மசூத் அசார் தீர்மானத்தை சீனா தடுத்தால் ராகுல் காந்திக்கு ஏன் கொண்டாட்டம்: ரவிசங்கர் பிரசாத் கேள்வி

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2019 21:01

புதுடில்லி,

மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்திற்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டால் ராகுல் காந்திக்கு ஏன் கொண்டாட்டமாக உள்ளது? என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் ஐநாவின் தீர்மானத்திற்கு சீனா 4வது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இதற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்தியர்கள் பலர் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி, வலிமையில்லாத மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை கண்டு அஞ்சுகிறார். சீனாவுக்கு எதிராக மோடி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை என்று ராகுல் டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

‘‘ஒட்டுமொத்த இந்தியாவே சீனாவின் முடிவால் கொந்தளித்துள்ள நிலையில் ராகுல் காந்திக்கு மட்டும் ஏன் இது கொண்டாட்டமாக உள்ளது?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசியதன் விவரம் :

மசூத் அசாருக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முதல்முறையாக தீர்மானம் தாக்கலான போது அதற்கு மூன்று நிரந்தர உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. மற்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். இது மோடியின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி. பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து நிற்கும் என்பது இதன் மூலம் உறுதியானது.

மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்திற்கு சீனா முட்டுக்கட்டை போடுவது இது 4வது முறையாகும். முதல்முறையாக 2009ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு ஆட்சியில் இருந்தபோது ஐநாவில் தாக்கலான தீர்மானத்தை சீனா விட்டோ அதிகாரம் மூலம் தள்ளுபடி செய்தது. அப்போது ராகுல் காந்தி அதை பற்றி எந்த கருத்தும் கூறாதது ஏன்?

பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி பாகிஸ்தானில் தலைப்பு செய்தியாக வெளியாகலாம். ஜெய்ஷ் –இ-முகமது அமைப்பின் அலுவலகத்தில் அதை மகிழ்ச்சியாக பகிர்ந்திருப்பார்கள். ஒருவேளை இது ராகுலுக்கு மகிழ்ச்சியை தரலாம்.

உங்களுக்கு சீனாவுடன் நல்ல உறவிருந்தால் ஐநாவின் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும்படி அவர்களை வலியுறுத்தலாமே? ஒருவேளை சீனாவின் இந்த முடிவை கண்டு காங்கிரஸும் ராகுல் காந்தியும் மகிழ்ச்சி அடைகிறார்களோ என்று பாஜக வருந்துகிறது.

சீனாவுடனான உறவை சீர் செய்ய பிரதமர் மோடி தீவிர முயற்சி எடுத்தார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.