ஹோலி பண்டிகை: குடியரசு தலைவர், பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2019 11:15

புதுடில்லி

நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்

வட இந்திய மக்களால் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசி ஹோலி பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு நாட்டு தலைவர்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

பார்சிக்கள், காஷ்மீர் பண்டிட்கள், ஜியா முஸ்லிம்கள் ஆண்டு தோறும் மார்ச் 21 ந்தேதியை ஹோலித் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்தியாவில் உள்ள இந்துக்களும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களும் ஹோலி பண்டிகை கொண்டாடுகிறார்கள்.

குடியரசுத் தலைவர் வாழ்த்து

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில்,

”இந்திய குடிமக்கள் மற்றும் உலக நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி சகோதரத்துவம், அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அனைவரின் வாழ்க்கையிலும் கொண்டு வரட்டும்” என்று குடியரசுத் தலைவர் பதிவிட்டுள்ளார்.

குடியரசு துணை த்தலைவர் வாழ்த்து

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு டுவிட்டரில்,

”தீமையை நன்மை வென்றதை கொண்டாடும் பண்டிகை ஹோலி. இந்த பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் அமைதி, இணக்கம், செழிமை மற்றும் மகிழ்ச்சியை வழங்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பதிவில்,

”ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மகிழ்ச்சியின் பண்டிகையான ஹோலி, ஒற்றுமை மற்றும் நல்லெண்ண நிறங்களை மேலும் வலுபடுத்தட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்

ராகுல் காந்தி வாழ்த்து

காங்கிரஸ் தலைவ ராகுல் காந்தி டுவிட்டரில்,

”ஹோலி பண்டிகையான இன்று, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஹோலி பண்டிகை, உங்கள் வாழ்க்கையை மேலும் பிரகாசமடைய செய்து மகிழ்ச்சியை இறைவன் வழங்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடு வாழ்த்து

ஆந்திர பிரதேச முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு டுவிட்டரில்,

”நிறங்களின் திருவிழாவான ஹோலி அனைவரின் வாழ்க்கையில் மிகுதியான சந்தோஷத்தையும் அமைதியை தரட்டும். அனைவருக்கும் ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி வாழ்த்து

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி டுவிட்டரில்,

”அனைவருக்கும் ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள். அனைவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியால் நிரம்பட்டும். உங்களின் சந்தோஷம் மற்றவரை வருந்த செய்யக்கூடாது.

புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் மரணமடைந்தனர். அவர்களின் நினைவாக, இந்த வருடம் ஹோலி பண்டிகைகளில் நான் கலந்துகொள்ளப்போவது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து

டில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில், 

”அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாயாவதி வாழ்த்து

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி டுவிட்டரில்,

”ஹோலி பண்டிகையை முன்னிட்டு, என் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். ஹோலி பண்டியைகை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். ஆனால், உங்களை சுற்றி இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் வகையில் கொண்டாடுவதை மறவாதீர்கள். மேலும், மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியலமைப்பு கடமையை நிறைவேற்ற உங்கள் மதிப்புமிக்க வாக்கை செலுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

அகிலேஷ் யாதவ் வாழ்த்து

சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ்,

”ஹோலி பண்டிகையை முன்னிட்டு அனைவரின் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.