், இரு­பத்­தி­ரெண்டு வருட போராட்­டத்­திற்­குப் பிறகு, ‘நாடோடி மன்­னன்’ வாயி­லாக சிக­ரத்தை எட்­டி­யி­ருந்­தார். இந்­தப் படத்­தின் தயா­ரிப்­பா­ளர், இயக்­கு­நர், இரட்டை வேடங்­க­ளில் நடித்த ஹீரோ என்று எல்­லாமே அவர்­தான். ‘நாடோடி மன்­னன்’ எம்.ஜி.ஆரை ஒரு விதத்­தில் தமிழ் சினி­மா­வின் ‘முடி­சூடா மன்­னன்’ ஆக்­கி­யி­ருந்­தது.

‘நாடோடி மன்­ன’­னின் வெற்­றியை முனு­சா­மி-­மா­ணிக்­கம் உரை­யா­ட­லாக, விக­ட­னில் கொத்­த­மங்­க­லம் சுப்பு எழு­தி­யி­ருந்­தார். ‘‘என்ன த்ரில்லு. என்ன ஸ்டண்ட்டு !  ஒரு சீன்ல எம்.ஜி.ஆர். ஒரு பாலத்­தையே ஒரு  கையால் இழுத்­துப்­பி­டிச்சு விழாம நிறுத்­து­றாரு ! இன்­னொரு சீன்ல கோட்­டைக்­குள்­ளாற தண்ணி வந்­து­டுது. அங்கே ஒரு எம்.ஜி.ஆரை இன்­னொரு எம்.ஜி.ஆர். தூக்­கிக்­கிட்டு நூல் ஏணி வழியா ஏறி வெளியே வர்­றாரு. அப்­பு­றம் அண்ணே, சொன்னா கூட நீங்க நம்­ப­மாட்­டீங்க, எம்.ஜி.ஆரும்  எம்.ஜி.ஆரும் கை குலுக்­கு­றாங்க...அந்த எடத்­திலே போட்­டோ­கி­ராபி என்­னையே குலுக்­கி­டுச்சு....’’

இப்­ப­டி­யெல்­லாம் சாத­னைப் படைத்து, ‘நாடோடி மன்­னன்’ பெற்ற அபா­ர­மான வர­வேற்­புக்­குப் பின்­னர்,  மாநி­லத்­தில் எம்.ஜி.ஆர். வெற்­றிப்­ப­ய­ணம்  மேற்­கொண்­டி­ருந்­தார். இந்த வகை­யில், காரைக்­குடி அழ­கப்பா கல்­லூ­ரிக்­கும் வந்­து­சேர்ந்­தார்.  இதற்­குள், இளை­  யான்­கு­டி­யில் ஆறாங்­கி­ளாஸ் படிக்­கும் போது, ‘என் தங்கை’ படத்­திற்கு போஸ்­டர் ஒட்ட வந்­த­வர்­க­ளி­டம், ஒரு எம்.ஜி.ஆர். போஸ்­ட­ருக்­காக படா­த­பா­டு­பட்ட மகேந்­தி­ரன், அழ­கப்பா கல்­லூ­ரி­யில் பி.ஏ. பொரு­ளா­தா­ரம் படித்­துக்­கொண்­டி­ருந்­தார்.

‘நாடோடி மன்­னன்’ போன்ற எம்.ஜி.ஆர். படங்­கள், ஹாலி­வுட்­டின் டக்­ளஸ் பேர்­பாங்ஸ், எர்­ரல் பிளின் போன்­ற­வர்­க­ளின் ஆக் ஷன் படங்­க­ளின் தாக்­கம் கொண்­ட­வை­தான் என்­றா­லும், இளை­ஞர் மகேந்­தி­ர­னின்  பார்­வை­யில், தமிழ் சினி­மா­வின் போக்கு நகைப்­பிற்கு உரி­ய­தாக மாறி­விட்­டி­ருந்­தது. கல்­லூரி மாண­வர்­க­ளைத் தவிர, எம்.ஜி.ஆர். என்ற

