கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 171

பதிவு செய்த நாள் : 18 மார்ச் 2019 வில்லனாக வெளுத்துக் கட்டிய நல்லவர் நம்பியார்!

சில வரு­டங்­க­ளுக்கு முன், ஒரு நிறு­வ­னம் நம்­பி­யா­ருக்கு சாத­னை­யா­ளர் விருது கொடுத்­தது. அப்­போது அவ­ரைக் குறித்த ஒரு ஆவண வெளி­யீட்டை நான் உரு­வாக்­கி­னேன். நம்­பி­யா­ரு­டன் அதிக நேரம் செல­வி­டும் வாய்ப்பு எனக்கு அப்­போது கிடைத்­தது. அவர் எவ்­வ­ளவு வித்­தி­யா­ச­மான மனி­தர் என்­பதை நான் புரிந்­து­கொண்­டேன்.

இந்து சம­யத்­தைக் குறித்து எவ்­வ­ளவு ஆழ­மான புரி­தல்­களை அவர் கொண்­டி­ருந்­தார் என்று அப்­போது அறிந்­தேன். அவ­ரு­டன் ஆன்­மி­கம் தொடர்­பாக சில மணி நேரங்­கள் பேசும் பாக்­கி­யம் எனக்­குக் கிடைத்­தது.

சில சம­யம் தமா­ஷா­க­வும் எடக்­கு­ம­டக்­கா­க­வும் பேசிய நம்­பி­யா­ரின் உள்­ளத்­தில் மிக­வும் ஆழ­மாக இருந்த தெய்­வீ­கப் பார்வை எனக்கு விளங்­கி­யது.

அதன் பிறகு, அவர் வசித்து வந்த கோபா­ல­பு­ரம் பகு­தி­யில் அவ­ரு­டைய இல்­லத்­திற்கு அருகே உள்ள கிருஷ்­ணன் கோயி­லில் அமை­தி­யா­கத் தியா­னம் செய்­து­விட்டு வந்­தேன். ஒரு சினிமா நடி­கரை சந்­தித்­து­விட்டு இது­போன்ற உணர்வு எனக்கு வந்­தது நம்­பி­யார் ஒரு­வ­ரி­டம்­தான்.

நான் நம்­பி­யாரை சந்­தித்­த­போது, அவ­ரு­டைய வாழ்க்கை அனு­ப­வங்­களை ஒரு பத்­தி­ரிகை வெளி­யிட்­டுக்­கொண்­டி­ருந்­தது. நடு­நி­லை­யைக் கொண்­டி­ருக்­க­வேண்­டும் என்ற தோற்­றத்­தைக்­கூட பத்­தி­ரி­கை­கள் காற்­றில் பறக்­க­விட்ட காலம் ஆயிற்றே அது. வாஜ்­பா­யின் தலை­மை­யில் செல்­வாக்­குப் பெற்று வந்த பா.ஜ.வை பொத்­தாம்­பொ­து­வாக அந்­தப் பத்­தி­ரிகை எதிர்த்து வந்­தது. ‘‘நீங்­கள் இத்­த­கைய போக்கை மாற்­றிக்­கொள்­ள­வில்லை என்­றால் என்­னு­டைய தொடரை வெளி­யி­ட­வேண்­டாம்,’’ என்று நம்­பி­யார் கூறி­விட்­டார்.  நம்­பி­யா­ரைப் பொறுத்­த­வரை அவர் ஐயப்­பன் கட்­சி­தானே தவிர குறிப்­பட்ட கட்­சி­யின் தீவிர ஆத­ர­வா­ளர் இல்லை. ஆனால், தீவிர எதிர்ப்­பா­ளர்­களை ஆத­ரிப்­ப­வ­ரும் அல்ல. அத­னால் தொடரை நிப்­பாட்டு என்று கூறி­விட்­டார்.

நம்­பி­யார் வித்­தி­யா­ச­மான சினி­மாக்­கா­ரர். அவ­ருக்­குச் சொந்­த­மான ஒரு கட்­ட­டம் வாட­கைக்கு வந்­த­போது, ஒரு கதை,வச­ன­கர்த்தா நம்­பி­யா­ரு­டன் தொடர்பு கொண்­டார். தனக்கு அந்த இடம் வாட­கைக்­குக் கிடைக்­குமா என்று கேட்­டார்.

