பளார்...!

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2019

கடந்த, 1966ல், மதுரை ஷெனாய் நகர், நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்தேன்.

வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணசாமி, போலீஸ் அதிகாரி போல, மிடுக்கும், கண்டிப்பும் மிக்கவர்.

ஒரு நாள், மேஜை டிராயரின் சாவியை, வீட்டில் மறந்து வைத்து, விட்டார். அன்று பாடம் நடத்த, பாட புத்தகங்கள், வருகை பதிவேடு, சாக்பீஸ், டஸ்டர் அனைத்தும், வெளியே எடுக்க வேண்டும்.

அவரிடம், மாற்றுச் சாவியும் இல்லை. சிறிது யோசனைக்குப் பின், 'இதை, யாராவது திறக்க முடியுமா...' என்று கேட்டார்.

எந்த மாணவனும் முன் வராத போது, முன் வரிசையில் அமர்ந்திருந்த நான், 'சேப்டி பின்' வைத்து, டிராயரை திறந்தேன்.

'இதற்காக, ஆசிரியர் என்னை பாராட்டுவார்' என்று, நினைத்திருக்க, நடந்ததோ வேறு!

'பளார்...' என்று, என் முதுகில் ஒரு அடி வைத்தார் ஆசிரியர். எதுவும் விளங்காமல், வலியுடன் அவரை ஏறிட்டேன்.

'சாவி இல்லாமல் பூட்டைத் திறக்க, உனக்கு தெரிந்திருக்கலாம். இந்த திறமையை, நீ வளர்த்தால், பிற்காலத்தில், இதுவே திருட்டு தொழிலுக்கு வழி வகுக்கும். இதுவே, கடைசி சம்பவமாக இருக்கட்டும். இனி, இதுமாதிரி முயற்சிக்காதே; நன்றாக படித்து முன்னேரப்பார்...' என்று, அறிவுரை கூறினார்.

படிப்பு முடிந்த பின், வங்கி அதிகாரியாக பணிபுரிந்தேன்; பெட்டகத்தின் சாவிகளை கையாளும் போது, அவர் கூறிய அறிவுரை, ஞாபகத்தில் வரும்.

அறியாத வயதில், தவறான திறமைகளை வளர்த்துக் கொள்வதை தடுத்து, நல்வழிப்படுத்திய ஆசிரியர், அன்று கூறிய அறிவுரையை, பணி ஓய்வில் இருக்கும், இந்நாட்களில் கூட, நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்!

–- பி.விஜயகுமார், கோவை.