கர்தார்பூர் தாழ்வாரம் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் சுமூக பேச்சு, எப்ரல் 2ல் மீண்டும் பேச முடிவு

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2019 18:13

அட்டாரி/புதுடில்லி,

   கர்தார்பூர் தாழ்வாரம் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் அதிகாரிகள் இடையே நடைபெற்ற இன்று பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. வரும் மார்ச் 19ம் தேதி இருநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களும் எல்லையில் சந்திப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 2ம் தேதி நடத்தப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தியா – பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தலங்களை இணைக்கும் கர்தார்பூர் தாழ்வாரத்தை அமைக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரு நாட்டு அரசுகளும் முடிவெடுத்தன.

அதை தொடர்ந்து கர்தார்பூர் தாழ்வாரம் பணிகள் குறித்து பேச இன்று பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய எல்லைக்கு வந்தனர். அட்டாரி-வாகா எல்லையில் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்கு பின் இரு நாட்டு அணிகளின் சார்பில் செய்தியாளர்களுக்கு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும் கர்தார்பூர் தாழ்வாரத்திற்கான பணிகளை விரைந்து முடிப்பது என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.  

தாழ்வாரத்திற்கான விதிமுறைகள், யாத்திரிகர்களின் வசதிகள் தொடர்பான வரைவு ஒப்பந்தம் ஆகியவற்றை குறித்தும் இந்த முதல் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.

அடுத்த கட்ட பேச்சு

அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 2ம் தேதி நடத்தப்படும். அதற்கு முன்னதாக எல்லையில் இருநாட்டு தொழில்நுட்ப நிபுணர்கள் மார்ச் 19ம் தேதி சந்தித்து தாழ்வார பணிகள் குறித்து விவாதிப்பார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா தரப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூட்டு செயலாளர் எஸ்.சி.எல்.தாஸ் தலைமையிலான குழு கலந்து கொண்டது.

பாகிஸ்தான் தரப்பில் வெளியுறவு துறை டைரக்டர் ஜெனரல் முகமது பைசல் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது.

இந்தியா வலியுறுத்தல் 

பேச்சுவார்த்தையின் போது கர்தார்பூர் தாழ்வாரம் தொடர்பாக இந்தியா தரப்பில் சில கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூட்டு செயலாளர் எஸ்.சி.எல்.தாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கர்தார்பூர் தாழ்வாரம் வழியே நாள் ஒன்றுக்கு குறைந்தப்பட்சம் 5000 யாத்திரிகர்களாவது விசா இல்லாமல் அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களிடம் வேறு ஆவணங்கள் கேட்க கூடாது. புதிய விதிமுறைகளை திணிக்கக் கூடாது.

வாரத்தில் 7 நாட்களும் தாழ்வாரம் வழியே யாத்திரிகர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காலணிகள் இல்லாமல் பயணம் செய்ய விரும்பும் யாத்திரீகர்களை அவ்வாறே செல்ல பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என எஸ்.சி.எல். தாஸ் கூறினார்.