திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம்

பதிவு செய்த நாள் : 01 ஏப்ரல் 2019 10:36

திருவாரூர்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு தென்னை, மூங்கிலால் அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரில் கடந்த 25-ஆம் தேதி தியாகராஜர் உற்சவ மூர்த்தி வைக்கப்பட்டு, அன்று முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இன்று அதிகாலை 5:00 மணிக்கு விநாயகர் மற்றும் முருகன் தேர்கள் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. காலை 7.10 மணிக்கு தியாகராஜரின் ஆழித்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.

நீலோத்பலம்பாள், சண்டிகேஸ்வர் தேர்களும் வடம் பிடித்து இழுத்து வரப்பட்டன.

ஆரூரா, தியாகராஜ, தியாகேசா என பக்தி முழக்கங்களுடன் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டு, வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு 1500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அடிப்படை மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூருக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் இருந்தும் இன்று திருவாரூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருவாரூர் ஆழித்தேர் உலகப் பிரசித்தி பெற்றது என்பதும் குறிப்பிடத் தக்கது.