கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 173

பதிவு செய்த நாள் : 01 ஏப்ரல் 2019

திரை இசையின் முதல் நட்சத்திர பாடகி, எம்.எல்.சந்தகுமாரி

ஜி.ராமநாத­னும், சி.ஆர். சுப்­ப­ரா­ம­னும்   தமிழ்  சினி­மா­வின் முதல் நட்­சத்­திர இசை­ய­மைப்­பா­ளர்­க­ளா­கத் திகழ்ந்­த­வர்­கள்.

இளம் இசை மேதை என்று கரு­தப்­பட்ட சி.ஆர். சுப்­ப­ரா­மன், ‘தேவ­தாஸ்’ படத்­திற்கு இசை­ய­மைத்­துக்­கொண்­டி­ருந்­த­போது, 29 வய­தி­லேயே திடீ­ரென்று மறைந்­து­விட்­டார்.

ஐம்­ப­து­க­ளின் தமிழ் சினி­மா­வில் முதன்­மை­யான இசை அமைப்­பா­ள­ரா­கக் கரு­தப்­பட்­டார் ஜி.ராம­நா­தன். ‘மந்­தி­ரி­கு­மாரி’, ‘தூக்­குத்­தூக்கி’, ‘வீர­பாண்­டிய கட்­ட­பொம்­மன்’, ‘கப்­ப­லோட்­டிய தமி­ழன்’ உட்­பட அறு­ப­துக்­கும் மேற்­பட்ட படங்­க­ளுக்கு இசை­ய­மைத்­தார்.

சுப்­ப­ரா­மன், ராம­நா­தன் ஆகிய இரு­வ­ருமே முதல் தரத்து சிறந்த பின்­ன­ணிப் பாட­கி­யாக எம்.எல். வசந்­த­கு­மாரி என்ற எம்.எல்.வியைப் போற்­றி­னார்­கள்.

‘‘சினி­மா­வில் பாட வரு­கி­ற­வர்­க­ளுக்கு உண்­மை­யான சங்­கீத ஞானம் இருக்­க­வேண்­டும். சாரீ­ரத் தெம்­பும், நய­மும் இருக்­க­வேண்­டும். அனு­ப­வித்­துப் பாட பல வசந்­த­கு­மா­ரி­கள் தோன்­ற­வேண்­டும். ஒரே ஒரு எம்.எல். வசந்­த­கு­மா­ரியை வைத்­துக்­கொண்டு எப்­ப­டித்­தான் பல படங்­க­ளுக்­குப் பாட வைப்­பது? சொந்­தக் கற்­ப­னைக்கு நேரம் இருக்­க­வேண்­டாமா?’’ என்று கேட்­டார் ஜி. ராம­நா­தன்.

‘சங்­கீத சக்­ர­வர்த்தி’, ‘ராக­நா­தன்’ என்­றெல்­லாம் அறிந்­தோர் போற்­றிய மேதை­யான ராம­நா­தன், இந்த வகை­யில் அங்­கீ­க­ரித்த பாட­கி­யான வசந்­த­கு­மாரி, ஜூலை 3, 1928 அன்று, கூத்­த­னூர் அய்­யா­சாமி அய்­ய­ருக்­கும் இசை வேளா­ளர் பிரி­வைச் சேர்ந்த மத­ராஸ் லலி­தாங்­கிக்­கும் பிறந்­தார்.

அய்­யா­சாமி நல்ல சங்­கீத வித்­வான்...லலி­தாங்­கிக்­குப் பாடம் எடுத்­த­வர். அவ­ரு­டைய மணா­ள­ரா­க­வும் ஆகி­விட்­டார்.

மீன்­குஞ்­சுக்கு நீந்த கற்­றுக்­கொ­டுக்­க­வேண்­டாம் என்­ப­து­போல் சங்­கீத ஜோடிக்­குப் பிறந்த வசந்­த­கு­மா­ரிக்கு சங்­கீ­தம் இயல்­பாக வந்­தது. இரண்டு வயது குழந்­தை­யாக இருக்­கும் போதே, தன் காதில் விழுந்த பாடல்­க­ளின் ஸ்வரங்­களை சொல்ல ஆரம்­பித்து விட்­டா­ராம்!  

ஆனால் டாக்­ட­ராக வேண்­டும் என்­ப­து­தான் வசந்­த­கு­மா­ரி­யின் இளம் பிரா­யத்து ஆசை.  பாட்­டுத்­தான் அவரை விடா­மல்   பற்­றிக்­கொண்­டது. பன்­னி­ரண்டு வய­தில் தாயு­டன் பாடி­னார்.

