ஐதராபாத்திடம் டில்லி ‘சரண்டர்’

பதிவு செய்த நாள் : 05 ஏப்ரல் 2019 00:13


புதுடில்லி:

டில்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பவுலர்கள் அசத்த ஐதராபாத் 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஐ.பி.எல்., சீசன்-12 தொடர் பல்வேறு மாநிங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 16வது லீக் ஆட்டம் டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இதில், உள்ளூர் அணியான டில்லியை எதிர்த்து முன்னாள் சாம்பியன் ஐதராபாத் மோதியது. டில்லி அணி இதுவரை விளையாடி நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி அடைந்துள்ளது. அதே நேரம் தான் விளையாடிய 3 போட்டிகளில் ஐதராபாத் 2 வெற்றி, ஒரு தோல்வி அடைந்துள்ளது. எனவே இந்த போட்டி டில்லி அணிக்கு முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது. உள்ளூர் ரசிகர்கள் முன் டில்லி அணி அசத்தும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே போட்டி துவங்கியது. இதில். ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் கேப்டன் புவனேஷ்வர் குமார் முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தார். டில்லி அணிக்கு பிரித்வி ஷா (11), தவான் (12) மோசமான துவக்கம் தந்தனர். ஒருமுனையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் போராட, மறுமுனையில் ரிஷாப் பன்ட் (5), ராகுல் திவேதியா (5) ஆட்டமிழந்தனர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், ரஷித்கான் பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் கிளீன் போல்டானார். இவர் 43 ரன் (41 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். கடைசி கட்டத்தில் கிறிஸ் மேரிஸ் (17) அக்சர் படேல் (23*) கைகொடுக்க டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார், முகமது நபி, சித்தார்த் கவுல் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஐதராபாத் அணிக்கு வர்னர், பேர்ஸ்டோவ் இருவரும் துவக்கம் தந்தனர். எதிரணி பந்து வீச்சை பேர்ஸ்டோவ் அடித்து நொறுக்கினார். இதையடுத்து ஸகோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன் (6.5 ஓவர்) சேர்த்த நிலையில், ராகுல் திவேதியா பந்தில் பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், இவர் 48 ரன் (28 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். ரபாடா வேகத்தில் வார்னர் (10) சரிந்தார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சரிய விஜய் சங்கருடன் மணிஷ் பாண்டே இணைந்தார். இஷாந்த் வேகத்தில் பாண்டே (10) சரிந்தார். இருந்தும் 13.5 ஓவரில் ஐதராபாத் 100 ரன் எடுத்தது. முக்கிய கட்டத்தில் விஜய் சங்கர் (16), தீபக் ஹூடா (10) நடையை கட்டினர். முடிவில் யூசுப் பதான் (9), முகமது நபி (17) அவுட்டாகாமல் கைகொடுக்க ஐதராபாத் அணி 1-.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்து வெற்றி பெற்றது.