கஞ்சன்!

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2019

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில், 1991ல், 12ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்!

ஏழ்மையின் காரணமாக, பள்ளியில் வழங்கும் மதிய உணவை சாப்பிடுவேன். 10ம் வகுப்பிற்கு மேல், சத்துணவு கிடையாது. ஆனாலும், என் சூழ்நிலையைப் பார்த்து, வழங்கினர்.

வாங்கிய உணவை, சக நண்பனுடன் சாப்பிடுவது வழக்கம். அவன் வீட்டில் கொடுத்து அனுப்பும் சாப்பாடு மற்றும் காய்கறிகளை முழுதும் சாப்பிடாமல், தினமும் கீழே கொட்டுவான்; பலமுறை கூறியும் கேட்கவில்லை.

எதையும் வீணாக்க மாட்டேன்; சத்துணவு சாப்பிடுவதை கிண்டலடித்து, 'ஒன்று விடாமல் சாப்பிடும் கஞ்சன்...' என்பான்; கண்டுக் கொள்ளமாட்டேன்.

'நண்பன் மனம் மாற வேண்டும்; உணவின் அருமை தெரிய வேண்டும்' என்பதற்காக, ஒரு நாள், வெளியூரில் உள்ள, ஆதரவற்றோர், முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றேன்.

அங்கு, பிறர் வழங்கும் உணவுக்காக ஏங்கும், அவர்களின் நிலையைப் பார்த்து, மனம் கலங்கினான். கிளம்ப மனமில்லாமல், யோசித்தபடியே இருந்தான்; என்னவென்று கேட்டேன்.

'ஒன்றுமில்லை...' என்று கூறிய அவன், அன்றிலிருந்து, அந்த இல்லத்திற்கு, வாரம் ஒருமுறை சென்று, ஒரு நாள் உணவுச் செலவை, தன் பெற்றோரிடமிருந்து வாங்கி வந்து, ஏற்றதுடன், எதையும் வீணாக்காமல் சாப்பிட ஆரம்பித்தான். இன்றும், அவனைச் சந்திக்கும் போது, இந்த நிகழ்வை, நினைவுப்படுத்தி மகிழ்வான்!

–- பா.செபஸ்தி ராசா, சிவகங்கை.