காங்கிரஸ் தலைவர் டாம் வடக்கன் பாஜகவில் இணைந்தார்

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2019 18:28

புதுடில்லி,

   காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும் சோனியா காந்தியின் முன்னாள் உதவியாளருமான டாம் வடக்கன் இன்று பாஜகவில் இணைந்தார்.

மக்களவை தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பாஜகவில் சேர்ந்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் டாம் வடக்கன் இன்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதன்பின் பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய டாம் வடக்கன் கூறுகையில்;
இந்திய மண்ணில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் மற்றும் இந்திய விமானப்படை பாலகோட்டில் நடத்திய தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி காட்டிய

எதிர்வினை என்னை கவலையில் ஆழ்த்தியது. தேச நலனுக்கு எதிராக ஒரு கட்சி செயல்படும் போது அதை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை. எனவே கனத்த இதயத்துடன் காங்கிரஸை விட்டு வெளியேறினேன்.

காங்கிரஸில் குடும்ப அரசியல் வேரூன்றி விட்டது. நான் அந்த கட்சிக்காக இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன். ஆனால் என்னை போன்றவர்களை பயன்படுத்தி பின் தூக்கியெறியும் மனோபாவத்துடன் காங்கிரஸ் செயல்படுகிறது என்று டாம் வடக்கன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களில் தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் டாம் வடக்கன் கூறினார்.

வரும் மக்களவை தேர்தலில் டாம் வடக்கன் பாஜக சார்பில் கேரளாவில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.