‘‘என்னை மன்­னித்­து­வி­டுங்­கள். நான் என்­னு­டைய வீட்டை சினி­மாக்­கா­ரர்­க­ளுக்கு வாட­கைக்கு விடு­வ­தில்லை’’ என்­றார் நம்­பி­யார்!

இந்த விஷ­யம் குறித்து என்­னு­டைய ஒரே வருத்­தம் என்­ன­வென்­றால் நம்­பி­யாரை போலவே அந்­தக் கதை, வச­ன­கர்த்­தா­வும் சினி­மாத்­த­னங்­கள் கிஞ்­சித்­தும் இல்­லாத மனி­தர். ஆனால், தன்­னு­டைய கொள்­கையை விதி­வி­லக்­கான நபர்­க­ளுக்­காக நம்­பி­யார் மாற்­றிக்­கொள்ள தயா­ராக இல்லை.

தந்­தையை சிறு வய­தி­லேயே இழந்த நம்­பி­யார், ஊட்­டி­யில் ஒரு சாயா கடை நடத்­தி­வந்த மைத்­து­ன­ரின் வீட்­டில் இருந்­த­படி பள்­ளிக்­குச் சென்று வந்­தார்.

டீக்­கடை வியா­பா­ரம் கொஞ்­சம் கொஞ்­ச­மாக சரி­வைக் கண்­டது. எட்­டா­வ­துக்கு மேல் நம்­பி­யா­ரால் படிக்க முடி­யாத சூழ்­நிலை உரு­வா­கி­விட்­டது.

ஒரு நாள் நம்­பி­யார் ஊட்டி வீதி­க­ளில் நடந்­து­சென்று கொண்­டி­ருந்­த­போது ஒரு வீட்­டின் முன்னே ஒரு காட்­சி­யைக் கண்­டார். பையன்­கள் வரி­சை­யாக நின்­ற­படி சூரிய நமஸ்­கா­ரம் செய்­து­கொண்­டி­ருந்­தார்­கள். அவர்­கள் காட்­டிய பக்­தி­யும் ஒழுங்­கும் நம்­பி­யாரை மிக­வும் கவர்ந்­தன.

அந்­தப் பையன்­கள் ‘நவாப்’ ராஜ­மா­ணிக்­கம் நாட­கக்­கு­ழுவை சேர்ந்­த­வர்­கள் என்று அவர் பிறகு அறிந்­தார். நவாப்­பின் நாட­கக்­கு­ழு­வில் சேர்ந்து பல வரு­டங்­கள் எதிர்­நீச்­சல் அடித்து, பல வீழ்ச்­சி­க­ளை­யெல்­லாம் தாண்டி முன்­னுக்கு வந்­தார் நம்­பி­யார். நாரா­ய­ணன் (நம்­பி­யார்) என்று அழைக்­கப்­பட்­ட­வ­ரின் பெயரை எம்.என். நம்­பி­யார் என்று  மாற்றி வைத்­த­வர் ‘நவாப்’ ராஜ­மா­ணிக்­கம்­தான்.

சின்ன வய­தில் நம்­பி­யார் வன்­மு­றை­யில் ஈடு­ப­டக்­கூ­டி­ய­வ­ராக இருந்­தா­ராம். ‘‘ஒரு முறை என்­னு­டைய அண்­ண­னு­டன் ஏதோ சண்டை வந்­த­போது, பேனா கத்­தி­யால் அவனை கீறி­விட்­டேன். இப்­ப­டிப்­பட்ட நான், ‘நவாப்’ ராஜ­மா­ணிக்­கம்  பிள்ளை நடத்­திய கம்­பெ­னி­யில்­தான் நல்ல குணங்­க­ளை­யெல்­லாம் கற்று சாந்­த­மான நப­ராக மாறி­னேன்,’’ என்­பார் நம்­பி­யார்.

