கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 172

பதிவு செய்த நாள் : 25 மார்ச் 2019

தமிழ் படத்தில் முதலில் அறிமுகமான பிரபல இந்தி இசையமைப்பாளர்

‘‘வாழ்க்கை என்­றால் ஆங்­கி­லத்­தில் லைப். என்­னு­டைய ஏவி.எம். ஸ்டூடி­யோ­வுக்கு லைப் கொடுத்­ததே ‘வாழ்க்கை’ என்ற படம்­தான்’’, என்று கூறிய ஸ்டூடியோ முத­லாளி ஏ.வி.மெய்­யப்ப செட்­டி­யார், அந்­தப் படம் வெற்­றி­ய­டைந்­த­தற்­கான ஒரு முக்­கிய கார­ணத்­தை­யும் புட்டு வைத்­தார்.

‘‘என்­னு­டைய ‘நாம் இரு­வர்’ படத்­திற்கு பார­தி­யார் பாடல்­கள் எப்­படி  மகத்­தான வெற்­றியை வாங்­கித்­தந்­த­னவோ, அது­போல் ‘வாழ்க்கை’ படத்­திற்கு ‘உன் கண் உன்னை ஏமாற்­றி­னால், என் மேல் கோபம் உண்­டா­வ­தேன், டடடா டடடா டடா­டடா’  என்ற பாடல்  வெற்­றி­யைத் தேடித்­தந்­தது’’, என்­றார் மெய்­யப்ப  செட்­டி­யார்.

இந்த வகை­யில் ‘வாழ்க்கை’ படத்­தின்

வெற்­றிக்கு உத­விய  பாடல், ‘கிடுகி’ (ஜன்­னல்) என்ற இந்தி படத்­தில் அமைந்­தி­ருந்­தது.

‘வாழ்க்கை’  தயா­ரிப்­பில் இருந்­த­போது ‘கிடு­கி’­­ப­டத்­தைப் பார்க்க,  தன்­னு­டைய இணை இயக்­கு­நர் ப. நீல­கண்­டன், ஸ்டூடியோ பாடகி எம்.எஸ். ராஜேஸ்­வரி, பாட­லா­சி­ரி­யர் கே.பி. காமாட்­சி­சுந்­த­ரம் ஆகி­யோ­ரு­டன் ஏ.வி.எம். செட்­டி­யார் ஒரு சினிமா அரங்­கத்­திற்­குச் சென்­றி­ருந்­தார்.

படத்­தைப் பார்த்­து­விட்டு வரும் போது, ‘கிடு­கி’­­யில் வந்த ‘கிஸ்­மத் ஹமாரே சாத் ஹை, ஜல்னே வாலே ஜலா கரேன்’ (‘அதிர்ஷ்ட காற்று எங்­கள் பக்­கம், பொறாமை கொள்­ப­வர்­கள் கொள்­ளட்­டுமே’) என்ற பாட­லின் மெட்டை, பாடகி எம்.எஸ். ராஜேஸ்­வரி முணு­மு­ணுத்­து­கொண்டு வந்­தார்.

ஒரு முறை கேட்­ட­வு­ட­னேயே திரும்­பப்­பா­டச் செய்­யும் இந்­தப் பாட­லின் மெட்­டில், ‘வாழ்க்­கை’­­யில் ஒரு பாடல் போட வேண்­டும் என்று நீல­கண்­டன் கூற ஆரம்­பித்­தார்.

பாட­லா­சி­ரி­யர் காமாட்சி, அந்த மெட்­டில் ‘உன் கண் உன்னை ஏமாற்­றி­னால்’  என்று தொடங்கி முழுப் பாட­லை­யும் எழுதி முடித்­தார்.

