சிறந்த தோட்டக்காரன்!

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2019

செல்வந்தர் ஒருவருக்கு தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வம்.

தன் மாளிகையைச் சுற்றி, பெரிய பூந்தோட்டம் அமைத்தார்; அதில், வண்ண வண்ணப் பூச்செடிகளை வளர்த்து வந்தார்.

அவருடைய தோட்டக்காரன், கடுமையான உழைப்பாளி; அதனால், அவருடைய பூந்தோட்டம் மிக அழகாக இருந்தது.

அதைப் பார்த்த எல்லாரும், 'இது போன்று, அழகிய பூந்தோட்டம் வேறு எங்கும் இல்லை...' என்று, புகழ்ந்துப் பேசினர். இதைக் கேட்டுப் பெருமையில் பூரித்தார் செல்வந்தர்.

ஆண்டுகள் பல சென்றன. 'ஐயா... எனக்கோ வயதாகி விட்டது; முன் போல, ஓடி, ஆடி என்னால் உழைக்க முடியவில்லை; எனக்கு ஓய்வு தாருங்கள்...' என்றார், தோட்டக்காரர்.

உடனே, 'தோட்டக்காரர் தேவை; நல்ல ஊதியம் தரப்படும்; முன் வேலை செய்த போது அணிந்திருந்த, பழைய உடைகளை எடுத்து வரவும்' என்று தம்பட்டம் அடித்து, விளம்பரம் செய்தார். இதைக் கேட்ட அனைவரும், வியப்படைந்தனர்.

'முன் அணிந்திருந்த உடையை எதற்காக கேட்கிறார்; அதனால் என்ன பயன்...

'அதை வைத்து, எப்படி சிறந்த தோட்டக்காரனைக் கண்டு பிடிக்க முடியும்' என்று, குழம்பினர்.

நல்ல ஊதியம் கிடைக்கும் என்பதால், முன் வேலை பார்த்த போது அணிந்திருந்த உடைகளுடன், பலர் வந்திருந்தனர்.

ஒவ்வொருவரும் வைத்திருந்த உடைகளை வாங்கி பார்த்தார் செல்வந்தர்.

அவர்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்தார்.

புதிதாக வேலைக்குச் சேர்ந்த தோட்டக்காரன், அவர் எதிர்பார்த்தபடியே, நல்ல உழைப்பாளியாக இருந்தான்.

உடையை வைத்து, நன்கு உழைக்கும் தோட்டக்காரனை அவர் எப்படி கண்டுபிடித்தார் என்பதை கண்டுபிடிங்க ஜேம்ஸ் பாண்ட் 007களே...

விடை:

முழுக்கால் சட்டையின் பின்புறம் நைந்திருந்ததால், அதை அணிந்தவன் எப்போதும் அமரும் இயல்பு உடையவன்; சோம்பேறியாகத்தான் இருப்பான். கால் முட்டிப் பகுதியில் நைந்திருந்தால், நன்கு உழைக்கக் கூடியவன் என்று நினைத்தார். அதன்படியே, உழைக்கும் தோட்டக்காரனை கண்டுபிடித்தார்.