இந்தியாவில் 6 அணுமின்சார நிலையங்கள் அமைக்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2019 14:20

வாஷிங்டன்

இந்திய இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலேவும் அமெரிக்க அரசின் ஆயுத கட்டுப்பாட்டு துறை இணைச் செயலாளர் ஆன்ரி தாம்சனும் இந்தியாவில் 6 அணுமின்சார நிலையங்களை அமெரிக்கா அமைக்க வகை செய்யும் ஒப்பந்தம் ஒன்றில் நேற்று கையெழுத்திட்டனர்

இந்திய அமெரிக்க ஒன்பதாவது சுற்று பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் வாஷிங்டன் நகரில் நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தலைமையில் இந்திய அதிகாரிகள் குழுவும் அமெரிக்க ஆயுத கட்டுப்பாட்டு குழு இணைச் செயலாளர் ஆன்ரி தாம்சன் தலைமையில் அமெரிக்க அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் இறுதியில் நேற்று ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அந்த ஒப்பந்தப்படி இந்தியாவில் ஆறு அணு மின்சார நிலையங்களை அமெரிக்கா அமைக்கும். இரு நாடுகளின் உயர் அதிகாரிகளும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கடந்த 2008ம் ஆண்டில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அணுசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு வகை செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து அணுசக்தி துறையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வகை செய்யும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்தியாவுக்கு சிறப்பு அனுமதியை அணுப்பொருள் விநியோக நாடுகளின் குழு வழங்கியது.  

அதைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, பிரிட்டன், ஜப்பான், வியட்நாம், பங்களாதேஷ், கஜகஸ்தான், தெற்கு கொரியா ஆகிய நாடுகளுடன் இந்தியா அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின்போது அணுக்கருவிகள் வினியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இடம் பெறுவதற்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் சீனா இந்தியா சேருவதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.