இந்­தப் பாடலை, கதா­நா­ய­கன் (டி.ஆர். ராமச்­சந்­தி­ரன்) பாடு­வ­து­போல் ஒரு முறை­யும், கதா­நா­யகி (வைஜெ­யந்­தி­மாலா) பாடு­வ­து­போல் ஒரு முறை­யும் படத்­தில் புகுத்­தி­னார்­கள். இர­வல் மெட்­டின் மீது அவ்­வ­ளவு நம்­பிக்கை! ஆனால் இர­வ­லாக இருந்­தா­லும் சொந்த சரக்­கை­விட அதி­கப்­ப­டி­யான வெற்­றியை இந்­தப் பாடல் வாங்­கிக் கொடுத்­தது என்று, பலனை நிறுத்­துப்­பார்ப்­ப­தில் மகா­கெட்­டிக்­கா­ர­ரான மெய்­யப்ப செட்­டி­யாரே வாக்­கு­மூ­லம் கொடுத்­து­விட்­டார்.

இந்த வகை­யில் ‘வாழ்க்­கை’க்கு வாழ்க்கை கொடுத்த  பாட­லின் ஒரி­ஜி­னல் மெட்டை உரு­வாக்­கி­ய­வர், சி. ராம­சந்­திரா. பிர­பல இந்தி பட இசை அமைப்­பா­ளர்.

வேடிக்கை என்­ன­வென்­றால், ஒரு தமிழ் படத்­தின் வெற்­றிக்கு இந்த வகை­யில் மகத்­தான முறை­யில் உத­விய சி. ராம­சந்­திரா, தமிழ் படங்­க­ளில் தான் முதன்­மு­த­லில் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மா­னார்! படம்  ‘ஜெயக்­கொடி’ (1940).

கே.டி. ருக்­மிணி நடித்த ஸ்டன்ட் பட­மான ‘ஜெயக்­கொ­டி’­­யில் இசை அமைப்­பா­ள­ராக ராம­சந்­திரா பணி­யாற்­றிய போது அவ­ரு­டைய வயது இரு­பத்தி இரண்டு கூட ஆகி­யி­ருக்­க­வில்லை. தமிழ் சினி­மா­வில் இசை­ய­மைப்­பா­ள­ராக மிக­வும் இளம் வய­தில் பணி­யாற்­றி­ய­வர் ராம­சந்­தி­ரா­வா­கத்­தான் இருப்­பார் என்று நினைக்­கி­றேன். ஆனால் இதற்கு சில ஆண்­டு­க­ளுக்கு முன் அவர் இன்­னும் ஒரு சாத­னையை நிகழ்த்­தி­யி­ருந்­தார்.

ஆறு அடி ஒரு அங்­கு­லம் உய­ரம் இருந்த  ராம­சந்­திரா, ‘நாகா­னந்த்’ என்ற மவு­னப்­ப­டத்­தில் பிர­தான ஆண் வேடத்­தில் நடித்­த­போது அவ­ருக்கு வயது பதி­னா­று­தான் இருக்­கும்!  ஆனால், வொய்.வி.ராவ் இயக்­கிய இந்­தப் படம் ஒரு முழுக்­காட்­சி­ கூட ஓட­வில்லை என்று பின்­னா­ளில் நகைச்­சுவை கலந்த தொனி­யில் ராம­சந்­திரா கூறு­வார் (பேசும் படங்­கள் பெரிய அள­வில் மக்­க­ளின் ஆத­ர­வைப் பெற்­றுக்­கொண்­டி­ருந்த கால­கட்­டத்­தில், ‘நாகா­னந்த்’ மவு­னப்­ப­ட­மாக வெளி­வந்­தது, அதன் தோல்­விக்கு முக்­கி­யக் கார­ண­மாக இருக்­க­லாம்).

