பருவநிலை மாற்றத்திற்கு தீர்வு காண கோரி டில்லி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

பதிவு செய்த நாள் : 15 மார்ச் 2019 20:44

புதுடில்லி,

   பருவநிலை மாற்றத்திற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி டில்லியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுவீடன் நாட்டை சேர்ந்த கிரெட்டா தன்பெர்க் என்ற சிறுமி கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வகுப்புகளுக்கு செல்லாமல் பருவநிலை மாற்றத்தை தடுக்க கோரி தனியாளாக போராட துவங்கினார்.

அந்த சிறுமியின் போராட்டத்திற்கு உலகளவில் ஆதரவு பெருகியது. அதை தொடர்ந்து பல நாடுகளில் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து பருவநிலை மாற்றத்திற்கு தீர்வு காண கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி இன்று உலகளவில் 1,300 நகரங்களை சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அந்த வகையில் இந்தியாவில் அதிக காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ள டில்லியில் மார்ச் 15ம் தேதியான இன்று 500க்கும் அதிகமான 10 முதல் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எங்களால் சுவாசிக்க முடியவில்லை. எங்களுக்கு சுத்தமான காற்று வேண்டும் போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆரவல்லி மலைத்தொடரை சுரங்க பணிகளுக்காகவும் ரியல் எஸ்டேட் துறைக்காகவும் பயன்படுத்த பஞ்சாப் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவும் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட 13 வயது ஆர்யா குப்தா என்ற மாணவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்;  

‘‘கடந்த ஆண்டு காற்று மாசை குறைக்க திட்டம் ஒன்றை செயல்படுத்த போவதாக அரசியல்வாதிகள் தெரிவித்தனர். ஆனால் இன்று வரை காற்று மாசு குறையவில்லை. நாங்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டுமா?’’

‘‘மாசு அதிமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. இதன் மூலம் காற்று மாசை குறைக்க அரசாங்கம் போட்ட திட்டம் வேலை செய்யவில்லை என தெரிகிறது’’ என்று ஆர்யா குப்தா தெரிவித்தார்.

மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு உலகம் முழுவதும் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

கிரீன்பீஸ் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் மாணவர்களின் இந்த போராட்டத்தை பாராட்டியுள்ளது. கிரீன்பீஸ் அமைப்பின் பிரச்சாரகர் சுனில் தாஹியா இது குறித்து  செய்தியாளர்களிடம் பேசுகையில்;

‘‘இந்தியா உட்பட உலகளவில் ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகள் பருவநிலை மாற்றத்திற்கு தீர்வு காண போராடுவதை கண்டு ஒருபக்கம் மகிழ்ச்சியும் மற்றொரு புறம் சோகமும் ஏற்படுகிறது. இளைய தலைமுறையினரின் கோரிக்கைகளுக்கு அரசியல்வாதிகள் செவி சாய்ப்பார்கள் என நம்புகிறேன்’’

‘‘குழந்தைகளின் போராட்டத்தை கண்டு இனியாவது மாசு ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்றவற்றில் மக்கள் பணத்தை முதலீடு செய்து நேரத்தை வீணடிப்பதை நிறுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன்’’ என்று சுனில் தாஹியா தெரிவித்தார்.