எட்­டாத நட்­சத்­தி­ரத்தை கிட்ட இருந்து பார்க்க ஆயி­ர­மா­யி­ரம் மக்­கள் சுற்­று­ வட்­டா­ரத்­தி­லி­ருந்து வந்­தி­ருந்த நிகழ்ச்­சி­யில் பேசும் வாய்ப்பு, மகேந்­தி­ர­னுக்­குக் கிடைத்­தது. அந்­தப் பகு­தி­யிலே ஒரு காதல் விவ­கா­ரம் பூதா­க­ர­மா­னப் பிரச்­னை­யாகி, கொஞ்­சம் அசிங்­கப்­பட்­டுப்­போ­யி­ருந்த கால­கட்­ட­மாக அது இருந்­தது. எல்­லோ­ரும் அறிந்த இந்த கச­மு­சாவை சுட்­டிக்­காட்டி, நம்ம மத்­தி­யில் காதல்னா இவ்­வ­ளவு எதிர்ப்­பு­கள் இருக்க, சினி­மா­வில் ஹீரோக்­கள் ஊர­றிய, உல­கம் அறிய எப்­படி டூயட் பாடிக்­கொண்டு காத­லிக்­கி­றார்­கள் என்­கிற தோர­ணை­யில் மகேந்­தி­ரன் பேசத்­தொ­டங்­கி­னார். மூன்று நிமி­டங்­கள் பேச்­சுக்­காக ஒதுக்­கப்­பட்­டி­ருக்க, நாற்­பத்­தைந்து நிமி­டங்­கள் அந்­தப் பேச்சு நீண்­ட­தாம். மக்­கள் ரசிக்­கி­றார்­கள் என்­பதை உணர்ந்து, எம்.ஜி.ஆரும் அதை ஆமோ­தித்து உற்­சா­கப்­ப­டுத்­தி­விட்­டார்! மக்­கள் தில­கமா, கொக்கா? அது மட்­டு­மல்ல...‘‘நல்ல பேச்சு, நல்ல கருத்து. நகைச்­சு­வை­யு­டன் கூடியவன்­மை­யான உணர்ச்­சி­யு­டன் கூடிய

விளக்­கம். சிறந்த விமர்­ச­க­ராக இருக்­கத்­த­குந்­த­வர்.... வாழ்க....அன்­பன், எம்.ஜி.ராமச்­சந்­தி­ரன்’’  என்று எழு­திக் கொடுத்­து­விட்­டுப்­போ­னார் எம்.ஜி.ஆர்.!

இந்த வகை­யில் எம்.ஜி.ஆர். கொடுத்த சான்­றி­தழை, அப்­போது ஒரு ஓரத்­தில் கடா­சி­ய­தாக மகேந்­தி­ரன் கூறி­யி­ருக்­கி­றார். ஆனால் பின்­னா­ளில், எம்.ஜி.ஆர். முதல்­வ­ராக எல்­லாம் இருந்து மறைந்­த­பின்­னர், அவர் இளை­ஞர் மகேந்­தி­ர­னுக்கு மன­மு­வந்து தந்த சர்­டி­பி­கேட் மகேந்­தி­ர­னின் இல்­லத்­தில் பிரேம் போட்டு மாட்­டப்­பட்­டி­ருந்­தது!  

தமிழ் சினிமா எப்­ப­டி­யெல்­லாம் இருக்­கி­றது, ஏன் அப்­படி இருக்­கக்­கூ­டாது என்று விமர்­ச­னம் செய்த மகேந்­தி­ரன், சட்­டப்­ப­டிப்பு படிக்­கத்­தான் சென்னை வந்­தார்.  ஆனால் குடும்­பத்­தின் நிதி­நிலை அதற்கு இடம் கொடுக்­க­வில்லை. பத்­தி­ரிகை உல­கம் கைகொ­டுத்­தது. அது மீண்­டும் சினிமா தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யது.