இந்­தி யரயில்­வே­யில் ஸ்டேஷன் மாஸ்­ட­ராக இருந்­த­வர் ராம­சந்­தி­ரா­வின் தந்தை. அவ­ருக்கு இசை மீது அதிக நாட்­டம் இருந்­தது. தன்­னுடை மகன் ராம­சந்­தி­ராவை நிர்ப்­பந்­தப்­ப­டுத்தி சங்­கீ­தம் கற்க வைத்­தார். நாளாக நாளாக பைய­னுக்­கும் சங்­கீ­தத்­தின் மீது நாட்­டம் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­விட்­டது. ஆனால் இசை வாசம் பெரு­கி­ய­தும், படிப்பு படுத்த ஆரம்­பித்­து­விட்­டது. இந்த நிலை­மை­தான்,  

பள்­ளிப்­ப­டிப்பை முடிக்­க­வேண்­டிய வய­தில், படம் நடிப்­ப­தில் கொண்­டு­போய் விட்­டது.

முதல் பட­மான ‘நாகா­னந்’தே தோல்­வி­யாக முடிந்த பின்­னும், இன்­னும் இரண்­டொரு படங்­க­ளில் நடித்­தார் ராம­சந்­திரா. அதன் பிறகு, வாட்ட சாட்­ட­மா­க­வும் அழ­கா­க­வும் இருந்­தா­லும், நடிப்பு தனக்கு அவ்­வ­ள­வாக வர­வில்லை என்­பதை உணர்ந்­து­கொண்­டார் ராம­சந்­திரா. தனக்கு நடிக்­கும் வாய்ப்பு கொடுத்த  ஸொஹ்­ராப் மோதி­யின் தயா­ரிப்பு

நிறு­வ­னத்­தில் ஆர்­மோ­னி­யக்­கா­ர­ராக சேர்ந்­து­விட்­டார்.

நல்ல குரல் வளம் கொண்ட ராம­சந்­தி­ரா­விற்கு நன்­றா­கப் பாட­வும் வந்­தது.  ஆர்­மோ­னி­யக்­கட்­டை­கள் மீது அவ­ரு­டைய விரல்­கள் நர்த்­த­னம் செய்­வ­து­போல் நட­மா­டின. மீர் சாப் என்ற இசை­ய­மைப்­பா­ள­ருக்கு உதவி இசை­ய­மைப்­பா­ள­ரா­கப் பதவி உயர்வு பெற்­றார். சில பாடல்­களை உரு­வாக்­கி­னார். அந்­தப் பாடல்­கள் மீர் சாப்­பின் பெய­ரில்­தான் வந்­தன.

இந்­தக் கால­கட்­டத்­தில், ராம­சந்­தி­ரா­வுக்கு

பக­வான் தாதா என்­ப­வ­ரு­டன் நட்பு ஏற்­பட்­டது. ஒரு மில் தொழி­லா­ளி­யின் மக­னா­கப் பிறந்து தானும் தொழி­லா­ளி­யாக இருந்த பக­வான், மவு­னப்­ப­டக் காலத்­தில் திரை உல­கத்­தில் பிர­வே­சித்­தி­ருந்­தார். அதன் பிறகு நடி­க­ரா­க­வும், இயக்­கு­ந­ரா­க­வும் தயா­ரிப்­பா­ள­ரா­க­வும் சில சின்ன பட்­ஜெட் படங்­கள்

எடுத்­தார்.

இப்­படி பக­வான் எடுத்த தமிழ் படம்­தான்,

சி. ராம­சந்­திரா முதன் முத­லில் இசை­ய­மைப்­பா­ள­ராக செயல்­பட்ட ‘ஜெயக்­கொடி’. இந்­தப் படத்­தில், ராம் சிதல்­கர் என்ற பெய­ரில் அவர் குறிப்­பி­டப்­பட்­டார் (சிதல்­கர் என்­பது ராம­சந்­தி­ரா­வின் குடும்­பப்­பெ­யர்).

