வாக்குப்பதிவு, விவிபிஏடி இயந்திரங்களை எடுத்துச்செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி: தேர்தல் ஆணையம் தகவல்

பதிவு செய்த நாள் : 15 மார்ச் 2019 20:17

புதுடில்லி

   மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபிஏடி இயந்திரங்களை எடுத்துசெல்ல பயன்படுத்தும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. அந்த தேர்தலின்போது, பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், விவிபிஏடி இயந்திரங்களும் ஹோட்டல்கள், சாலைகள், எம்.எல்.ஏ வீடு என பல இடங்களில் கேட்பாரின்றி கிடந்தன.

இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபிஏடி இயந்திரங்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இயந்திரங்கள் அனைத்தையும் கவனமாக கண்காணிக்குமாறு அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

வரும் மக்களவை தேர்தலுக்காகம் நாட்டில் மொத்தம் 10.35 லட்சம் வாக்குப்பதிவு மையங்களை தேர்தல் ஆணையம் அமைக்கவுள்ளது. இதில் 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபிஏடி இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.