அந்த 1940ம் வரு­டம் அய்­யா­சாமி அய்­ய­ரும் லலி­தாங்­கி­யும் தாங்­கள் வெளி­யி­ட­வி­ருந்த ‘புரந்­த­ர­தாச மணி­மா­லை’யை பிர­பல சங்­கீத வித்­வான் ஜி.என்.பியி­டம் எடுத்­துச் சென்­றார்­கள். இந்த சந்­திப்­பின் விளை­வாக, வசந்­த­கு­மா­ரிக்கு ஜி.என்.பியி­டம் சங்­கீ­தப் பாடம் தொடங்­கி­விட்­டது! பதி­மூன்று வய­தில், பெங்­க­ளு­ரு­வில் முதல் கச்­சேரி செய்­தார் வசந்­த­கு­மாரி. அம்மா செய்­தி­ருக்­க­வேண்­டிய கச்­சே­ரியை அம்மா இடத்­தில் மகள் சென்று பாடி­னாள்.

உலக யுத்­தத்­தின் அதிர்­வு­கள் சென்­னை­யில் 1942ல்   தெரிந்­தன. பெரும்­பா­லான சென்­னை­வா­சி­கள் நக­ரை­விட்டு வெளி­யே­றி­னார்­கள். இந்த நிலை­யில் குடும்­பத்­தின் வரு­மா­னம் குறைந்­தது...தாய் நோய்­வாய்ப்­பட்­டார். சிறுமி வசந்தி சங்­கீ­தத்தை வைத்­துக் கொண்டு சம்­பா­திக்க வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­பட்­டாள்.

இதைப்­போன்ற நிர்ப்­பந்­தம் அவ­ரு­டைய கடைசி நாட்­க­ளில் தொடர்ந்­தது. வசந்­த­கு­மா­ரி­யின் ஒரு ஒலி­நாடா நிகழ்ச்­சியை தயா­ரித்த ஒரு இசை நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ளர் என்­னி­டம் சொன்ன விஷ­யம் இதற்கு சான்று.

அவர் வெளி­யி­டு­வ­தற்­கான நிகழ்ச்­சி­யைப் பாடி முடித்த பின், ‘‘இப்­போது உங்­க­ளால்

எவ்­வ­ளவு கொடுக்க முடி­யும்?’’ என்று எம்.எல்.வி. கேட்­டார்,

ஐயா­யி­ரம் கொடுத்­தார் இசை நிறு­வ­னத்­தின் முத­லாளி. அதில் ஆயி­ரத்தை உடன் பாடிய சிஷ்­யைக்­கும்,  இன்­னொரு ஆயி­ரத்தை வய­லின் வாசித்­த­வ­ருக்­கும், இன்­னொரு ஆயி­ரத்தை மிரு­தங்­கக் கலை­ஞ­ருக்­கும் கொடுக்­கச் சொன்­னார் வசந்­த­கு­மாரி.

அடுத்து, திரு­ம­ணம் நடத்த உதவி வேண்­டும் என்று கேட்டு வந்­தி­ருந்த ஒரு பெண்­ம­ணிக்கு ஆயி­ரம் கொடுக்­கச் சொன்­னார்.  மீதம் இருக்­கும் ஆயி­ரத்தை நான் கேட்­கும் போது கொடுங்­கள்...அதைத்­த­விர, நீங்­கள் ஒரு உதவி செய்­ய­வேண்­டும்....உங்­கள் காரில் என்னை வீட்­டில் விட்­டு­வி­டு­கி­றீர்­களா என்­றார் எம்.எல்.வி !

வீட்டை அடைந்­த­வு­டன், இசை நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ளரை உள்ளே அழைத்து, தேநீர் அருந்­தக்­கொ­டுத்­தார். இள­மைக்­கா­லத்து வெற்­றி­கள் வசந்­தங்­க­ளா­கத்­தான் குவிந்­தன. தன்­னு­டைய பிருகா சங்­கீ­தத்­தால் அனை­வ­ரை­யும் கவர்ந்த ஜி.என்.பி.யைப் போல், அவ­ரு­டைய இளம் சிஷ்­யை­யான வசந்­த­கு­மா­ரி­யும் கச்­சேரி மேடை­க­ளில் எல்­லோ­ரை­யும்

