சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 384 – எஸ்.கணேஷ்

19 மார்ச் 2019, 03:22 PM

நடிகர்கள்  :   அருள்நிதி, இனியா, ஜான் விஜய், உமா ரியாஸ் கான், மதுசூதன்ராவ், காளி வெங்கட், பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, சுஜாதா சிவகுமார் மற்றும் பலர்.

இசை: தமன், ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசுவாமி, எடிட்டிங் :ராஜா மொஹம்மது, தயாரிப்பு : மோகனா மூவீஸ், திரைக்கதை, இயக்கம் : சாந்தகுமார்.

கல்லூரி மாணவனான கருணாகரன் (அருள்நிதி) தவற்றை கண்டு பொங்கும் தனது சுபாவத்தால் சமூகத்தோடு ஒத்துப்போக முடியாமல் தவிக்கிறான். கோபத்தை கட்டுப்படுத்த முடியாததால் நிறைய பிரச்னைகளை சந்திக்கிறான். அவனது குணாதிசயத்தால் தாயும், சகோதரனும் வருந்த, கருணாகரன் மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறான். உள்ளூர் கல்லூரி ஒன்றில் சேர்ந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான்.  

பெங்களூருவில் இருந்து சென்னை வரும் வழியில் அசிஸ்டன்ட் கமிஷனர் மாரிமுத்து (ஜான் விஜய்), இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் (மதுசூதன்ராவ்), சப் இன்ஸ்பெக்டர் செல்வம் (பாலகிருஷ்ணன்) மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் பெருமாள்சாமி (கிருஷ்ணமூர்த்தி) ஆகியோர் ஒரு விபத்தை பார்க்கிறார்கள்.

விபத்தில் படுகாயமடையும் நபரை மருத்துவமனையில் சேர்க்க நினைத்து நெருங்கும்போது காயமடைந்தவன் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரின்  மகன் என்பதும், பெருமளவு பணம் காரில் இருப்பதும் தெரியவருகிறது. உயிருக்கு போராடுபவனை இவர்களே கொன்றுவிட்டு பணத்தோடு சென்னைக்கு தப்பிக்கிறார்கள். நேர்மையான போலீஸ் அதிகாரியான பழனியம்மாள் (உமா ரியாஸ் கான்) இந்த கேசை விசாரிக்கிறார்.

சென்னையிலும் சக மாணவர்கள் சிலரின் ஒழுங்கீனம், ஈகோ மோதல் என கருணாகரனுக்கு பிரச்னைகள் தொடர, குடும்பத்தினரின் புறக்கணிப்பும் அவனது மனநிலையை பாதிக்கிறது. கொலை, கொள்ளை வழக்கிலிருந்து தப்பிக்க கருணாகரனை பயன்படுத்த நினைக்கின்றனர் சம்பந்தப்பட்ட போலீசார். அவர்களது பொய் வலையிலிருந்து தப்பி உண்மையை வெளிப்படுத்த போராடுகிறான் கருணாகரன்.

போலீஸ் அதிகாரியான பழனியம்மாளும் தன் விசாரணையின் தொடர்ச்சியாக உண்மையை நெருங்குகிறார். குற்றவாளிகள் தங்களுக்கான தண்டனையை பெறுவதோடு நடந்த உண்மையும் வெளியாகிறது. ஆனால், நிரபராதியான கருணாகரனின் நிலையைக் கண்டு நம் மனம் கனத்துப்போகிறது.