பள்ளி அல்­லது கல்­லூ­ரிப்­ப­டிப்பு என்­றா­லும் சரி, ஒரு நிறு­வ­னத்­தில் ஆற்­றும் பணி­யென்­றா­லும் சரி, ஒரு­வர் பெறும் அனு­ப­வங்­கள் அவரை ஆக்­கப்­பூர்­வ­மா­ன­வ­ராக உரு­வாக்­க­வேண்­டும்...இல்­லை­யென்­றால் எல்­லாம் வேஸ்ட் என்­ப­து­தான் நம்­பி­யா­ரின் அபிப்­ரா­யம்.

‘நவாப்’ ராஜ­மா­ணிக்­கத்­தின் குழு போட்ட ‘ராம­தாஸ்’ நாட­கத்தை, கோவை­யைச் சேர்ந்த பர­மேஸ்­வர் சவுண்ட் பிக்­சர்ஸ் மும்­பை­யில் பட­மாக்­கி­யது. படத்­தின் இயக்­கு­நர், முரு­க­தாசா. நவாப்­பின் அமைச்­சர் மாதண்­ணா­வாக சுப்­பி­ர­ம­ணி­யம் என்­கி­ற­வர் நாட­கத்­தில் நடித்­துக் கொண்­டி­ருந்­தார். ஆனால் முரு­க­தா­சா­விற்கு அவ­ரு­டைய தோற்­றம் திருப்தி அளிக்­க­வில்லை.  மும்பை வந்­தி­ருந்த மற்ற நடி­கர்­களை வரி­சை­யில் நிறுத்­திப் பார்த்­த­போது, நம்­பி­யாரை அவர் தேர்ந்­தெ­டுத்­தார். மூன்று மாதங்­கள்  மும்­பை­யில் இருந்து நடித்த படத்­திற்­காக நம்­பி­யா­ருக்கு கொடுக்­கப்­பட்ட சம்­ப­ளம், 40 ரூபாய். ‘பக்த ராம­தாஸ்’ படத்­தில் 1935ல் அறி­மு­க­மான நம்­பி­யார், இந்த விஷ­யத்­தில் எம்.ஜி.ஆரை­வி­டக்­கூட ஒரு வயது சீனி­யர். எம்.ஜி.ஆரின் முதல் படம், ‘சதி லீலா­வதி’ (1936).

ஆண்­டு­கள் செல்­லச் செல்ல, ‘நவாப்’ ராஜ­மா­ணிக்­கம் கம்­பெ­னி­யில் தனக்­குக் கொடுக்­கப்­பட்ட குறை­வான சம்­ப­ள­மும் விதிக்­கப்­பட்ட கூடு­தல் நிபந்­த­னை­க­ளும் நம்­பி­யா­ருக்­குப் பிடிக்­கா­மல் போயின. ஆகவே, அந்­தக் குழு­வி­லி­ருந்து வெளியே வந்­து­விட்­டார்.

இரண்­டாம் உல­கப்­போர் நடந்­து­கொண்­டி­ருந்த கால­கட்­டம் அது. ராணு­வத்­தில் சேர்ந்­தால் மாதம் 75 ரூபாய் சம்­ப­ளம், மோட்­டார் ஓட்­ட­வும் கற்­றுக்­கொ­டுப்­பார்­கள் என்று அறிந்­த­பின், ராணுவ வீர­ராக ஆகி­வி­டு­வது என்று தீர்­மா­னித்­து­விட்­டார் நம்­பி­யார். ஆனால் ராணு­வத்­தில் சேர்ந்­தால், மாமிச உணவு சாப்­பிட்­டாக வேண்­டும் என்று கேள்வி பட்­ட­தும், ராணு­வத்­தில் சேரும் முயற்­சியை  நம்­பி­யார் விட்­டு­விட்­டார்.

நவா­பின் நாட­கக் கம்­பெ­னி­யில் மானே­ஜ­ரா­க­யி­ருந்து வில­கிய சக்தி கிருஷ்­ண­சாமி, தன்­னுடை சக்தி நாடக சபாவை ஆரம்­பித்­த­போது, எஸ்.டி. சுந்­த­ரம் எழு­திய ‘கவி­யின் கனவு’ நாட­கத்­தில் முக்­கி­ய­மான வேடத்­தில் நடிக்க நம்­பி­யாரை அழைத்­தார். அமோ­க­மான வர­வேற்பை பெற்ற இந்த நாட­கத்­தில், ராஜ­கு­ரு­வாக நடித்த நம்­பி­யார், வில்­லன் நடிப்­பால் ஒரு உச்­சத்­தைத் தொட்­டார். ஒரு சில வரு­டங்­க­ளுக்­குப் பிறகு நம்­பி­யார் மாடர்ன் தியேட்­டர்­சின் ‘மந்­தி­ரி­கு­மா­ரி’­­யில் நடித்­தது, நாடக ராஜ­கு­ரு­வின் ஒரு எதி­ரொ­லி­தான்.