கவர்ந்­தார். பதி­னான்கு வய­தில் முதல் கிரா­ம­போன் இசைத்­தட்டு கொடுத்த எம்.எல்.வி (ஸ்வாதி திரு­நா­ளின் தோடி ராக கிருதி ஸர­ஸி­ஜ­நாப சோதரி), எம்.கே.தியா­க­ராஜ பாக­வ­தர் தயா­ரித்து நடித்த ‘ராஜ­முக்­தி’­­யில் வி.என்.ஜான­கிக்கு முதன்­மு­த­லில் பின்­னணி பாடி­னார் (1948). அப்­போது அவ­ருக்கு இரு­பது வயது. அடுத்த பத்து, பன்­னி­ரண்டு ஆண்­டு­க­ளில் அவ­ரு­டைய இத­மான குரல்  நூற்­றுக்­க­ணக்­கான  திரைப்­பா­டல்­க­ளில் சிறப்­பாக வெளிப்­பட்­டது.

கண்­ண­தா­சன் பாடல் எழு­திய முதல் பட­மான ‘கன்­னி­யின் காத­லி’­­யில், சி.ஆர். சுப்­ப­ரா­ம­னின் இசை­யில், திருச்சி லோக­நா­த­னு­டன் ஒரு காதல் பாடல் பாடி­னார் வசந்­த­கு­மாரி.

‘புவி­ராஜா என் ஆரு­யிர் ஜோதியே

பிரி­யா­மல் நாமே காதல் வாழ்­விலே’,

என்று தொடங்­கும் இந்த அழ­கான பாடல், விறு­வி­றுப்­பான நடை­யும், புது­மை­யான வாத்­திய இசை சேர்ப்­பும், மெட்­ட­மைப்­பில் நளி­ன­மும் கொண்­டி­ருக்­கி­றது. வசந்­த­கு­மா­ரி­யின் குர­லில் வந்து விழும் பொடி சங்­க­தி­க­ளும் அழ­கா­னவை. சுப்­ப­ரா­மன்- கண்­ண­தா­சன் சேர்க்­கை­யில் உரு­வான, ‘கார­ணம் தெரி­யா­மல் உள்­ளம் சந்­தோ­ஷம் கொண்­டா­டுதே’ என்ற பாட­லை­யும் வசந்­த­கு­மாரி பாடி­னார். மாண்ட் ராகத்­தில் அமைந்த இந்­தப் பாடல், காதல் உணர்ச்­சிக்கு முதன்­மு­த­லில் வசப்­ப­டும் பெண்­ணின் நாடித்­து­டிப்பை வெற்­றி­க­ர­மாக எதி­ரொ­லித்­தது.

சுப்­ப­ரா­ம­னின் இசை வல்­ல­மைக்கு ‘மண­ம­கள்’ ஒரு நல்ல எடுத்­துக்­காட்டு. இந்­தப் படத்­தில், பார­தி­யின் ‘சின்­னஞ்­சிறு கிளியே கண்­ணம்மா’ என்ற பாடல் மறக்­க­மு­டி­யாத வெற்­றிப் பாட­லாக அமைந்­து­விட்­டது. வி.என். சுந்­த­ரம் என்ற  பாட­க­ரோடு எம்.எல்.வி இசைத்த இந்­தப் பாடல், காபி, மாண்ட், வசந்தா, திலங், சிவ­ரஞ்­சனி ஆகிய ஐந்து ராகங்­க­ளில் அமைந்­தி­ருக்­கி­றது. திரைப்­பா­ட­லாக வெற்­றி­ய­டைந்து இந்­தப் பாடல், கச்­சேரி மேடை­க­ளி­லும் ஒலிக்­கி­றது.

