கவர்ச்சியான தோற்றமில்லை... பட்டப்படிப்பும் இல்லை...

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2019

'கம்பீர தோற்றமோ, செல்வாக்கோ இல்லாதவர்களால், சாதனை நிகழ்த்த முடியாது' என்று தான், உலகம் எண்ணுகிறது.

இந்த எண்ணத்தை, தவிடு பொடியாக்கி, சிகரம் தொட்ட பலர் உண்டு. அதில் ஒருவர் தான், ஹம்ப்ரி டேவி!

ஐரோப்பிய கண்டம், இங்கிலாந்து நாட்டில் உள்ள பென்சான்ஸ் நகரில், 1778ல், பிறந்தவர் ஹம்ப்ரிடேவி. சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால், ஆரம்பக் கல்வியுடன், படிப்பை நிறுத்தி, வேலை தேட துவங்கினார்; டேவிஸ் கில்பர்ட் என்ற மருத்துவரின், ஆராய்ச்சிக் கூடத்தில், உதவியாளர் பணி கிடைத்தது டேவிக்கு!

ரசாயனக் கலவை பற்றி சொல்லிக் கொடுத்தார். மருத்துவர் இல்லாத நேரங்களில், ஆராய்ச்சி கூடத்தில், சோதனைகள் செய்து பார்த்தார், ஹம்ப்ரி டேவி.

'இந்த விஷயம், மருத்துவருக்குத் தெரிந்தால், வேலை போய் விடும்' என்ற பயம் டேவிக்கு. அதனால், மற்றொரு மருத்துவ அறிஞரை சந்தித்து, சோதனைகள் பற்றி, கூறினார். ஆச்சரியப்பட்ட, அந்த மருத்துவ அறிஞர், தன்னுடைய ஆராய்ச்சிக்கு, ஒத்துழைக்கும்படி வற்புறுத்தினார்.

அந்த காலத்தில் அறுவை சிகிச்சையின் போது கொடுக்கும் மயக்க மருந்து, கண்டுபிடிக்கப் படவில்லை. அதனால், வலிக்கு பயந்து, அறுவை சிகிச்சை செய்து கொள்ள மறுத்தனர் நோயாளிகள். இதற்கு முடிவு காண எண்ணினார் டேவி.

'அறுவை சிகிச்சையின் போது, 'நைட்ரஸ்' வாயுவை பயன்படுத்தினால், நோயாளி வலி தெரியாமல், மயங்கிய நிலையிலே இருப்பார்' என, கண்டுபிடித்தார் டேவி.

ஒரு அறுவைச் சிகிச்சையின் போது, இதை நிரூபித்து காட்டினார்; மருத்துவ அறிஞர்கள் பாராட்டி வரவேற்றனர்.

டேவியின் ஆய்வு விவரம், கட்டுரை, பேட்டிகளாக பத்திரிகைகளில் வெளி வந்தன. ராயல் இன்ஸ்டிடியூட்டில் சேர, நண்பர்கள் பரிந்துரைத்தனர். அந்த அமைப்பின் தலைவர், ரம்போர்டு, பத்திரிகை வாயிலாக, டேவி பற்றி அறிந்து அழைத்தார். 22 வயதில், அவரை சந்தித்தார் டேவி.

'இந்த வயதிலேயே இவ்வளவு அறிவாற்றலா' என்று வியந்தார் ரம்போர்டு.

'கவர்ச்சியான தோற்றம் இல்லை; கல்லுாரியில் பட்டமும் பெறவில்லை... இப்படிப் பட்டவரால், மாணவர்களுக்கு, அறிவியல் சொற்பொழிவை எப்படி நிகழ்த்த முடியும்' என்று தயங்கினார்.

'என்னால் முடியும், வாய்ப்பு கொடுங்கள்...' என்று டேவி, உறுதியாக சொன்னதால், வாய்ப்பு கொடுத்தார்.

மாணவர்களிடம், அவர் நிகழ்த்திய சொற்பொழிவைக் கேட்டு, திகைத்தார் ரம்போர்டு. பள்ளிப் படிப்பு மட்டும் போதும்; கல்லுாரி படிப்பு தேவையில்லை; சுய அறிவும், ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமும் இருந்தால், எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தார், டேவி.

ஒரு நாள், அடுப்பு கரியைக் கம்பி போல் தயாரித்து, பேட்டரி கம்பியின் முனையில் இணைத்தார்.

சிறிது நேரத்தில், கம்பிகளுக்கிடையே ஒளி தோன்றியது. இதை, ஆதாரமாக வைத்து தான், 'டார்ச்லைட்' உருவாக்கப்பட்டது. இவர், 1829ல் உயிர் பிரிந்தார்.

குட்டீஸ்... முயற்சி செய்தால் சாதிக்கலாம். அப்போ நீங்க எப்படி?