எம்.ஜி.ஆரை முன்பு அழ­கப்பா கல்­லூரி வளா­கத்­தில் சந்­தித்த மகேந்­தி­ரன், இப்­போது பத்­தி­ரி­கை­யா­ள­ராக எம்.ஜி.ஆரின் ராமா­வ­ரம் தோட்­டத்­தி­லேயே அவரை சந்­தித்­தார்.  மகேந்­தி­ரன் பத்­தி­ரி­கை­க­ளில் இருக்­க­வேண்­டி­ய­வர் அல்ல, திரைப்­ப­டங்­க­ளின் உரு­வாக்­கத்­தில் பங்­க­ளிக்­க­வேண்­டி­ய­வர் என்று எம்.ஜி.ஆர். அவரை அடை­யா­ளம்­கண்­டு­கொண்­டார். ஆனால் என்ன வேடிக்கை என்­றால், அவ­ரும் எம்.ஜி.ஆரும் என்ன முயற்சி செய்­த­போ­தும், மகேந்­தி­ர­னின் எந்த ஆக்­க­மும் எம்.ஜி.ஆரின் படங்­க­ளில் எட்­டிப்­பார்க்­க­வில்லை!

எம்.ஜி.ஆரு­ட­னான தொடர்­பின்

கார­ண­மா­கத்­தான் மகேந்­தி­ர­னுக்கு தயா­ரிப்­பா­ளர் கே.ஆர்.பாலன் பரிச்­ச­ய­மா­னார். மகேந்­தி­ர­னின் எழுத்­தில் ‘நாம் மூவர்’, ‘சபாஷ் தம்பி’, ‘பணக்­கா­ரப்­பிள்ளை’ இந்த வகை­யில் வந்­தன. மகேந்­தி­ரன் எழு­திய ‘தங்­கப்­ப­தக்­கம்’ நாட­க­மா­க­வும் திரைப்­ப­ட­மா­க­வும் சக்­கை­போடு போட்­டது.