இலங்கை நடிகை தவ­ம­ணி­தே­வி­யும் எம்.கே. ராதா­வும் நடித்த பக­வா­னின் ‘வன­மோ­கி­னி’க்கு அடுத்­த­ப­டி­யாக ராம­சந்­திரா இசை­ய­மைத்­தார். ‘மாய­மிதே, இந்த மாநில வாழ்­வி­னிலே நேரும்’ (தவ­மணி, ராதா), ‘அலை­மோ­துதே’ போன்ற இனி­மை­யான ‘வன­மோ­கி­னி’ப் பாடல்­களை ரசி­கர்­கள் இன்­றும் கூட கேட்டு மகிழ்­கி­றார்­கள்.

பாடும் நட்­சத்­தி­ர­மான கே. எல். சைகல், இந்தி திரை இசை­யின் முடி­சூடா மன்­ன­ராக  இருந்த காலம் அது. சைகல் நடிக்­கும் படத்­திற்கு நீங்­கள் இசை அமைக்­க­லாம்  என்று ஆசை காட்டி, ஒரு தயா­ரிப்­பா­ளர் ராம­சந்­தி­ரா­வின் சம்­ப­ளத்தை ஆயி­ரத்­தில் இருந்து அறு­நூ­றா­கக் குறைக்­கப் பார்த்­தார்.  

‘‘அவர் சைகல் என்­றால் நான் ராம­சந்­திரா’’, என்று கூறி வில­கி­விட்­டார் ராம­சந்­திரா. அந்த அள­வுக்கு அவ­ரு­டைய தன்­னம்­பிக்கை வளர்ந்­தி­ருந்­தது.

பில்­மிஸ்­தான் என்ற பேன­ரில் தொடர்ந்து பல படங்­க­ளுக்கு இசை­ய­மைத்த ராம­சந்­திரா, பின்­னணி பாடல் முறை வளர்ந்து வந்த காலத்­தில், துணிந்து பல மாற்­றங்­க­ளைப் புகுத்­தி ­னார்.

முப்­ப­து­க­ளின் இடைக்­கா­லத்­தி­லி­ருந்து நட்­சத்­தி­ர­மாக பிர­ப­ல­மா­கி­யி­ருந்த நடி­கர் அசோக் குமார்,

தனக்­கான பாடல்­க­ளைத் தானே பாடிக்­கொண்­டி­ருந்­தார். அப்­படி அவர் பாடிய சில பாடல்­கள் ஹிட் ஆகின. இந்த நிலை­யில், அசோக் குமா­ருக்கு

முக­மத் ரபியை   ‘சாஜன்’ என்று படத்­தில்  பாட வைத்­தார் ராம­சந்­திரா. இதை அசோக்குமார்

கூட ஆரம்­பத்­தில் விரும்­ப­வில்லை என்­றா­லும்,

இது­ போன்ற பின்­ன­ணிப்­பாடல் முறை­யின்

சிறப்­பைப் புரிந்­து­கொண்டு அவ­ரும் அதை ஏற்­றார்.

இசை­ய­மைப்பு ஜாம்­ப­வா­னான அனில் பிஸ்­வா­சுக்கு உதவி இசை­ய­மைப்­பா­ள­ராக இருந்­தார் ராம­சந்­திரா. முன்­ன­வ­ரின் மிரு­து­வான மெல­டிப் பாணி­யி­லி­ரு­நது மாறி, ஆங்­கில ஜாஸ் மற்­றும் பாப் இசை­யின் வண்­ணங்­க­ளில் பாடல்­கள் அமைத்து, மக்­க­ளைக் கவர்ந்­தார்.

அனில் பிஸ்­வா­சி­டம் பணி­யாற்­றி­ய­போ­து­தான், ராம­சந்­தி­ரா­லதா மங்­கேஷ்­கரை முத­லில் கண்­டார். அதன் பிறகு தன்­னு­டைய இசை அமைப்­பா­ளர் அத்­தி­யா­யத்­தில் லதாவை  நூற்­றுக்­க­ணக்­கான பாடல்­கள் பாட வைத்­தார் (குறிப்­பாக சொல்­ல­வேண்­டும் என்­றால், மொத்­தம் 248 பாடல்­கள்).