வசந்­த­கு­மா­ரி­யும், லீலா­வும் சுத்­த­மான மர­பி­சை­யா­கப் பாடிய ‘எல்­லாம் இன்­ப­ம­யம்’ (பாடல் -சிம்­மேந்­தி­ர­மத்­தி­ய­மம்; ஸ்வரங்­கள் - ராக­மா­லிகை), மிக நேர்த்­தி­யாக அமைக்­கப்­பட்டு, மிக நளி­ன­மா­கப் பாடப்­பட்ட கர்­நா­டக திரைப் பாட­லாக அமைந்­தது. ‘எல்­லாம் இன்ப மயம்’ பாட­லில் அமைக்­கப்­பட்ட ஸ்வரக் கோர்­வை­கள்­போல் வேறெந்த திரைப்­பா­ட­லி­லும் காணக்­கி­டைக்­காது.  எம்.எஸ். ராஜேஸ்­வரி, டி.எஸ்.பக­வதி போன்ற பாட­கி­கள் ஏவி.எம் மில் மாதச் சம்­ப­ளத்­தில் பாடி வந்­தார்­கள். ஆனால், ஒரு சில பிரத்­யே­கப் பாடல்­களை வசந்­த­கு­மா­ரி­யைக் கொண்டு பாடச் செய்­தார் மெய்­யப்ப செட்­டி­யார். ஏவி.எம். ஸ்டூடியோ இருந்த வட­ப­ழனி பகு­திக்கு, 1950களில் பஸ்சோ, டாக்­சி­களோ வரா­த­தால், வசந்­த­கு­மாரி தன் கண­வர் ‘விக­டம்’ கிருஷ்­ண­மூர்த்­தி­யு­டன் குதிரை வண்­டி­யில் வரு­வார்.

இதே 1950ல், மாடர்ன் தியேட்­டர்­சின் ‘மந்­தி­ரி­கு­மா­ரி’­­யில் ‘ஆகா ஆனந்­தம்’, ‘காதல் பலி­யாகி நீ’ ஆகிய பாடல்­களை வசந்­த­கு­மாரி இசைத்­தார்.

ஏவி.எம்­மின் வாழ்க்­கை­யில் ‘மார்­வாரி  பாடல்’  என்ற பேரில் ஒரு பாட்டு - ‘நந்­த­கோ­பா­ல­னோடு நான் ஆடு­வேன்’. ‘ஆ’ என்ற எழுத்து அதி­ச­யக்­கு­றிப்­பா­க­வும் நந்­த­கோ­பா­லன் என்ற பெயர்ச்­சொல்­லு­டன் இணைந்து ‘ஆனந்த கோபா­லன்’ என்று அமை­யும்­ப­டி­யும், கவி­ஞர் காமாட்­சி­சுந்­த­ரம் எழு­தி­யி­ருப்­பார்.

வைஜ­யந்­தி­மா­லா­விற்­காக வசந்­த­கு­மாரி பாடிய இந்­தப் பாடல், குளிர்ச்­சி­யும், மென்­மை­யும், இனி­மை­யும் கொண்ட அவர் குர­லின் சுகத்­திற்கு நல்ல எடுத்­துக்­காட்டு. இதற்கு முன் ஏவி.எம்­மின் ‘ஓர் இரவு’ படத்­தில், ‘ஜயா சாமி, ஆவோஜி சாமி’ என்ற நரிக்­கு­ற­வர் பாடலை எம்.எல்.வி. பாடி­யி­ருந்­தார். சி. ராம­சந்­திரா ‘சமாதி’ என்ற படத்­தில் அமைத்த ‘கோரே கோரே பாங்கே சோரே’ என்ற மெட்­டில் இந்­தப் பாடல் அமைந்­தது.

சித்­தூர் நாகை­யா­வின் ‘தாயுள்­ளம்’ (1952) படத்­தில், ‘கொஞ்­சும் புறாவே’ ஒன்று போதும், வசந்­த­கு­மா­ரி­யின் குரல் நயத்­திற்கு. ‘மனி­தன்’ (குயிலே உனக்­க­னந்த  கோடி நமஸ்­கா­ரம்), ‘இன்ஸ்­பெக்­டர்’ (வரு­வாய் மன மோகனா), ‘மனம் போல் மாங்­கல்­யம்’ (சோலை நடுவே), ‘நால்­வர்’ (வான­வீ­தி­யில் பறந்­தி­டு­வோம்) என்று 1953ல் வெளி­வந்த பல படங்­க­ளில் வசந்­த­கு­மாரி குறிப்­பி­டும்­ப­டி­யான பாடல்­கள் பாடி­னார். விஸ்­வ­நா­தன் -ராம­மூர்த்தி இசை­யில் 1954ல் வந்த படம் ‘வைர­மாலை’ என்ற படத்­தில், திருச்சி லோக­நா­த­னு­டன்  வசந்­த­கு­மாரி பாடிய அழ­கான பாடல், ‘கூவா­மல் கூவும் கோகி­லம்’, கண்­ண­தா­ச­னின் வரி­க­ளில் உரு­வான நல்­ல­தொரு டூயட்..  

