50 சதவீத வாக்களிப்பு உறுதிச் சீட்டுகளை எண்ணிய பிறகே தேர்தல் முடிவை அறிவிக்க கோரி எதிர்க்கட்சிகள் மனு

பதிவு செய்த நாள் : 15 மார்ச் 2019 20:53

புதுடில்லி, 

  மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவை உறுதி செய்யும் விவிபாட் சீட்டுகளை ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீதமாவது எண்ணிய பிறகே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என கோரி எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் மீண்டும் வாக்குச்சீட்டு நடைமுறைக்கு செல்ல முடியாது என்று தேர்தல் ஆணையம் உறுதியாக தெரிவித்துவிட்டது.

அதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க வாக்களிக்கும் சின்னத்தை உறுதிப்படுத்தும் விவிபாட் இயந்திரங்கள் வரும் மக்களவையில் அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இருப்பினும் மக்களவை தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் விவிபாட் சீட்டுகளை சரிபார்த்த பின்பே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

இது தொடர்பாக ஆந்திரபிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 21 எதிர்க்கட்சிகள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான  அமர்வு இந்த மனுவை இன்று பரிசீலித்தது.

இறுதியில் இந்த மனு மீதான விசாரணை மார்ச் 25ம் தேதி நடைபெறும். அதற்குள் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.