 இவற்­றில் இரு முத்­துக்­க­ளைக் குறிப்­பி­ட­லாம். அவை­தான், ‘தும் கியா ஜானோ, தும்­ஹாரி யாத் மேன் ஹம் கித்னா ரோயே’ (உனக்­கென்ன தெரி­யும், உன்னை நினைத்து நான் எவ்­வ­ளவு அழு­தேன் என்று), ‘ராதா நா போலே நா போலே நா போலே ரே’ (ராதை பேச­வில்லை, பேச­வில்லை, பேச­வில்­லையே).

இந்த இரண்­டா­வது பாடல்,  கோவை பட்­சி­ராஜா ஸ்டூடி­யோ­வில் எஸ்.எம். ஸ்ரீரா­முலு நாயுடு எடுத்த ‘ஆசாத்’ என்ற படத்­தில் இடம்­பெற்­றது. ‘ஆசாத்’  என்­பது ‘மலைக்­கள்­ள’­­னின் இந்தி தய­ரிப்பு இல்­லையா? ‘மலைக்­கள்­ள’­­னில், ‘உன்னை அழைத்­தது யாரோ’ என்று பானு­மதி பாடும் கட்­டத்­தில், இந்தி படத்­தில் மீனா­கு­மாரி பாடு­வ­தாக அமைந்­த­து­தான், ‘ராதா நாபோலே’ பாடல். தனக்கு மிக­வும் பிடித்த பாகேஸ்­வரி ராகத்­தில்,  கவர்ந்­தி­ழுக்­கும் முறை­யில் இந்­தப் பாட­லுக்கு   மெட்­ட­மைத்­தார் ராம­சந்­திரா.

‘ஆசாத்’ என்ற வெற்­றிப்­ப­டத்­திற்கு ராம­சந்­திரா இசை­ய­மைக்க நேர்ந்­த­தைப்­பற்றி ஒரு உண்மை தக­வல் உண்டு. ‘மலைக்­கள்­ள’­­னின் வெற்­றிக்­குப்­பின், அதை இந்தி மொழி­யில் ஸ்ரீரா­முலு நாயுடு தயா­ரிக்க முற்­பட்­ட­போது, முத­லில் அவர் நவு­ஷாத்தை நாடி­னார். இரண்டு வாரங்­க­ளில் படத்­திற்­கான பத்­துப் பாடல்­கள் வேண்­டும் என்­றார். தான் பாடல்­கள் உற்­பத்தி செய்­யும் தொழிற்­சாலை இல்லை என்று கூறிய நவு­ஷாத், ஒரு பாடலை உரு­வாக்க அந்­தக் கால அவ­கா­சம் தேவைப்­ப­டும் என்­றார்.

ஏற்­க­னவே தயா­ரிப்பு வேலை­க­ளைத் தொடங்­கி­யி­ருந்த ஸ்ரீரா­மு­லு­விற்கு அவர் பணித்த இரண்டே வாரங்­க­ளில் பாடல்­களை உரு­வாக்­கிக் கொடுத்­தார் ராம­சந்­திரா. இசை­ய­மைப்­பில் ராம­சந்­திரா காட்­டிய இந்த வேகத்தை இசை­ய­மைப்­பா­ள­ரும் பாட­க­ரு­மான ஹேமந்த் குமாரே பாராட்­டி­யி­ருக்­கி­றார். ஆசாத்­தின் வெற்­றிக்­குப் பிறகு, இந்தி படங்­கள் எடுத்த தமிழ்­நாட்­டுத் தயா­ரிப்­பா­ளர்­க­ளின் ஆஸ்­தான இசை­ய­மைப்­பா­ளர் ஆகி­விட்­டார் ராம­சந்­திரா.