எம்.ஜி.ஆரின் வெற்­றிப்­ப­ட­மான ‘மதுரை வீர’­­னில், உடு­மலை நாரா­ய­ணக் கவி எழுதி, ஜி. ராம­நா­தன் இசை­ய­மைத்து. வசந்­த­கு­மாரி பாடிய, ‘ஆடல் காணீரோ’, மிகப்­பெ­ரிய வர­வேற்பை பெற்­றது. ‘ஆடும் அருள் ஜோதி’ (மீண்ட சொர்க்­கம் -– 1960), ‘அந்தி மயங்­கு­தடி’ (பார்த்­தி­பன் கனவு- – 1960) போன்­றவை வசந்­த­கு­மா­ரி­யின் சிறந்த நாட்­டி­யப் பாடல்­க­ளாக மிளிர்­கின்­றன.

கண்­ண­தா­ச­னின் கதை-–­­வ­ச­னத்­தி­லும், விஸ்­வ­நா­தன்- ராம­மூர்த்­தி­யின் இசை­ய­மைப்­பி­லும் உரு­வான படம், ‘மன்­னாதி மன்­னன்’ (1960). இதில் டி.எம்.சவுந்­த­ர­ரா­ஜ­னும் -வசந்­த­கு­மா­ரி­யும் சேர்ந்து பாடும் ‘ஆடாத மன­மும் உண்டோ’ பாட­லுக்கு வயது 50 என்­றால் யாரா­வது நம்­பு­வார்­களா? லதாங்கி ராகத்­தைப் படம்­பி­டிக்­கி­றது இந்­தப் பாடல். ‘வசந்­த­கு­மா­ரி­யு­டன் பாடப்­போ­கி­றோம் என்று எதிர்ப்­பார்ப்­பு­டன் காத்­தி­ருந்­தேன்’ என்று டி.எம்.எஸ். என்­னி­டம் கூறு­வார்.

திருப்­பாவை, திரு­வெம்­பாவை, தமிழ் தாலாட்­டுப் பாடல்­கள் ஆகி­ய­வற்றை வசந்­த­கு­மாரி பதிவு செய்­தார். இவை இற­வாத இசை இலக்­கி­யங்­க­ளா­கத் திகழ்­கின்­றன. திரைப்­பாட்­டி­லும் ராக இசை­யி­லும் முன்­னோ­டி­யாக விளங்கி ஆயி­ரக்­க­ணக்­கான ரசி­கர்­க­ளுக்கு எம்.எல்.வி. ஆனந்­தம் அளித்­தார்.  ஆனால் தன்­னு­டைய கடைசி ஆண்­டு­க­ளில் அவர் மகிழ்ச்­சி­யாக இல்லை.  எம்.எல்.விக்கு, சங்­கர்­ரா­மன் என்ற மக­னும் ஸ்ரீவித்யா என்ற மக­ளும் இருந்­தார்­கள். ஆனால், தன்னை வாழத்­தெ­ரி­யா­த­வர்­கள் லிஸ்ட்­டில் வைத்து  எண்­ணி­னார் .

‘‘என்­னைப் போல் அச­டாக இருக்­கா­தே’’­­என்று சீடர்­க­ளி­டம் கூறு­வார். பணத்­தைப் பெரி­தாக மதி­யாது இருந்­த­தை­யும், மனி­தர்­க­ளைப் பெரி­தாக மதித்­த­தை­யும் அப்­படி கூறி­னார். அது அவ­ரு­டைய நிதி­நி­லை­யைப் பாதிக்­கத்­தான் செய்­தது. எப்­ப­டி­யி­ருந்­தா­லும், அவர் விரும்­பி­யி­ருந்­தா­லும் அந்த அசட்டு குணங்­களை அவ­ரால் தள்­ளி­யி­ருக்­க­மு­டி­யாது. மேகம் பொழி­யாது இருக்­குமா? குயில் பாடாது இருக்­குமா? ஆனால் வசந்­தத்­தில் மட்­டும் அல்­லாது,  கடும் கோடை­யி­லும் பாலை­யி­லும் பாட வேண்­டிய கட்­டா­யத்­தில் அவர் இருந்­த­து­தான் சோகம்.  இசை­யில் லயிப்­ப­தும் பிற­ருக்கு இறங்­கு­வ­தும் வசந்­த­கு­மா­ரியை விட்டு நீங்­காத குணங்­க­ளாக இருந்­தன.

                                           (தொட­ரும்)