கதா­சி­ரி­யர், வச­ன­கர்த்தா, திரைக்­கதை அமைப்­பா­ளர் என்று மகேந்­தி­ரன் வளர்ந்­து­கொண்­டி­ருந்­த­போது, வியா­பா­ரச் சினி­மா­வின் சக­தி­யி­லி­ருந்து தப்ப அவர் துக்­ளக் பத்­தி­ரி­கை­யில் உத­வி­ஆ­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றிய காலங்­கள் உண்டு. அதிக ஊதி­யம் வராத அந்­தப் கால­கட்­டத்தை அவர் தனது ஒரு வசந்­த­கா­ல­மா­க­வும் நினைத்­தார். உண்­மை­யில், மகேந்­தி­ரன் தன்­னு­டைய சுதந்­திர தன்­மை­யை­யும் வெளிப்­பாட்­டை­யும் முதன்­மை­யா­கக் கொண்­டி­ருந்த ஒரு எழுத்­தா­ளர், கலை­ஞர்.  இவற்­றுக்கு முத­லி­டம் கிடைப்­ப­து­தான் அவ­ருக்கு சந்­தோ­ஷத்­தைத் தரக்­கூ­டி­ய­தாக இருந்­தது. பணம் சம்­பா­திப்­ப­தை­யும் விளம்­ப­ரம் பெறு­வ­தை­யும் அவர் பெரி­தாக நினைக்­க­ வில்லை.  தயா­ரிப்­பா­ளர் வேணு செட்­டி­யா­ரால் அவர் இயக்­கு­நர் ஆக்­கப்­பட்­ட­போது, ‘முள்­ளும் மல­ரும்’ படத்­தைத் தன்­னு­டைய உணர்­வில் தோய்ந்த பட­மாக அவர் எடுத்­தார்.  உமா சந்­தி­ரன் எழு­திய தொடர்­நா­வ­லின் கதா­பாத்­தி­ரங்­க­ளு­டன் அந்­த­ரங்­க­மாக பய­ணம் செய்து, ரஜி­னி­காந்த், ஷோபா,  படா­பட் ஜெய­லட்­சுமி முத­லிய நடி­கர்­க­ளின் வாயி­லாக தன்­னு­டைய தரி­ச­னத்தை வெளிப்­ப­டுத்­தி­னார். இது ஒரு கடி­ன­மான தவம் போன்ற வேலை. அதை வெற்­றி­க­ர­மாக அவர் செய்து முடித்­த­தால் அவ­ருக்கு நீடித்த புகழ் கிடைத்­தது. ‘உதி­ரிப்­பூக்­கள்’ படத்­தில், பிறரை சித்­ர­வதை செய்து தனக்கு சுகம் தேடும் ஒரு கொடூ­ர­னின் கதையை மிகைப்­ப­டுத்­தா­மல் சுரம் பிடித்­தார். ‘நெஞ்­சத்­தைக் கிள்­ளாதே’, ‘ஜானி’, ‘மெட்டி’ முத­லிய படங்­க­ளில் அவ­ரு­டைய யதார்த்த பாணி­யும் மனித உணர்­வு­களை நளி­ன­மா­க­வும் நயம்­ப­ட­வும் அணு­கும் போக்­கும் வெற்­றி­யைத் தந்­தன. ‘நண்டு’ படத்­தில் லனோ­வு­குக்­கும் சென்­னைக்­கும் அழ­கான பாலம் அமைத்­தார். பெண்­களை வெறும் போகப் பொரு­ளா­கக் காட்­டும் சினி­மாத்­த­னங்­க­ளி­லி­

ருந்து மகேந்­தி­ரன் வில­கி­யி­ருந்து அவர்­களை மிரு­து­வா­க­வும் சக மனி­தர்­க­ளா­க­வும் சித்­த­ரித்­தது, மகேந்­தி­ர­னின் தனித்­தன்­மை­யாக மிளிர்ந்­தது.

லட்­சி­யங்­களை நோக்கி நடை­போ­டும் மனி­தர்­கள்­கூட வாழ்க்­கைப்­பா­தை­யிலே சம­ர­சங்­களை செய்­து­கொள்ள நேரி­ட­லாம். அதை­யெல்­லாம் தாண்டி, தன்­னு­டைய சில திரைப்­ப­டங்­க­ளைக் கலப்­ப­டம் இல்­லாத கலை சிருஷ்­டி­க­ளாக தந்­தி­ருக்­கி­றார் மகேந்­தி­ரன். அவற்­றில்  சில வெற்றி அடைந்­தன. சில தோல்­வி­யைத் தழு­வின. இரண்­டி­லும் மகேந்­தி­ர­னுக்கு வெற்­றி­தான்.

கடைசி ஆண்­டு­க­ளில் மகேந்­தி­ரன் பாப்டா என்­கிற திரைக்­கல்வி நிறு­வ­னத்­

தில்  பேரா­சி­ரி­ய­ரா­க­வும் இருந்­தார். சில படங்­க­ளில் நடிக்­க­வும் செய்­தார். ‘தெறி’ படத்­தில் அவரை வில்­ல­னா­கப் பார்த்­தோம். கடை­சி­யில் தலை­கீ­ழா­கத் தொங்­க­வி­டப்­பட்­டி­ருப்­பார். ஆனால் தமிழ் சினி­மா­வில் தலை­கீ­ழாக இருக்­கும் பல விஷ­யங்­கள் மகேந்­தி­ர­னின் சினி­மா­வில் சீராக இருந்­தன என்­ப­து­தான் உண்மை.

 (தொட­ரும்)