நிஜ­வாழ்க்­கை­யில் சாந்­த­மா­க­வும் சாத்­வீ­க­மா­க­வும் விளங்­கிய நம்­பி­யா­ரால், மேடை­யி­லும் திரை­யி­லும்  குரூ­ர­மான பாத்­தி­ரங்­க­ளில் மிகச் சிறப்­பாக நடிக்க முடி­கி­றது என்­றால், அது­தான் நடிப்பு.....இப்­ப­டித் தன்­னு­டைய இயல்­புக்கு முற்­றி­லும் மாறு­பட்ட பாத்­தி­ரங்­களை சிறந்த முறை­யில் நடிப்­ப­வர்­கள்­தான் உன்­ன­த­மான நடி­கர்­கள் என்­றார், அந்­நா­ளில் நம்­பி­யா­ரைக் குறித்து விமர்­சித்த ‘குண்­டூசி’ கோபால்.

எம்.ஜி.ஆரைப் பற்றி ஒரு கதை உண்டு. அது நிஜ­மா­க­வும் இருக்­க­லாம். ஒரு மூதாட்டி எம்.ஜி.ஆரி­டம் சொன்­னா­ராம், ‘‘ராசா, நீ யாரை வேணும்­னா­லும் நம்பு...ஆனா அந்த நம்­பி­யார்­கிட்ட மட்­டும் ஜாக்­கி­ர­தை­யாக இரு’’. திரை­யில் நம்­பி­யார் காட்­டிய நடிப்­பின் நம்­ப­கத்­தன்மை இந்த அள­வுக்கு இருந்­தி­ருக்­கி­றது.

ஹாஸ்ய வேடங்­கள், ஹீரோ போன்ற வேடங்­கள், வில்­லன் வேடங்­கள், குணச்­சித்­திர வேடங்­கள் என்று பல்­வேறு வேடங்­க­ளில் நடித்­தார் நம்­பி­யார். தன்­னு­டைய நடிப்­புக்­க­லைக்கு வரம்­பு­கள் இல்லை என்று காண்­பித்­தார்.  ஆனால்  எம்.ஜி.ஆர். படங்­க­ளில் வில்­ல­னாக நடித்­துப் பல­ரு­டைய கவ­னத்­தைக் கவர்ந்­தார்.

ஒரு ெஜன்­மத்­தைக் கடந்து காத­லர்­கள் ‘நெஞ்­சம் மறப்­ப­தில்­லை’­­யில் இணை­யும் போது, அடுத்த ெஜன்­மம் வரை உயி­ரோடு இருந்து,  முதிய கோலத்­தில் காத­லர்­களை மீண்­டும் தாக்க வரும் மகா வில்­ல­னாக நம்­பி­யார் நடித்­தது அவ­ரையே கூட அதி­கம் கவர்ந்­தது. அந்த வேஷத்­தில் அவர் நடித்த தோற்­றத்தை பெரிய பட­மாக்கி வீட்­டில் மாட்டி வைத்­தி­ருந்­தார்.

தெளிந்த மன­மும், சிறந்த பழக்­க­வ­ழக்­கங்­க­ளும், ஒழுக்­க­மும் கொண்­டி­ருந்த நம்­பி­யார், உண­வு­மு­றை­யில் மிகுந்த கட்­டுப்­பா­டு­க­ளு­டன் வாழ்ந்­த­வர்.

