தொடரை வென்றது ஆஸி.,:மண்ணின் மைந்தர்கள் சொதப்பல்

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2019 01:48


புதுடில்லி:

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் பவுலிங்கில் அசத்திய ஆஸி., 35 ரன்னில் வெற்றி பெற்றதோடு 3&2 என தொடரை கைப்பற்றி அசத்தியது. சொந்த மண்ணில் விளையாடிய கேப்டன் கோஹ்லி, தவான், ரிஷாப் பன்ட் ஆகியோர் பேட்டிங்கில் ஏமாற்றினர்.

ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இந்த நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று நடந்தது. இதில், வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

‘டாஸ்’ வென்ற ஆஸி., கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். இரு அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆஸி., அணியில் மோசமான பார்ம் காரணமாக ஷான் மார்ஷ், பெஹ்ரன்டர்ப் நீக்கப்பட்டு ஸ்டாய்னிஸ், நாதன் லியான் சேர்க்கப்பட்டனர். இந்திய தரப்பில் சகால், ராகுல் இடத்தில் ஜடேஜா, முகமது ஷமி வாய்ப்பு பெற்றனர்.

ஆஸி., அணிக்கு கவாஜா, கேப்டன் ஆரோன் பின்ச் இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். இருவரும் இந்திய பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டு ரன் எடுத்து வந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 76 ரன் (14.3 ஓவர்) சேர்த்த நிலையில், ஜடேஜா பந்தில் பின்ச் (28) போல்டானார். பின் கவாஜாவுடன் ஹேண்ட்ஸ்கோம்ப் இணைந்தார். இருவரும் இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். பந்து நாலா புறமும் பறக்க ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. கவாஜா 48 பந்தில் அரைசதம் அடித்தார். ஆஸி., 19.1 ஓவரில் 100 ரன் எடுத்தது. தொடர்ந்து அசத்திய இவர் 102 பந்தில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். இந்த தொடரில் கவாஜா பதிவு செய்யும் ரண்டாவது சதம் இதுவாகும்.

இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்த நிலையில், புவனேஷ்வர் குமார் வேகத்தில் கவாஜ சரிந்தார். இவர் 100 ரன் (106 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். மேக்ஸவெல் (1) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதே நேரத்தில் எழுச்சியுடன் விளையாடிய ஹேண்ட்ஸ்கோம்ப் 55 பந்தில் அரைசதம் அடித்தார். இவர் 52 ரன் (60 பந்து, 4 பவுண்டரி) எடுத்து முகமது ஷமி பந்தில் பெவிலியன் திரும்பினார். முக்கிய கட்டத்தில் ஸ்டாய்னிஸ் (20), டர்னர் (20), அலெக்ஸ் கேர் (3) , கம்மின்ஸ் (15)ஏமாற்றினர். கடைசியில் ரிச்சர்ட்சன் 21 பந்தில் 29 ரன் எடுத்து ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். முடிவில் ஆஸி., 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன் எடுத்தது. நாதன் லியான் (1) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 3, முகமது ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித், தவான் இருவரும் துவக்கம் தந்தனர். அட்டகாசமாக இரண்டு பவுண்டரி டித்த தவான் 12 ரன் எடுத்த நிலையில், கம்மின்ஸ் வீசிய ஆப் ஸ்டெம்பிற்கு வெளியே சென்ற பந்தை துரத்தி அடித்து விக்கெட்கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதே போல் ஸ்டாய்னிஸ் பந்தில் கோஹ்லி (20) வெளியேறினார். நாதன் லியான் சுழலில் இளம் வீரர் ரிஷாப் பன்ட் (16) சிக்கினார். இந்த மூவரும் டில்லியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது சொதப்பலான ஆட்டம் ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது. ஜாம்பா பந்தில் சிக்சர் அடித்த விஜய் ஷங்கர் (16) டுத்த பந்தை தூகக்கி அடித்து ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் போராடி வந்த ரோகித் 73 பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 56 ரன் (89 பந்து, 4 பவுண்டரி) எடுத்த நிலையில், ஜாம்பா சுழலில் சிக்கினார். அடுத்து வந்த ஜடேஜா ‘டக்&அவுட்’ ஆக இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன் எடுத்து திணறியது. இந்த நிலையில், ஜாதவுடன் புவனேஷ்வர் குமார் இணைந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 43வது ஓவரில் இந்தியா 200 ரன் கடந்தது.  6 ஓவரில் 69 ரன் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் சிறப்பான முறையில் விளையாடி வந்த புவனேஷ்வர் குமார் (46), கேதர் ஜாதவ் (44) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியாவின் தோல்வி உறுதியானது. முகமது ஷமி (3)  சோபிக்கவில்லை.

ஸ்டாய்னிஸ் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் குல்தீப் யாதவ் (9) கிளீன் போல்டாக இந்திய அணி 50 ஓவரில் 237 ரன்னுக்கு ஆட்டமிழந்து பரிதாபமாக தோற்றது. பும்ரா (1) வுட்டாகாமல் இருந்தார். ஆஸி., தரப்பில் ஜாம்பா 3, கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஸ்டாய்னிஸ் தலா 2 விககெட் சாய்த்தனர். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாய்கன் விருதை ஆஸி., வீரர் கவாஜா வென்றார்.

இந்த தொடரில் முதலிரண்டு போட்டியில் தோற்ற ஆஸி., பின் எழுச்சி பெற்று தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றிததய பதிவு செய்து தொடரை கைப்பற்றியது. முன்னதாக ஆஸி., ‘டுவென்டி&20’ தொடரை 2&0 என முழுமையாக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பைக்கு முன் சொந்த் மண்ணில் இந்தியாவின் தோல்வி ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.