என்னைய்யா...

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2019

பிளஸ் 2 படிக்கும் போது, வகுப்பு மாணவர்களில் பலர், தமிழாசிரியரை, 'சார்...' என்று அழைப்போம்.

'மற்ற ஆசிரியர்களை, 'சார்' என்றும், தமிழாசிரியரை, 'ஐயா' என்று தான் அழைக்க வேண்டும்...' என்றார் தமிழாசிரியர்.

ஒரு நாள், தமிழாசிரியரை, காய்கறிக் கடையில் பார்த்திருக்கிறான் குறும்புக்கார மாணவன் ஒருவன்.

உடனே, கிண்டலாக, 'என்னய்யா... காய்கறிகள் எல்லாம் வாங்கியாச்சா...' என, ஒருமையில் கேட்டிருக்கிறான்.

இதை, சற்றும் எதிர்பாராத தமிழாசிரியரும், கடைக்காரரும் நண்பனை முறைக்க, 'ஐயா... நீங்க தானே அப்படி அழைக்கச் சொன்னீங்க...' என்று கூறி, அங்கிருந்து நழுவி விட்டான்.

மறுநாள், வகுப்புக்கு வந்த தமிழாசிரியர், சம்மந்தப்பட்ட மாணவனை எழுப்பி, 'ஏன்டா மடையா... ஐயா என்ற வார்த்தையை, மரியாதையாக எப்படி அழைக்க வேண்டும் என்பது கூட தெரியாதா...' என திட்டி, அறிவுரை வழங்கி, அன்றைய தமிழ் பாடவேளை முழுவதும் நிற்க வைத்தார்.

'இனி, பள்ளி வளாகத்தில் மட்டும் ஐயா என்று அழைத்தால் போதும்; வெளியிடங்களில் சார் என்றே அழைக்கலாம்...' என, ஒரு புதிய உத்தரவை போட்டார்.

பள்ளிக் கூட வாழ்வில் நடந்த இந்த சம்பவம், தமிழாசிரியர்கள் பற்றி இப்பகுதியில் அடிக்கடி படிப்பதால், நினைவுக்கு வந்தது!

–- எஸ்.விக்ரமன், நாகப்பட்டினம்.