பன்­னி­ரண்டு வய­தில் பால் சாப்­பி­டு­வதை விட்­டு­விட்­டார். பால் பசு­வின் ரத்­தம் என்­பது

அவ­ரு­டைய அபிப்­ரா­ய­மாக இருந்­தது. ஒரு முறை நாட­கக் குழு­வி­ன­ரோடு திருச்­சி­யி­லி­ருந்து

திரு­நெல்­வேலி பய­ணம் சென்­று­கொண்­டி­ருந்­தார். அதற்கு முந்­தைய நாள் ஊட்­டி­யி­லி­ருந்து பஸ்­சி­லேயே திருச்சி வந்­தி­ருந்­தார் . திரு­நெல்­வேலி பய­ணத்­தின் போது ரயி­லின் மேல் ெபர்த்­தில் படுத்­துத் தூங்­கி­விட்­டார். மணி­யாச்சி ஜங்­ஷ­னில் தாகம் எழுப்­பி­யது. கீழே இறங்­கிப் பார்த்­தால் பையன்­கள் எல்­லா­ரும் மோர் குடித்­துக்­கொண்­டி­ருந்­தார்­கள். வாத்­தி­யார் பர­மா­னந்த சாமி சொன்­னார்...‘ஏண்டா மோரு சாப்­பி­டேண்டா...தாகம் எடுக்­கு­துல்ல’...

நம்­பி­யார் தயங்­கு­வ­தைப் பார்த்து,  ‘‘நீ இழுத்து விடுற மூச்­சுல எத்­தனை பூச்சி சாகுது தெரி­யுமா உனக்கு...? நீ எத்­தனை பூச்சி சாப்­பி­டற தெரி­யுமா ... அந்­தப் பூச்­சியை சாப்­பி­ட­லாம், மோரு சாப்­பி­டக்­கூ­டாதா...? போய் மோர் சாப்­பி­டுறா... போடா’’.

பர­மா­னந்த சாமி அப்­போது சொல்­வ­தைக் கேட்­டாரே தவிர, தான் சரி என்று நினைத்த வழி­யில் விடா­மல் செல்­லக்­கூ­டி­ய­வர் நம்­பி­யார். இல்­லை­யென்­றால், தன்னை ஒரு ‘அக்ளி வெஜி­டே­ரி­யன்’ (உண­வில் தீவிர சைவர்) என்று சொல்­லிக்­கொள்­ளும் நிலைக்கு வந­தி­ருப்­பாரா?

மிள­காய், புளி, சர்க்­கரை ஆகி­ய­வற்றை தள்­ளி­விட்டு மிளகு, எலு­மிச்சை போன்­ற­வற்றை உட்­கொள்­வது நம்­பி­யா­ரின் ஆரோக்­கி­யத்­திற்கு ஒரு முக்­கிய கார­ணம்.

அவர் தலை­மு­டிக்கு ‘டை’ அடிப்­ப­தில்லை. ஆனால், கடைசி வரை­யில் அது கறுப்­பா­கவே இருந்­தது. ‘டை’யைக் குடிக்­கி­றேன் என்­பார்! (அதா­வது அவர் உண்­ணும் இயற்கை உண­வு­கள்,  நரை­யைத் தவர்க்­கின்­றன).

அவ­ரு­டைய இந்­தக் ‘குடி’ப்­ப­ழக்­கத்­திற்கு , வாழ்க்கை முழு­தும் அனு­ச­ர­ணை­யாக இருந்­த­வர், அவ­ரு­டைய மனைவி ருக்­மிணி.   அவரை மாதா, பிதா, குரு, தெய்­வத்­து­டன் மரி­யா­தைக்­கு­ரிய ஸ்தானத்­தில் வைத்­தி­ருந்­தார் நம்­பி­யார்.  

மற்­ற­படி, குரு­சாமி நம்­பி­யா­ருக்கு ஐயப்­பன்­தான் எல்­லாம். ‘‘அவன் ரொம்ப ஹை அப்­பன்,  மாலை போட்டா எல்­லா­ரும் அவங்க அவங்­களே  ஐயப்­பன் ஆயி­டு­றாங்க. இந்த மாதிரி நமக்கு வெறெந்த சாமி­யும் செஞ்சு தரலை,’’ என்­பார். இப்­ப­டிப்­பட்ட குரு­சாமி நம்­பி­யா­ருக்கு இப்­போது  நூறு வயது. ஐயா, நீரின்­னும் பல நூற்­றாண்­டு­கள் எங்­கள் நினை­வு­க­ளில் இருந்து, எங்­க­ளுக்கு வழி காட்­டுங்­கள்..

                                        (தொட­ரும்)