பூத உடலை விட்டு!

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2019


மன்னர் மருதன், பொன்னகரம் என்ற நாட்டை ஆண்டு வந்தார். அவருடைய கட்டுப்பாட்டின் கீழ், பல சிற்றரசர்கள் இருந்தனர்.

அந்த சிற்றரசர்களில் ஒருவன், மன்னருக்கு எதிராகக் கலகம் செய்வதை அறிந்த மன்னர், தம் அமைச்சரும், படைத்தளபதியும், நல்ல அறிஞருமான நேசமணியை, கலகம் செய்யும் சிற்றரசனை அடக்கி வருமாறு அனுப்பினார்.

நேசமணி சென்ற பின், ஒரு போலிச் சன்னியாசி மன்னரிடம் வந்தான்.

தனக்கு ஏதோ அமானுஷ்ய ஆற்றல்கள் இருப்பதாக பல புளுகு கதைகளைக் கூறி, மன்னரை நம்ப வைத்தான். அக்கதைகளை உண்மை என நம்பிய மன்னர், சன்னியாசிக்கு, சகல வசதிகளுடன் கூடிய, ஒரு மடத்தைக் கட்டிக் கொடுத்து, அதில், சுகமாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

தினமும், பல பொய்க் கதைகளைக் கூறி, கடவுளுக்குச் சமமான ஆற்றல் தனக்கு இருப்பதாக நம்ப வைத்து, மன்னரிடம் பெரும் செல்வாக்குப் பெற்று விட்டான், போலி சன்னியாசி.

அரசு காரியங்களை மறந்து, நாள் முழுவதும் சன்னியாசியுடன் உரையாடுவதையே விரும்பினார் மன்னர்.

அதனால், அரசு வேலைகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றன; இதனால், மக்களிடம் பெரும் அதிருப்தி பரவியது.

அச்சமயத்தில், சிற்றரசனை அடக்கச் சென்றிருந்த அமைச்சர் நேசமணி, தன் பணியை வெற்றிகரமாக முடித்து, அரண்மனை வந்து சேர்ந்தார்.

'மன்னர் போலிச் சன்னியாசியின் கபட நாடகத்தில் மயங்கி, அரசு காரியங்களைக் கவனிப்பதே இல்லை' என்ற செய்தியறிந்து, மிகவும் வருத்தப்பட்டார், நேசமணி.

சாமியாரின் மாய வலையிலிருந்து, மன்னரை மீட்பது அவ்வளவு எளிது அல்ல என்பதை புரிந்து கொண்ட நேசமணி, சாமியாரின் மோசடிகளை அம்பலப்படுத்துவதற்கு, சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தார்.

அமைச்சர் நேசமணி, தன் மீது அவநம்பிக்கை கொண்டிருக்கிறான் என்பதை அறிந்த சாமியார், அவரையும் ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டான்.

ஒரு நாள் -

காலையில், அவை கூடிய போது, அங்கே அமர்ந்திருந்த சன்னியாசி, 'மன்னா... நேற்றிரவு என்னுடைய இந்தப் பூத உடலை மடத்திலேயே விட்டு விட்டு, தேவ வடிவம் எடுத்து, மேல் உலகத்திற்குச் சென்று வந்தேன்.

'அங்கே, சொர்க்கத்தில் உம் மூதாதையர் இருப்பதைக் கண்டேன்; அவர்கள், தங்கள் நலனை விசாரித்தனர்...' என்று, ஒரு பொய்யை, கூசாமல் கூறினான்.

நேசமணி அதைக் கேட்டு, மிகவும் ஆச்சரியப்பட்ட மாதிரி நடித்து, 'அப்படியா... தயவுசெய்து, இன்று இரவும் சொர்க்கத்திற்கு சென்று, இறந்து போன, என் முன்னோரைக் கண்டு, அவர்களுடன் பேசி, என் பொருட்டு அவர்கள் கூறும் செய்திகளை வந்து கூறுங்கள்...' என்றார்.

அவ்விதம் செய்வதாக வாக்களித்தான், சன்னியாசி.

அன்றிரவு, சன்னியாசி உணவு உண்டு, படுக்கைக்குச் சென்று விட்ட பின், மன்னரை சந்தித்தார், நேசமணி.

'மன்னா... நம் சன்னியாசி தெய்வீக உருவத்துடனேயே, நம் சபையில் வீற்றிருக்கச் செய்ய, உபாயம் ஒன்று இருக்கிறது.

'இன்று இரவு, சன்னியாசி, மேல் உலகத்திற்குச் சென்று விடுவார். அவருடைய உயிர் இல்லாத சடலம் மட்டும், மடத்தில் கிடக்கும். நாம் மடத்தைத் தீயிட்டு கொளுத்தி விடுவோம். அவருடைய பூத உடல், எரிந்து விடும். சன்னியாசி தெய்வ உருவத்துடன் திரும்பி வந்து பார்த்தால், அவருடைய பூத உடல் இருக்காது. அதனால், அவருடைய உயிர், மனித உடலில் பாய வழியில்லாமல் போய் விடும்.

'ஆகவே, அவர் தெய்வீக உருவத்துடனேயே இருந்து விடுவார். அதே நிலையில், அவர் நமக்கும், மக்களுக்கும் தொடர்ந்து காட்சியளித்து வந்தால், உலகமே நம்மைப் போற்றிப் புகழும்...' என்றார்.

அதைக் கேட்ட மன்னர், அவ்விதமே செய்யுமாறு உத்தரவு கொடுத்தார்.

மடத்தின் கதவுகளை எல்லாம் வெளிப்புறம் பூட்டி, மடத்திற்கு தீ மூட்டி விட்டார், நேசமணி.

அதற்குப் பின்தான், சன்னியாசியின் போலித்தனம் மன்னருக்கு, புரிந்தது.

குட்டீஸ்... சாமியார் என்ற பெயரில் யார் என்ன கதை விட்டாலும், நம்பி விடக் கூடாது; அறிவை பயன்படுத்தி, இத்தகைய போலி சாமியார்களை துரத்தி விட வேண்டும்; போலிகளிடம் ஏமாந்துடாதீங்க...

–- சுவாமிமலை பதிப்பகம்.