இந்த வகை­யில் அவர் இசை­ய­மைத்த படங்­கள் -- எம்.வி. ராம­னின் ‘பெஹ்லி ஜலக்’, ‘ஆஷா’ (தமி­ழில் ‘அதி­ச­யப் பெண்’), ஜெமி­னி­யின் ‘ராஜ்­தி­லக்’ (தமி­ழில் ‘வஞ்­சிக்­கோட்டை வாலி­பன்’), ‘பைகாம்’ (தமி­ழில் ‘இரும்­புத்­திரை’),  நாரா­ய­ணன் கம்­பெ­னி­யின் ‘தேவதா’ (‘கண­வனே கண்­கண்ட தெய்­வம்’ படத்­தின் இந்தி தயா­ரிப்பு), ‘இத்­யாதி’.

இந்த வரி­சை­யின் தமிழ் படங்­க­ளில், ‘வஞ்­சிக்­கோட்டை வாலி­ப’­­னுக்கு சி. ராம­சந்­தி­ராவே இசை­ய­மைத்­தார். ‘ராஜா மகள்’, ‘கண்­ணும் கண்­ணும் கலந்து’ போன்ற பாடல்­கள் மிகப்­பெ­ரிய வெற்­றியை அடைந்­தன.

இந்­தியா மீது 1962ல் சீனா போர் தொடுத்­த­போது, அன்­றைய இந்­திய அர­சாங்­கத்­தின் தவ­றான ராணு­வக் கொள்­கை­யால் இந்­தியா பல­வீ­ன­மாக இருந்­தது.  தங்­கள் இன்­னு­யி­ரைத் தந்து நமது நாட்­டின் எல்­லை­க­ளைப் பல ராணுவ வீரர்­கள் காத்­தார்­கள். இத்­த­கைய ஜவான்­க­ளைக் குறித்­துப் பிர­பல பாட­லா­சி­ரி­யர் கவி பிர­தீப் எழு­திய, ‘அய் மேரே வதன் கே லோகோன்’ (நாட்டு மக்­களே கேளிர்) என்ற பாட­லுக்கு சி.ராம­சந்­திரா இசை­ய­மைத்து, லதா­வைப் பாட வைத்­தார். தேச­பக்தி  ஏற்­ப­டுத்­தும் இற­வாப் பாட­லாக இது விளங்­கு­கி­றது.

‘ஜெயக்­கொ­டி’­­யு­டன் தன்­னு­டைய இசை­ய­மைப்­பைத் தொடங்­கிய ராம­சந்­தி­ரா­வுக்கு, கடைசி படங்­க­ளில் ஒன்­றாக ஒரு தமிழ் படம் அமைந்­தது வினோ­தம்­தான்.

மும்­பைக்கு இந்தி படம் எடுக்­கச் சென்ற எஸ். ராக­வன், ராம­சந்­தி­ரா­வின் இசை­யில் ‘பாட்­டொன்று கேட்­டேன்’ என்ற படத்தை எடுத்­தார். ‘குங்­கு­மம் பிறந்­தது மரத்­திலா’ (பி.பி. ஸ்ரீநி­வாஸ், சுசீலா), ‘அழகே உரு­வாய் அவள் வந்­தாள்’

(பி.பி.எஸ்.) உட்­பட, நான்கு இனி­மை­யான பாடல்­கள், 1971ல் வெளி­வந்த இந்­தப் படத்­தில் அமைந்­தன.

சென்­னை­யில் இருக்­கும் போது, பிர­பல ஜெமினி ஸ்தாப­னத்­து­டன் சம்­பந்­தப்­பட்­ட­தால், தமிழ் சினி­மா­வில் சிவாஜி உட்­பட பல முக்­கி­யஸ்­தர்­க­ளு­டன்  சி. ராம­சந்­திரா பழ­கி­னார். அரு­மை­யா­கப் பாடி அற்­பு­த­மாக இசை­ய­மைக்­கக்­கூ­டிய ராம­சந்­தி­ரா­வின் வெளிப்­ப­டை­யான,

 வசீ­க­ர­மான ஆளுமை தமிழ் நாட்­டில் பல­ரைக் கவர்ந்­தது.

(தொட­ரும்)