சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல்: மகேந்திர சிங் தோனி வருத்தம்

பதிவு செய்த நாள் : 24 மார்ச் 2019 14:11

சென்னை

நாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2019 தொடரின் முதல் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. சேப்பாக்கம் ஆடுகளம் முதல் பாதி சீசனில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். அதன்பின் பிட்ச் ‘ஸ்லோ’ ஆகிவிடும். முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் அடித்தாலே, கட்டுப்படுத்தக்கூடிய ஸ்கோராக இருக்கும்.

ஆனால் நேற்றைய ஆடுகளம் ‘ஸ்லோ’வாக இருந்ததுடன் முதல் ஓவரில் இருந்தே பந்து அதிக அளவில் ‘டர்ன்’ ஆகியது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஜடேஜா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் 8 விக்கெட்டுக்கள் சாய்த்ததுடன் பெங்களூர் அணியை 70 ரன்னில் சுருட்டினர்.

பின்னர் 71 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி எளிதில் கிடைத்துவிடவில்லை. 17.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்தே இலக்கை எட்டியது. பெங்களூர் அணியின் சாஹல் 4 ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மொயீன் அலி 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

வெற்றிக்குக்குப்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி கூறுகையில்,” பேசுகையில்

நாங்கள் விரும்பியது இதுபோன்ற ஆடுகளம் இல்லை என்று தெரிவித்தார். ஆடுகளம் இந்த அளவிற்கு ஸ்லோவாகவும், அதிக அளவில் பந்து திரும்பும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை.

இதே ஆடுகளத்தில் நாங்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினோம். அப்போது பந்து இந்த அளவிற்கு திரும்பவில்லை. இந்த ஆடுகளம் சிறப்பான வகையில் மாற வேண்டியது மிகவும் அவசியமானது. எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அடித்த ஷாட்டுகளை வைத்தும், மற்ற அணிகள் சிறப்பாக சுழற்பந்து வீச்சை கொண்டிருந்தாலும், நாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் அல்ல” என்று தோனி கூறினார்.