முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சந்திப்பு

பதிவு செய்த நாள் : 16 மார்ச் 2019 10:48

சென்னை,           

அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இன்னும் முடிவடையாத நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார்.

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் பிற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடும் முடிவடைந்துள்ளது. இதையடுத்து எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தி, மலர்ச்செண்டு கொடுத்து முதல்வர் நலம் விசாரித்தார். உடல்நலம் குறித்து விசாரித்த முதல்வருக்கு விஜயகாந்த் பொன்னாடை அணிவித்தார். பின்னர் இருவரும் தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினர். இந்த சந்திப்பின்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.