ரசல் விளாசல்: பெங்களூரு ‘அவுட்’

பதிவு செய்த நாள் : 06 ஏப்ரல் 2019 02:59


பெங்களூரு:

ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணி நேற்று ஐந்தாவது தோல்வியை சந்தித்தது. வழக்கம் போல் ஆன்ட்ரு ரசல் 13 பந்தில் 48 ரன் விளாசி கோல்கட்டா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார். இதையடுத்து கோஹ்லி, டிவிலியர்ஸ் அரைசதம் வீணானது.

இந்தியாவில் ஐ.பி.எல்., சீசன்-12 தொடர் நடைபெற்று வருகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 17வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கோல்கட்டாவை எதிர்த்து பெங்களூரு மோதியது. கோல்கட்டா அணி இதுவரை விளையாடிய 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி அடைந்தது. அதே நேரம் நான்கு போட்டியில் விளையாடிய பெங்களூரு நான்கிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. இதனால், இப்போட்டியில் வெற்றி பெற கட்டாயத்தில் பெங்களூரு அணி இருந்தது.  உள்ளூர் ரசிகர்கள் முன் இந்த அணி எழுச்சி பெறும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

‘டாஸ்’ வென்ற பெங்களூ;ரு அணிக்கு பார்திவ் படேல், கேப்டன் விராத் கோஹ்லி இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன் (7.5 ஓவர்) சேர்த்த நிலையில், நிதீஷ் ரானா ‘சுழலில்’ பார்திவ் படேல் (24) சிக்கினார். அடுத்து டிவிலியர்ஸ் களம் வந்தார். கோஹ்லி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இவருடன் டிவிலியர்ஸ் இணைய ஸ்கோர் ‘ராக்கெட்’ வேகத்தில் பறந்தது. அதிரடியாக விளையாடிய கோஹ்லி 31 பந்தில் அரைசதம் அடித்தார். பெங்களூரு அணி 12.2 ஓவரில் 100 ரன் கடந்த போது இப்போட்டியில் பெரிய ஸ்கோரை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

இதை உறுதி செய்யும் வகையில் டிவிலியர்ஸ் 28 பந்தில் அரைசதம் அடுத்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்த நிலையில், ‘சைனாமேன்’ குல்திப் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து கோஹ்லி ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், கோஹ்லி 84 ரன் (49 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். சுனில் நரைன் பந்தில் டிவிலியர்ஸ் 63 ரன் (32 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) வெளியேறினார். முக்கிய கட்டத்தில் இருவரும் வெளியேற ஸ்டாய்னிஸ் அதிரடியில் இறங்கினார். கிருஷ்ணா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸ் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். முடிவில் பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. ஸடாய்னிஸ் (28), மொயீன் அலி (0) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா தரப்பில் நிதீஷ் ரானா, குல்தீப் யாதவ், சுனில் நரைன் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

கடின இலக்கை துரத்திய கோல்கட்டா அணிக்கு கிறிஸ் லின், சுனில் நரைன் இருவரும் துவக்கம் தந்தனர். ஷைனி வேகத்தில் சுனில் நரைன் (10) நடையை கட்டினார். பின் கிறிஸ் லின்னுடன் உத்தப்பா இணைந்தார். இருவரும் எதிரணி பந்து வீச்சை விளாசியதோடு ஒரு ஓவருக்க 10 ரன்கள் எளிதாக எடுத்து வந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உத்தப்பா 33 ரன் (25 பந்த, 6 பவுண்டரி) எடுத்து பவன் நெகி ‘சுழலில்’ சிக்கினார். தொடர்ந்து அசத்திய நெகி இம்முறை கிறிஸ் லின் (42) விக்கெட்டை வீழ்த்தி அணிக்கு திருப்புமுனை கொடுத்தார். தவிர முக்கிய கட்டத்தில் நிதீஷ் ரானா (37), கேப்டன் தினேஷ் கார்த்திக் (17) வெளியேறினர். 3 ஓவரில் 53 ரன் தேவை என்ற நிலையில் ஆன்ட்ரு ரசல் களத்தில் இருந்தார். இவர் இதுபோன்ற நேரத்தில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெறச் செயதிருந்தார்.

ஆட்டத்தின் 18வது ஓவரை ஸடாய்னிஸ் வீசினார். இந்த ஓவரில் ரசல் 2 சிக்சர் அடித்தார். தவிர இந்த ஓவரில் 23 ரன் கிடைத்தது. இதையடுத்து 2 ஓவரில் 30 ரன் தேவைப்பட சவுத்தீ பந்து வீச வந்தார். இந்த ஓவரில் ரசல் 4 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். கடைசி ஓவரில் 1 ரன் தேவைப்பட பெங்களூரு தோல்வி உறுதியானது. கோல்கட்டா அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆன்ட்ரு ரசல் 48 (13 பந்து, 1 பவுண்டரி, 7 சிக்சர்), சுவப்மன் கில் (3) அவுட்டாகாமல் இருந்தனர். பெங்களூரு தரப்பில ஷைனி, நெகி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.