ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டி: வைகோ அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 16 மார்ச் 2019 09:48

சென்னை,          

மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தேர்தலுக்கான திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதுதவிர ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாராளுமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, கழகத்தின் பொருளாளர் அ. கணேசமூர்த்தி போட்டியிடுவார் என வைகோ அறிவித்தார்.

கணேசமூர்த்தி வரும் மார்ச் 19ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய தேசிய முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்றைய தினமே அறிவிக்கப்பட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.